ஒற்றைக் காகம்

எஸ் வி வேணுகோபாலன் 

பெருமழை ஓய்ந்திருந்த நாள் ஒன்றில் 

வாசல் நிறைந்து ததும்பத் 

தொடங்கிய வெள்ள நீர் பார்த்து

கனத்த மனத்தோடு 

அகன்று போயிருந்த 

சொந்த வீடு நோக்கிய நடை 

மற்றொரு சுவாரசியமற்ற

குறும்பயணம் போல் இருந்தது 

தட்டுப்பட்ட பாதையெங்கும் 

கழிவுகளின் ஓடை 

ஓடிக் கொண்டிருந்தது 

மாநகரத்தின் தெரு என்ற 

செருக்கைச் சுக்கு நூறாகத் தகர்த்து.

பாதி திறந்திருந்த 

மளிகைக்கடையின் மேல் ஷட்டர்கள்  

எப்போது வேண்டுமானாலும் 

மீண்டும் மூடப்படலாம் 

என்ற நடுக்கத்தில் இருப்பது போல் தெரிந்தது 

எங்கோ புகலிடம் கிடைத்து

உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருந்த 

வீதி நாய்கள் 

இன்னும் 

மழையின் பதட்டம் உதிர்க்காத உடலோடு 

இரை மோந்து பார்த்தபடி  

சோர்வு நடையில் தென்பட்டன 

மின் பல்புகள், மின்னணு பொருள்கள் 

ரிப்பேருக்கு வந்த 

மின் சாதனங்கள், உதிரி பாகங்கள்,

எல்லாம் 

உள்ளே புகுந்திருந்த வெள்ள நீரில் 

மூழ்கிப் போயிருந்த 

எளிய கடையொன்றின் 

எளிய சொந்தக்காரன் ஒருவன் 

தொலைந்து போன பொருள்களில் 

தொலைந்து போய்விட்ட தனது வாக்குறுதிகளைத் 

தொலையவே செய்யாத புன்னகையோடு 

மூன்றாவது நாளாகக் 

கூட்டிப் பெருக்கி வெளியேற்றிக் கொண்டிருக்கிறான் 

உள்ளே வெள்ளநீர் 

போயிருந்தாலென்ன போகட்டும் 

என்று திறந்து பார்க்கையில் 

கதவுக்கு உள்புறம் 

புகாத நீரில் தப்பிய வீடு வரவேற்றது 

மழை நீரின் உப்பு பூத்துக் 

குப்பென்ற வாசத்தோடு. 

பைகள், துணிமணிகள் 

துணி துவைக்கும் எந்திரம்,

கட்டில் மீது கைவிட்டு வந்திருந்த

புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள் 

எல்லாம் சாம்பல் அப்பியது போன்ற கதியில் 

அப்படி அப்படியே பத்திரமாக 

நிம்மதிப் பெருமூச்சோடு நிமிர்கையில்

‘கிணற்றங்கரை தாண்டிப் போய்ப் பாருங்கய்யா’

