பரதன் வெங்கட்/சுஜாதாவை ஜெயித்துவிட்டதாக நினைக்கிறீர்களா ?

“சுஜாதாவை ஜெயித்துவிட்டதாக நினைக்கிறீர்களா ?”
என்று எழுத்தாளர் பாலகுமாரனிடம் ஒரு நேர்காணலில் கேட்டதற்கு அவர் தந்த பதில்…

இல்லை, நான் சுஜாதாவை ஜெயிக்கவில்லை. நான் எப்படி ஜெயிக்கமுடியும். அவர் விஞ்ஞானி. மிகவும் மெத்தப் படித்தவர். வெகு காலம் இன்ஜினீயராக இருந்து தொடர்ந்து விஞ்ஞான சாகசங்களைப் பற்றி எழுதி வருபவர். நல்ல நிர்வாகி. அவருடைய படிப்பறிவு பரந்துபட்டது. அவரோடு போட்டி என்பதே எந்த வகையிலும் சரியாக வராது.

ஆனாலும், என்னை நோக்கி சுஜாதாவை ஜெயித்துவிட்டதாக கருதுகிறீர்களா என்று கேள்வி கேட்கிறீர்களே இதைத்தான் மிகப் பெரிய வெற்றியாக நான் நினைக்கிறேன். அவருக்கு இணையாக நானும் ஏதோ செய்திருப்பதாக நீங்கள் நினைப்பதால் தானே இந்தக் கேள்வி வருகிறது. இந்தக் கேள்விக்கு நன்றி. மற்றபடிக்கு நான் இந்த ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளவே இல்லை. சுஜாதா உயரம் தாண்டுதல், நான் மாரத்தான் ஓட்டம்.

“சுஜாதாவையும், ராஜேஷ்குமாரையும் அடையாளம் காட்டியது நீங்கள் தான். எப்படி இனம் கண்டீரகள் ?” என்று எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில்…

ராஜேஷ்குமாரே இதை பல இடங்களில் சொல்லி இருக்கிறார். அவரது 10, 15 கதைகள் திரும்பி வந்திருக்கின்றன. ஏன் என்று என்னிடம் கேட்டு அறிந்து கொண்டார். அதன்பிறகு நான் சொன்னபடி எழுதத் தொடங்கினார். அவரது கதைகள் பிரமாதமாக வெளிவந்தன.

ஆனால் சுஜாதாவைப் பொறுத்த வரை அவர் ‘சுத்த சுயம்பிரகாசம்.’ அவருக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. கணையாழியில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் கடைசிப் பக்கம் எழுதிக் கொண்டிருந்தார். அதன்பிறகு டெல்லிக்கு மாறுதலாகிப் போனார். “சசி காத்திருக்கிறாள்” என்று ஒரு சிறுகதையை அனுப்பி இருந்தார். வித்தியாசமான யுத்தியுடன் எழுதப்பட்டிருந்த அந்தச் சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. கூடவே அற்புதமான ஒரு டுவிஸ்ட்டுடன் அந்தக் கதையை முடித்திருந்தார். அந்தக் கதையை பிரசுரத்திற்கு தேர்வு செய்ததுடன், எஸ்.ஏ.பி அவர்களிடமும் சொன்னேன். “நன்றாக இருந்தால் என்னைக் கேட்கவே வேண்டாம் பிரசுரம் செய்து விடுங்கள்” என்று கூறி விட்டார். பிரிண்ட்டிங் ஆன பிறகுதான் அவரே வாசித்தார். அந்தச் சிறுகதைக்கு 20 ரூபாய் சன்மானமாக அனுப்ப ஏற்பாடு ஆகியிருந்தது. உடனே எஸ்.ஏ.பி அவர்கள் அதனை 40 ரூபாயாக திருத்தி அனுப்பி வைத்தார். நான் தான் எழுதுகிறேன் என்று பலரும் நினைத்ததால், அவரை சுஜாதா ரங்கராஜன் என்று போட்டோம். அப்புறம் தான் ‘சுஜாதா’ என்றே எழுதினார்.