
அப்பா…உன்தோளில் ஏறிப்பார்த்த உலகம் இன்றில்லை….
அறிவுசார்ந்த அனைத்தையும்
எனக்குள்கடத்த முயன்ற உனது ஆர்வம் அன்றெனக்குப்
புரியவில்லை.
என்னைச் செதுக்க முயன்றதை…
நான் சிதைவென்றே புரிந்துகொண்டேன்.
என்னைக்கேட்காமல் எனக்காக நீ செய்தது எத்தனையோ…
ஒரு கோப்பைத் தேநீருக்காக எனது
மனைவியிடம் நீ பட்ட அவமானங்களைப்
பின்னர் தெரிந்துகொண்டேன்.
நீ எதன் பொருட்டு அதனைப்பொறுத்துக்கொண்டாயோ…
அதன் பொருட்டே நானும் அவளிடம் அமைதிகாக்கிறேன்.
அம்மாவிற்குப்பிறகு…நீயொரு சமூக அநாதையாய்ப்போனதை நான் உணரவில்லை….
உணர்ந்து திரும்பிப்பார்த்தால் நீயில்லை.
தந்தையர் தினமாம்…பலபதிவுகளைப்பார்த்தபிறகு
உன்னை நினைத்து அழுகை வருகிறது.
நான் அழுவதற்காகவாவது இந்த தினம் வந்துவிட்டுப்போகட்டும்.
