
காலையில் ஒரு ஓரமாய் கிடந்த அந்த சைக்கிளைப் பார்த்ததும் கனகவல்லி கத்த ஆரம்பித்தாள் கணவனிடம்.
ஏங்க.. இந்த சனியன எப்பத்தான் தொலைக்கப்போறீங்க? இடத்த அடச்சிக்கிட்டிருக்கு..
ஏய்.. அதை இனிமே பயன்படுத்த முடியாது. நிறைய செலவு வைக்கும். செஞ்சா ஓட்டலாம்.
பேசாம எடைக்குப் போடுங்க..
போடி இவளே.. இது ராசியான சைக்கிள்..
இருக்கட்டும்.. இடத்தை அடச்சிக்கிட்டு இருக்கு.. கூட்டப் பெருக்கமுடியலே..
அப்போது உள்ளே வந்தான் தனபாலு.
வாடா தனபாலு உம் பையன் என்ன படிக்கிறான்?
பத்தாம் வகுப்பு முடிச்சிட்டாங்க ஐயா.. மேல டவுனுக்குப் படிக்க அனுப்பணும்..
ஓ.. எப்படி அனுப்புவே..
பஸ் இருக்கு.. பாஸ் கொடுப்பாங்களாம்..
ஒண்ணு செய் பேசாம இந்த சைக்கிள் இங்க சும்மாத்தான் கெடக்கு எடுத்துட்டுப்போய் உம்பையன்கிட்டக் கொடு.. ரொம்ப ராசியான சைக்கிள்.. என்னோடது.. கொஞ்சம் செலவு பண்ணணும்.. பண்ணிக்கோ..என்றார் கணேசன்.
சரிங்க ஐயா..உ ங்களுக்கு ரொம்ப பெரிய மனசு..
அந்தக் காலத்து ரிலே சைக்கிள்டா..இப்பல்லாம் அப்படி ஏது சைக்கிள்? உனக்குத் தரேன்.. அப்புறம். இது அப்பவே விலை அதிகம்.. நீ எதுவும் கொடுக்கவேண்டாம்.. உன்னோட சம்பளத்துல மட்டும் இதுக்காக இருநூறுவா மட்டும் கழிச்சுக்கறேன்.. சும்மா ஒரு கணக்குக்காக.. என்றார்.
சரிங்க..ஐயா.. ரொம்ப நன்றிங்க..
எடுத்துக்கொண்டு போனான் தனபால்.அதை எடைக்குப் போட்டால் ஐம்பது ரூபாய்க்குக் கூடத் தேறாது.
000
