“நீ தான் என்ன எழுத்தாளனாக்குன”

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

இசை விமர்சகர் சுப்புடு மறைந்த சில நாட்கள் கடந்திருந்தன. ‘குமுதம்’ அலுவலகத்தின் கீழ் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக இண்டர்காமில் செக்யூரிட்டி சொன்னார். பெயர் கேட்டேன், பாரதிமணி என்றார்கள்.

எனக்கு அவரை முன்பின் நேரடியாகத் தெரியாது. ஆனால் பாரதி படத்தில் அவர், “சுப்பையா காலத்தை மீறி கனவு காணத்தெ” எனப் பேசிய வசனம் வாழ்நாள் முழுக்க நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது.

ஆகவே உடனே சுதாரித்து கொண்டு அவரை மேலே அனுப்புங்கள் என்றேன்.அவர் ஒரு கைத்தடியோடு மேலே கம்பீரமாக வந்தார். “தீராநதிக்காக ஒரு கட்டுரை எழுதி வந்திருக்கேன். நான் எழுத்தாளன் இல்லை. சுப்புடுவ பத்தி எல்லாம் கத கதெயா எழுதிக்கிட்டு இருக்கான். டெல்லியில என்னிட வாழ்ந்தவர் அவர். நீ இத படிச்சு பார்த்து போட்டியினா நல்லா இருக்கும். கட்டாயம் இல்ல. உனக்குப் புடிச்சிருந்தா போடு” என்றார்.

நான் கைகளில் வாங்கி வைத்து கொண்டு.பல மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரைப் பார்க்க அலுவலகத்தில் கூட்டம் கூடிவிட்டது. பெரிய நடிகர்களின் படத்தில் அவர் நடித்திருந்ததால் கிடைத்தை பிரபலம்.

அவர் சென்ற பிறகு கட்டுரையை வாசித்தேன். சுப்புடுவை பொலந்து கட்டி இருந்தார். எனக்கு அவர் நேர்மை பிடித்திருந்தது.

அந்த மாதமே அதை பிரசுரித்தேன்.அதன் பின் எனக்கு அவர் போன் பேசினார்.

” உனக்கு தைரியம் ஜாஸ்தி. எதையும் வெட்டாம அப்படியே போட்டுட்ட. எனக்கு எழுத தெரியாது. நான் எழுத்தாளன் கிடையாது. என் மாமனார் க.நா.சு என்னைவிட பெரிய எழுத்தாளர். நீ தான் என்னை எழுத்தாளனாகின. நன்றி ” என்றார்.

“உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளன் இருக்கான். தொடர்ந்து எழுதுங்க” என்றேன்.

பிறகு எங்கு என்னைப் பார்த்தாலும் ” நீ தான் என்ன எழுத்தாளனாக்கின” என்பதை தவறாமல் சொல்லிக் கொண்டே இருந்தார்.

தீராநதியில் வந்த சுப்புடுவைப் பற்றி கட்டுரைதான் பாரதிமணியின் முதல் கட்டுரை. அதை வெயிட எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இன்று அவர் இல்லை. ஆனால் ” காலத்த மீறி கனவு காணாதெ” என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

One Comment on ““நீ தான் என்ன எழுத்தாளனாக்குன””

  1. ஒருவர் கதையோ, கடாடுரையோ ,விமர்ச்சனமோ எழுதலாம்.ஆனால் அந்த எழுத்துக்களை மதித்து யாராவது ஒருவர் பதிப்பித்து அந்தபடைப்புங்களுக்கு உயிர் கொடுத்தால் அந்த எழுத்தாளனின் மனம் எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளும் என்பதை இக்கட்டுரை எடுத்துகாட்டுகிறது.வாழ்த்துக்கள்
    ஐயா!

Comments are closed.