மா. காளிதாஸ்/அற்பனுக்கு வந்த வாழ்வு

சொலவடை இல்லாமல்
ஒரு வாக்கியம் கூடப் பேச முடியாது
தாத்தாவால்.

இத்தனைக்கும் மெனக்கெடுவது போல்
தலையைச் சொறியவோ
தாடியைத் தடவவோ மாட்டார்.

வேலியில் கிடக்கும்
நீலமிட்ட வேட்டியை எடுக்கும்
பதவிசு இருக்கும்
சொலவடையைத் தாத்தா பயன்படுத்துவதில்.

தாத்தாவின் சொலவடை கேட்டு
வெட்க நடனம் ஆடியதுண்டு
சில பாம்படங்கள்.

நல்லநாள்களில் ஆசிர்வாதம் செய்து
தாத்தா நெற்றியில் பூசியதும்
சொலவடையாகத் தான் இருக்கக்கூடும்.

உண்டியலிலிருந்து உருண்டோடி
ஓரிடத்தில் நிலைபெறும் நாணயம் போல மனதுக்குள் தேங்கிக் கிடக்கிறது
தாத்தாவின் சொலவடையொன்று.

ஆற்றில் கரைக்கையில்
கூழாங்கல்லோடு சேர்ந்து உருண்டு கொண்டிருந்தன
ஒருபோதும் தீராத தாத்தாவின் சொலவடைகள்.

சுட்டுத் தின்றாலும்
பொரித்துத் தின்றாலும் அதீத ருசி தான்
தூண்டிலிட்டுத் தரையில் துள்ளும்
தாத்தாவின் சொலவடைகள்.