அழகியசிங்கர்/ அப்பா ஏன் கேட்கவில்லை

User Comments

அப்பாவிற்கு வயது 84. சொன்னால் நம்ப
மாட்டீர்கள். சுறுசுறுப்பு என்றால் அவ்வளவு
சுறுசுறுப்பு.
முகத்தில் சுருக்கம். பற்களும் இல்லை.
போட்டாவிற்கு முகம் காட்ட மனிதர்
விரும்ப மாட்டார். நீங்கள் அவரை
நான் குடியிருக்கும் தெரு முனையில்
அடிக்கடி சைக்கிளில் செல்வதைப்
பார்த்திருக்கலாம்
பலமுறை சொல்லியாயிற்று
சைக்கிளில் போகவேண்டாமென்று
ராட்சத வாகனங்களின் உறுமல்கள்
கேட்கும்போதெல்லாம்
அப்பா சைக்கிளில் சென்றுகொண்டிருப்பது
நினைத்து மனம் படபடவென்று
அடித்துக்கொள்ளும்
55 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ‘மேட்’ இன்
இங்கிலாந்து’
சைக்கிளில்தான் போவார்.
படுபாவிகள் யாரும் அந்தச் சைக்கிளைத்
திருடாமல்
போய்விட்டார்கள். திறந்தே போட்டிருந்தாலும்
யாரும் தொடக்கூட மாட்டார்கள்
அப்பா சொல்வார் குதிரை சவாரிபோல்
பார்த்தால் தோன்றும்
சைக்கிள்தான் அவரை அழைத்துக்கொண்டு
போகிறதா என்று
ஒருமுறை நான் தெருவில் நடந்துபோய்க்
கொண்டிருக்கும்போது, எதிரில் அப்பா சைக்கிளில்
வெலவெலத்துப் போய்விட்டேன்
அவர் சைக்கிளை நிறுத்தச்சொல்லிவிட்டு
வேண்டிக்கொண்டேன். ‘அப்பா, சைக்கிள்
வேண்டாமென்று, இன்னொரு முறை,
‘காலில் விழுந்து நமஸ்காரம் செய்கிறேன்
தயவுசெய்து சைக்கிளில் வேண்டாம்,’ என்று
மறுமுறை ‘நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆட்டோ
செலவை. வேண்டாம் ஐயா, சைக்கிள்,’ என்று
கேட்டால்தானே மனிதர். ‘மூட்டு வலி. நடக்க
முடியவில்லை. சைக்கிளில்தான் முடிகிறது.’
என்பார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. புதிய வேஷ்டியுடன்
பளிச்சென்று சட்டையுடன், நெற்றியில்
விபூதியுடன் களையாய் காணப்பட்டார் அப்பா
தடியை ஊன்றி
மாடிப்படிகளைக் கடந்து வந்து கொண்டிருந்தார்.
எதிர்பட்ட நான், பார்வையால் எங்கே என்றேன்
‘பூணூல் கல்யாணம், சைதையில்,’என்றார்
‘ஜாக்கிரதை, அப்பா,’ என்றேன். பக்கத்தில் நின்ற
நண்பன், ‘மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்க,’என்றான்
‘போப்பா’ என்று வெட்கப்பட்டார்.

இதுதான் விதி என்பதா? வீட்டிற்குப் போன் வந்தது
அப்பா சைக்கிளிலிருந்து விழுந்துவிட்டாரென்று.
பதட்டத்துடன் மனைவி என் கைப்பேசிற்குப் போன்
பண்ணினாள். நானும் ஓடினேன்.
சைதாப்பேட்டையில் உள்ள ஆதிகேசவப்பிள்ளைத்
தெருவில், அப்பா ஒரு பிளாஸ்டிக் சேரில்
அமர்ந்திருந்தார். ‘ஒரே வலி..இடது பக்கம்
தொடையில்’ என்றார். அவரைச் சூழ்ந்து பலர் இருந்தார்கள்
‘பெரியவர் சைக்கிளிலிருந்து விழுந்து விட்டார்,’
என்றான் ஒரு பையன்.
வலியை முகத்தில் காட்டாமல், ‘சீக்கிரம்
அழைத்துப்போ,
ஆஸ்பத்ரிக்கு,’ என்றார்.
‘ஏனப்பா, சைக்கிள் வேண்டாம்
வேண்டாமென்றேனே,’
என்றேன். தலையில் அடித்துக்கொண்டு.

அன்று ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது
இடதுப் பக்கத் தொடை எலும்பு முறிவு. எனக்கு
ஆச்சரியம். எப்படி வலியைப்
பொறுத்துக்கொண்டாரென்று. அவருக்கு பிபி, சுகர்
எதுவுமில்லை. இதய நோயாளி அல்ல
84 வயதில்
முதன்முதலாக கடுமையான அறுவை சிகிச்சை.
நான்கு மணி நேரம் நடந்தது.

இப்போது காலை நகர்த்த முடியாமல்
இருக்கும்போது
சொல்கிறார் தலையில் அடித்துக்கொண்டு
‘இனிமேல் சைக்கிளே வேண்டாம். நான் ஒரு முட்டாள்.
முட்டாள்,’ என்று.

(தந்தையர் தினம் முன்னிட்டு 2006ல் எழுதிய கவிதையை இங்குப் பதிவிடுகிறேன்)