தங்கேஸ்/இன்று சின்னமனூர் நூலகத்தில் வாசிக்கப்பட்ட தந்தையர் தினக்கவிதை

என் தந்தையே
தாயின் மடியிலிருந்து இறங்கி
உன் தோளின் மீது அமர்ந்த அந்த நாளில் தான்
என் பிரபஞ்சம் ஆரம்பமானது
தந்தையென்னும் பல்லக்கில் அமர்ந்து
பவனி வராத ராஜகுமாரர்கள்
இங்கு யாரும் உண்டா?

அப்போது என் கண்களில் நீ
வானம் வரை வளர்ந்திருந்தாய்
உன்னை அண்ணாந்து பார்த்த நாளில்
நீ எனக்கு கடவுள் போல தோற்றம் தந்தாய்

முதன் முதலில் உன் முதுகில் யானைச்சவாரி
செய்த சிறுவன்
இன்னும் இறங்கவே இல்லை
நினைவிலிருந்து

உழைப்பின் மெருகும்
வியர்வையின் வாசமும் கலந்து
உன்னிலிருந்து வீசிய
மகரந்த நெடியில் பலகாலம்
மயங்கி கிடந்தவன் நான்

ஒரு முறை கோவிலுக்கு நீ என்னை
அழைத்துச் சென்ற போது
கற்சிலையையும் உன்னையும்
மாறி மாறி தொட்டுப்பார்த்து
புளகாங்கிதம் அடைந்தது
அப்படியே என் மனதில்
தங்கி கிடக்கிறது

அப்பொழுதெல்லாம் கடவுள்
உன்னைவிட உயர்ந்தவர் என்று யாரும்
சத்தியம் பண்ணியிருந்தாலும்
நான் நம்பியிக்க மாட்டேன்

உன் சட்டைப்பையில் எனக்கான காசு
எப்போதும் ஒளிந்திருக்கும்
உன் மேல்துண்டில் எனக்கான தின்பண்டங்கள்
நிறைந்திருக்கும்

ஆனால் காலம் தான் எத்தனை கொடியது
பால்யத்தை எடுத்து மலைப்பாம்பாக விழுங்கிவிட்டு
மரத்தை சுற்றி இறுக்கி
அத்தனையையும் செரித்துவிடுகிறது

வளர வளர என் வானம் விரிந்து கொண்டே செல்கிறது
வெளியிலிருந்து ஒவ்வொருவராய் உள்ளே நுழைகிறார்கள்
உள்ளேயிருந்த நீ தள்ளி தள்ளி சென்று கொண்டிருக்கிறாய்
உடலும் உயிருமாய் இருந்த நாம்
தந்தை மகன் என இரண்டு ஆண்களாய் மாறி விட்டோம்
நமக்குள் பேச்சு – வார்த்தை என்ற அளவில்
சுருங்கிப்போனது

ஆனாலும் முத்தை சுமக்கும் ஒரு சிப்பியைப்போல
என்னை உனக்குள் சுமந்து கொண்டிருப்பதை
உன் கண்களில் வழியே நானறிவேன்
உன் கண்களின் வழியே நானறிவதை
என் கண்களின் வழியே நீ அறிவாய்

நீ இல்லாமல் போயிருந்தால் நான் என்னவாகியிருப்பேன்?
பள்ளிக்கூடத்துப்பக்கம் மழைக்காவது ஒதுங்கியிருப்பேனா ?
எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி வாசிக்கப்பழகியிருப்பேனா?
உழைக்கப்பழகியிருப்பேனா?
பசித்த வயிறுகளை பசியாற்றியிருப்பேனா?
ஒரு வாய் உணவு தான் நிம்மதியாய் உண்டிருப்பேனா?

உன்னிடத்தில் ஏதுமில்லை
ஒரு கொடைவள்ளல் போல
எல்லாவற்றையும் என்னிடத்திலேயே கொடுத்துவிட்டேன்
என்ற நினைப்பில் தான்
நீ என்னை விட்டுப்பிரிந்தாயா?

என் தந்தையே அவையத்து முந்தியிருக்கச் செய்தாய் என்னை
இவன் தந்தை என்னோற்றான் கொல் என்னும் சொல்லை
நான் கடைசிவரையிலும் காப்பாற்றவேயில்லை

நினைவில் உன் விரல் பிடித்தபடி தொடரும்
அதே சிறுவன் தான் நான் இன்னும்
நீ என்னை விட்டுப் பிரிந்த போதும்
அரூபமாக என் முன்னே நடந்து கொண்டேதானிருக்கிறாய்
அதனால் தானே என் பெயருக்கு முன்னே
முதல் எழுத்தாக உன்னை எழுதிக்கொண்டிருக்கிறேன் நான்