பாரதிமணி என்ற ரசிகன்

நா. விச்வநாதன்

‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’நூலை ரொம்பத் தாமதமாகத்தான் வாசிக்க நேர்
ந்தது.மிக நல்லவைகள் என்னைத் தாமதமாகத்தான் அடையும்.இது இலக்கிய
வகைமையில் சேருமா என்ற கேள்வி கேட்கப்பட்டது.நல்ல சாப்பாடு,நயமான சங்கீதம், நல்லசம்பாஷணைகள்,சிறந்த பயணங்கள்,அவைசார்ந்த விவரணைகளை
அழகாக எழுதுவது தனிக்கலை. நம்ம பாரதிமணி அற்புதமாகச் செய்திருக்கிறார். தமிழில் புதுவகை எழுத்து. பட்டிமன்ற தமிழ்வாத்யார்களுக்கு இது புரிபடாது.
“சிலபஸ்”தான் இலக்கியம் என்ற பரிதாப மனோநிலை.

இலக்கியம் என்பதே சம்பவங்களின் சேர்க்கைதான். மூளை, மனசையெல்லாம் கசக்கிக் கொண்டு உபமான உபமேயச் சான்றுகளோடு வாசகனுக்குத் தருவது அவலமானது.பிஎச்டிதீஸீஸ் அல்ல இலக்கியம். பாரதிமணியின் எழுத்துக்கள் வாசிக்க
வாசிக்க மனசு துள்ளும்.இலக்கியத்தின் பிரதான நோக்கமே களிப்புதான்.தெரிந்த
சொற்களையெல்லாம் கொட்டிக்குவித்து எழுதி வாசகனை மருட்டும் வேலை விலக்கத்தக்கது. தமிழில் எல்லாமே இருக்கறது என்று காலரைத்தூக்கி விட்டுக் கொண்டு உலாத்துவது இம்சைதான். மணி நிஜமாக எழுதுகிறார்.

பாரதிமணி உல்லாசப்பறவை. ஆகாயவெளியில் நாலாபக்கங்களிலும் ஒய்யாரமாகப் பறந்து இந்தப் பிரபஞ்சத்தின் அத்தனை அழகுகளையும் எளிய பதிவுகளின் மூலம் கோலம்போடுவது. ஒரு உல்லாச வேளையை உருவாக்கித் தரவேண்டும்.உண்மையாக எழுதும்போது தனிச்சோபை கிடைக்கிறது.’பாரதிமணி இலக்கியம்’ என்றே சன்னத்துகொடுக்க வாசகன் விழைவதில் வியப்பில்லை. மிகையன்று.

பாரதிமணி க.நா.சு வின் மாப்பிளை என் று அறிமுகம் வேண்டியதில்லை. சுயம்பு.
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போதே தனியுலகு
நுழைந்தேன்.இதுவரை பார்த்திருந்ததுதான்.’ அட எனக்கு ஏன் இவற்றை எழுதத்
தோன்றவில்லை? .கலை நேர்த்தியுள்ளவர்களுக்கே இது சாத்தியம்.இலக்கியம்
என்பது உம்மணாமூஞ்சியோடு இருந்து எழுதுவது என்ற கருதுகோள் என்னிட
மிருந்ததில்தான் சிக்கல்.நல்ல கலை மனசு ஒரு ‘மரபெஞ்ச்’ சைக்கூட பிரமாத
மாக எழுதும் ஆற்றல் பெற்றது. ஒரு மனிதன் இத்தனை ஆளுமைத்தன்மையோடு
இருப்பது சாத்தியமாகி இருக்கிறது.இது சத்தியத்தின் அழகு.

