
ஊட்டி விட்ட தோசையில்
அம்மாச்சி இருந்தாலும்
ஆக்கி வைத்த அரிசியில்
அப்பா அப்பா
நுங்கும் பதினியும்
பனங்காயும் கிழங்கும்
சாப்பிட்ட நாளெல்லாம்
அப்பா அப்பா
கோயில் திருவிழாவில்
குவித்திருந்த தின்பண்டம்
ஒவ்வொன்றின் உள்ளேயும்
அப்பா அப்பா
எம்ஜிஆரும் சிவாஜியும்
இதயத்தில் இருப்பதற்கு
கூட்டிச் சென்ற சினிமாக்கள்
அப்பா அப்பா
கல்லூரி விடுதிக்கு
வருகின்ற மணி ஆர்டர்
ஓரத்து எழுத்தெல்லாம்
அப்பா அப்பா
கல்யாணம் செய்த போது
வேலைக்குச் சென்றபோது
அவரின் பெருமையிலே
அப்பா அப்பா
வயதாகிக் காலிழந்து
வருந்திக் கிடைக்கையிலே
பார்த்துக் கொண்டதற்கு
பார்வையிலே நன்றி சொல்லி
அழுதவர் கண்ணீரில்
அப்பா அப்பா
முதுமையும் நோயும் அவரை
முடித்து வைத்த போது
சுடுகாட்டு மேடையிலே
முகத்தை மூடுதற்கு
வட்ட எருவொன்றை
வைத்து அழுதபடி
சுட்ட நேரத்தில்
அப்பா அப்பா
அப்பா அப்பா
அப்பா அப்பா
