அழகியசிங்கர்/பூனை

அந்தக் கருப்புப் பூனை என் பேத்தியை விடவில்லை. அமெரிக்காவிலிருந்து வந்த பேத்தி பூனையக் கொஞ்ச ஆரம்பிக்க அது அவளைச் சுற்றி சுற்றி வந்தது. பயந்து விட்டாள்.
நான் பூனையைத் துரத்தினேன்.
அடுத்த நாள் காலை என் வீட்டு வாசலில் பூனை
வாலை ஆட்டிக்கொண்டு
நின்றிருந்தது.
“ஆரபி, உன்னைப் பார்க்க உன் பிரண்டு வந்திருக்கு,” என்றேன்.
வாசலில் வந்த ஆரபி
பூனையைப் பார்த்தாள்.
அவளுக்கு ஏனோ பயம் தெளிந்திருந்தது.
பூனை கிட்டப் போய் அவளைப் பார்த்தது.
அவளும் பார்த்தாள்.
இரண்டு பேர்களும் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள்
என்று தெரியவில்லை.
கொஞ்சம் நேரம் கழித்து ஆரபி, “தாத்தா, பூனையும் என்னோட அமெரிக்கா வருகிறேன் என்கிறது,” என்றாள்.