மணி ஒருநாடகக்காரர்.பாரதி படத்தில் பாரதியின் தந்தை சின்னசாமி ஐயராக
நடித்திருப்பவர் என்று ஆரம்பத்தில் தெரியவில்லை.ஒரு நறுவிசு இருந்தது.நல்ல
ரசனைக்கார ஆசாமிகளாலேயே இது முடியும். க்ஷணநேரம்மட்டும் நீடிக்கிற ஓர்
அனுபவத்தை பலமணி நேரம் அல்லது ஆயுள்பரியந்தம் நீடிக்கவைக்கமுடியும்
என்பது பாரதிமணி கட்சி.சின்னச் சின்ன வேஷங்கட்டினாலும் அற்புதம் பண்ணிய
வர். இது ஒரு பிரார்த்தனைதான்.prayer simply happens என்பது மாதிரி.இந்தப்
பிரார்த்தனையில் மணியடித்தல் இல்லை கற்பூரம்,தீபமில்லை,சாம்பிராணிப்புகை
யில்லை.நைவேத்யமில்லை.இவை ஏதுமல்லாத நிஜ பிரார்த்தனை. இவை எழுத்
தாகும் போது கூடுதல் பொலிவு கிடைக்கிறது.

திருவிதாங்கூர் சமஸ்தானப்பற்று. எழுதுகிறார். குட்டியான சுவாரசிய வரலாறு
சொல்லப்படுகிறது.திவான் சி.பி இராமசாமிஐயரைப் பற்றி குதூகலத்தோடு
கொஞ்சம் எழுதுகிறார்.நிறையத்தகவல்கள் CPR பற்றி உள்ளன.கொஞ்சம்பச்சை
ஆசாமி.அரண்மனை ராணியையே வசப்படுத்திவிட்டார்.கள்ள உறவு.ராஜாவிற்கு
த் தெரிந்து ராஜ்யத்தைவிட்டே விரட்டப்பட்டாராம்.மெத்த சுவாரசியமானதுதான்.
மகாத்மா காந்தியிடம் சென்றபோது “உமனைசர்” என்று திட்டுவாங்கித் துரத்தப்
பட்ட தகவலும் உண்டு.

டி.என் ராஜரத்தினம்பிள்ளை சுவாரசியமானவர்.வித்யா கர்வம்.வித்தைக் குறும்பு எனவும் சொல்லலாம்.ரயில் அபாயச்சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி
அபராதம் செலுத்தச் சொல்லிவிட்டு இறங்கிவிடுவாராம். இயற்கை உபாதை
கழிக்க.நாலுசுவர் மறைப்புக் கக்கூஸ்பிள்ளையவர்களுக்குத் தோது படலே
என்பதுதான் செய்தி.தோடிராகம் இஷ்டம். ரசிகர்கள் ஆவலோடு தோடிவாசிக்கச்
சீட்டனுப்பினால் “கேதாரத்தை விஸ்தாரமாக ஆலாபனை செய்வாராம். தோடி லேது.மகுடி வாசிக்கச் சொல்லி ரசிகர்கள் கேட்டால் திருவெண்காட்டிலிருந்து ஒரு
பாம்புப் பிடாரன் வருவான். வாசிப்பான் என்று கிண்டலடிப்பாராம்.திருவெண்காடு சுப்ரமணியப்பிள்ளைநெருங்கிய பந்துதான். மணி இவற்றைச் சுவாரசியப்
படுத்துகிறார்.

தில்லியில் கச்சேரி நடுவே “மணி, அடுத்து நீங்க கேட்ட ரேவதி ஆலாபனைதான்..
உங்களுக்காக..என்று அறிவிக்கப்படுவதுண்டாம்.தில்லியையே நம் ஆசாமி வசப்
படுத்தி வைத்திருந்தது புரிந்தது.சிவாஜிகணேசன் பெயர் சொல்லிக்கூப்பிட்டுக்
கைகள்தோள்போட்டுக் காதோடுசொல்கிறதை இரண்டாயிரம் பேர் பார்த்துக் கொ
ண்டிருந்ததை விவரிக்கிறார்.இந்திரா காந்தி ‘ ஹலோ மணி..என்று பழகும் அள
விற்குப் பரிச்யம். ஒன்று புரிந்தது. ஜீவாதாரத்திற்கானதன் வேலையை ரசமுள்ள
தாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

