சசிகலா விஸ்வநாதன்/பெரியவள்


கர்னல் மாமி மிகவும் வற்புறுத்திக் கூப்பிட்டால் அவர் பேரன் தொட்டில் போட்டு நேரிடும் வைபவத்திற்கு அன்னம்மாள் செல்ல வேண்டியதாயிற்று.
அன்னம்மாள் குழந்தையைக் குளிப்பாட்டுவது, அலங்காரம் செய்வது, திருஷ்டி கழிப்பது,என்று எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருந்தார். குழந்தை சமர்த்தாக அழாமல் இருந்தது.
முதிர் வயதான அன்னம்மாள் கையால் நாவில் பீஜாட்சரம் எழுதச் சொன்னார்கள்.
” ஹரி நாராயண்” என்ற பேரையும் நெல்லில் எழுதி எல்லார் வாழ்த்துடனும், விருந்துடனும் விழா இனிதே முடியும் நேரம்.
அன்னம்மாள், கர்னல் மாமியை தனியே அழைத்து, ” விசாலம்! உன் பேரனுக்கு காது கேட்கவில்லை என எனக்குப் படுகிறது.
உடனே ஈ.என.டி மருத்துவரிடம் போய் காண்பி”,என்றதும் கர்னல் மாமி மிகுந்த கோபம் அடைந்தார்.
“உங்களை பெரியவர் என்று நினைத்து இத்தனை மரியாதை செய்தது, இதற்குத்தானா? உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்” என்று முகத்தில் அறையாத குறையாக சொல்லவும்; அன்னம்மாள், வீடு திரும்பியதும், மருத்துவம் படிக்கும் தன் பெண் கலா விடம் சொல்ல,” என்னம்மா! இப்படி ஏடாகூடமாக பேசலாமா”, என்று கண்டிக்க; அன்னம்மாள் ஏதோ சொல்ல வந்ததை யார் கேட்டார்கள்?
இரண்டு வாரம் கழித்து மாலையில், அன்னம்மாள் துளசிக்கு விளக்கு வைக்கும் போது, விசாலம் வந்தாள்.
” மாமி! என்னை மன்னித்து விடுங்கள். என் அகத்துக்காரர் நீங்கள் சொன்னதைக் கேட்டு விட்டார். பிடிவாதமாக மருத்துவரிடம் சென்றதில்நீங்கள் சொன்னதுதான் சரி என்றும்,உடனடியாக சிறு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே காது கேட்கும், என்று சொல்லிவிட்டார். ஆபரேஷனுக்கு அப்புறம் குழந்தைக்கு நன்கு காது கேட்கிறது.அன்று உங்களிடம் பேசியது தவறு ” என்று கண்ணீர் மல்க மன்னிப்பும் கேட்டார்.
“அதுவா இப்போது முக்கியம்? இப்போது உன் பேரன் ஹரிக்கு காது நன்கு கேட்கிறதே, எனக்கு மகிழ்ச்சி”, என்று பெருந்தன்மையாகக் கூறினாள். பெரியோர் என்றும் பெரியோரே.