பக்கத்து வீட்டுப் பணிப்பெண் 

ஜெகதாம்மா குரல் கேட்கிறது வாசலில் 

வீட்டினின்றும் வெளியே வந்து 

பக்க வாட்டில் வீட்டைச் சுற்றிலும் 

மாமரத்தின் உடைந்து நொறுங்கிய கிளைகள் 

சருகுகள் சருகுகள் சருகுகள் 

எல்லாம் மெல்லக் கடந்து 

கிணற்றுக்கு அப்பால்

சருகுகளின் மேட்டில்  

எட்டிப் பார்க்கிறேன் 

உணவுக்காக 

உறவுகளுக்காக 

பசிக்காக 

இணைக்காக 

ஏதேதோ காரணத்திற்காக 

பழக்கத்திற்காக 

ஓயாது கரைந்து திரிந்த 

வாழ்க்கையின் குறுக்கே 

எந்தத் தருணத்தில் 

எப்படி சிக்கி 

எங்கே தாக்குண்டு 

இங்கே வந்தடைந்ததோ 

மார்பைப் பிளந்து கிடந்தது 

செத்துப் போன 

ஒற்றைக் காகம் ஒன்று 

15 Comments on “ஒற்றைக் காகம்”

  1. அருமை. காகத்திறகான தங்கள் அன்பை இரங்கலை நாங்களும் உணர்கிறோம். தொலைந்து போன வாக்குறுதிகளை தொலையாத கண்டிப்பாக மீட்டெடுக்கும். வீட்டை கேளுங்கள்…தன் பங்கிற்கு அது என்ன சொல்கிறதென?

  2. ‘தொலையாத புன்னகை மீட்டெடுக்கும்’ முந்திய கருத்தில் விட்டுப் போன நகையை இங்கு இணைத்து உள்ளேன். மன்னிக்கவும்.

  3. எளிமையான..வலிமையான…சொற்களைக் கொண்டு யாத்த கவிதை அருமை…
    படித்தவர்களும் கூடவே பயணிக்கத் செய்யும் யுக்தி..
    புத்தகங்கள்…புத்தகங்கள்..புத்தகங்கள் என்றும் ..சருகுகள்..சருகுகள்…சருகுகள்..என்ற தொடரி…மகாகவி…பாரதியின்..பாஞ்சாலி சபதத்தில்….திருப்தியில் துகில்..இழுக்க..இழக்க வளர்வதை… விந்தையடா..விந்தையடாவிந்தையடா..என்ற..தொடரியை நினைவுகூற வைத்தது..சிறப்பான பதிவு..வாழ்த்துகள்..ஜனா 👍💐🙏💥

  4. அந்த ஒற்றை காக்காவை கானும் முன் வெள்ள பாதிப்பை தெருவில் கண்ட காட்சிகள் பற்றிய வர்ணனை அருமை.

  5. எல்லாவற்றையும் மீட்க முடிந்தாலும், தொலைந்த காகத்தின் நினைவுகள் நம்மை அமிழ்த்துகிறது.

  6. வார்த்தை மழையில் நனைந்து
    எங்களையும் ரோட்டோர சகதியில் புரட்டி
    அறுந்து போன கம்பிகளாய் தொங்கவிட்டு ,உங்கள் வீட்டுக்குள்
    அழைத்து சென்று புத்தகசொத்து
    பத்திரம் பார்த்து நிம்மதி ஆன வேளையில், (twist)திருப்பமாக காகத்தின் மரணம். ரண வேதனையில்
    கவிதை முடித்து
    முடியவில்லை எங்கள் மன குமுறல்.

  7. “தொலைந்து போன பொருள்களில்
    தொலைந்து போய்விட்ட தனது வாக்குறுதிகளைத் தொலையவே செய்யாத புன்னகையோடு”
    எப்போதும் புன்னகை என்பதை அழகாக கூறிய விதம் அருமை.
    அமைப்பில் சாம்பல் அப்பிய புத்தகங்கள், ஏதோதோ காரணம் என்று கூறுவதற்கு முன் நிறைய காரணங்களை நீங்களே பட்டியலிட்ட விதம் காக்கையின் மரணத்தை எண்ணி வருந்த வைக்கிறது.
    வாழ்க வேணு. வாழ்க உங்கள் கவிதை வரிகள்

  8. தொலைந்து போன பொருள்களில்

    தொலைந்து போய்விட்ட தனது வாக்குறுதிகளைத்

    தொலையவே செய்யாத புன்னகையோடு
    அருமை அருமை.. உணர்வுகள் ததும்பி வெளி வந்த அழுத்தமான வார்த்தைகள்…

  9. மழையில் மருகும் பல உயிர்களின் வாசல்
    திறக்கபடாத வாழ்வியல் அழகானது. சிக்கி அழியும் காகங்களை யாரும் பெரிது படுத்துவது இல்லை.

Comments are closed.