தஞ்சாவூருக்கு வந்து தங்கிய இரண்டு நாட்கள் எங்களுக்கு உல்லாச வேளை.
அந்தப் பரிமாற்றங்களை வைத்து இன்னொரு தடித்த புத்தகம் போடலாம்.மகா
ராஜபுரம் சந்தானம் தன் வீட்டிற்குவந்து சாப்பிடுவது குறித்து அரைமணி விவர
ணை.தருமு அருப் சிவராமைச் சந்திக்கத்தன் மனையாளோடு அவரது அறைக்குச்
சென்றிருந்தபோது சிவராம் செய்து கொண்டிருந்த பணி பற்றி சிரிக்காமல் விவ
ரித்தது ரசம்‌.சங்கீத விமரிசனம் என்ற பெயரில் சுப்புடு அடித்த அடாவடிக்கூத்து
களை பாரதிமணிமாதிரி யாராலும் சொல்ல ஏலாது.சுப்புடு ரசிகாள் தன் மனதில்
வைத்திருந்த சுப்புடுபிம்பம் பொலபொல. சுப்புடு நிறையத் திருகுதாளப் பேர்வழி
என எங்களுக்குத் தெரியும்.மணி நாசூக்காகச் சொல்லும் போது பிரமாதமாக
இருக்கும்.

மாமனார் க.நா.சு ‘கறார்’ மாப்பிளைக்கு இல்லை.தாராள ரசிக மனசு.தன் புள்ளி
கள் கோடுகள் கோலங்களில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.க.நா.சுவிடம் பணம் இல்லை என்றால் இந்து பேப்பர்களை எடைக்குப் போடுவாராம்.

குன்னக்குடி வைத்தினாதன் விபூதிப்பட்டையை ஜுரத்துக்குப் போடும் பற்று
போல என்று கிண்டலடிக்கிறார்.பச்சைகருப்பு,வெள்ளைப் பற்றுகளுடன் ஒரு
முழு ரூபாய் அளவில் குங்குமப்பொட்டு கோட் சூட் டை’யுடன் தில்லி வந்து மேடை
யேறியது காணக்கண் கோடிவேண்டும். மர்கட ஜேஷ்டைகளோடு குன்னக்குடி
வாசிப்பைக் கேட்ட எங்களுக்கு இந்த வர்ணனை குதூகலப்படுத்துகிறது.

எது சரி எது தவறு என்று தீர்மானிப்பதிலேயே குழப்பம் இருக்கிறது.நல்லதையும்
கெட்டதையும் நிர்ணயிக்கமுடியாத குழப்பம். மணியின் பிரக்ஞை அலாதியானது.
பழைய விஷயங்களை நவீன எழுத்தில் விவரிக்கும் கலை அவருடையது.அனுமா
னமாக அவர் எதையும் எழுதவில்லை.மாறாத உண்மைகளை அதன் கரடு முரடான
தன்மையை விலக்கி லகுவாக்கித் தருகிறார்.இது பட்டயம் கட்டிக்கொண்ட எழுத்தாளர்களுக்கு சித்திக்காத கலை.

உலகம் முழுவதும் காணப்படுவது எதுவாயினும் கேட்கப்படுவது எதுவாயினும் அவை அனைத்தையும் உள்ளும் புறமும்வியாபித்தபடி புள்ளிகள் கோடுகள் கோலங்கள் வழி பாரதிமணி இருக்கிறார்.நல்ல சாரதி குதிரையை கட்டுப்பாட்டில்வைத்திருப்பதைப்போல தன் கருத்துக்களை இழுத்துப்பிடித்து சரியான பாதையில் சாரத்தியமும் செய்வது பேரழகு.—

இனி நினைவுதான் மணிசார்