அப்பாவின் உண்மையான முகம்
நாம் அப்பாவாக மாறியதும்தான்
தெரிய தொடங்குகிறது
பிள்ளையின் கைப்பிடித்து
நடக்கும் போதுதான் அன்று
அப்பாவின் இறுக்கிப்பிடிக்கும்
உள்ளங்கைக்குள் ஒளிந்திருந்த
பாதுகாப்பு புரிகிறது.
நாமே தோளில் சுமக்கையில்தான்
நம் தந்தையின் தோள்வலி தெரிகிறது.
அழும்பிள்ளையை தவிப்புடன்
பள்ளிக்குள் அனுப்புகையில்தான்
நம் அப்பா ஒரு அரக்கனில்லை
என்றுணர முடிகிறது.
வியர்த்து களைத்து வீட்டுக்குள்
வரும்போது விலகி ஓடும்
பிள்ளைகளை பார்க்கும்போதுதான்
வியர்வைக்குள் நாற்றத்தை
மட்டும் அன்று பார்த்ததன்
குற்ற உணர்வு வருத்துகிறது.
பிள்ளைகளின் பெருமைகளை
பெருமிதமாய் நண்பர்களிடம்
நாம் பகிரும்போதுதான்
நமது ஓவ்வொரு வெற்றியையும்
காதில் விழாதது போல அவர்
அவசர அவசரமாய் தோளில்
துண்டை உதறி போட்டுக்கொண்டு
கடைத்தெருவுக்கு ஓடியதன்
காரணம் விளங்குகிறது.
பிள்ளையின் மணமேடையில்
விழியில் துளிர்த்த நீரை
யாருக்கும் தெரியாமல் நாம்
துடைத்துக்கொண்டபோதுதான்
தெரிந்தது நம் திருமண நாளில்
அப்பாவின் கண்களில் தூசி
ஏதும் விழவில்லை என்பது.
எதையும் புரிந்து கொள்ள
காலதாமதம் செய்துவிட்டோம்
ஆனால் காலன் தாமதம் செய்யவில்லை.
