
வெறுமை பரவியிருக்கும் அந்த மர நாற்காலியை தன் இருப்பால் நிரப்புவது தான் சமீபகாலமாக அந்த முதியவரின் வேலையாக இருக்கிறது.
பத்து வருடங்களுக்கு முன்பு அவருக்கு சங்கரன் என்ற பெயர் இருந்தது. அப்போது அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கவில்லை. அந்த வீட்டில் ஒவ்வொருவரும் அவரை உறவு சொல்லித்தான் அப்போதுஅழைப்பார்கள்.
மகன் ‘ “”அப்பா” என்று வாயாற கூப்பிடுவான். மருமகள் ” சாப்பிட வாங்க மாமா” என்று புன்னகையோடு அழைப்பாள். பேரக்குழந்தைகள் “தாத்தா கதை சொல்லிவிட்டுப் போ” என்று அலுவலகம் செல்ல விடாமல் கழுத்தை கட்டிக் கொண்டு புரளுவார்கள். அவர் மனைவி தூரத்திலிருந்து அதையெல்லாம் வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாள்.
அதெல்லாம் ஒரு காலம்.
அப்போது இந்த மர நாற்காலியில் இவரைத் தவிர யாரும் உட்கார மாட்டார்கள்.
காலம் தான் பம்பரம் போல் ரொங்குகிறதே . பணியிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து ஒவ்வொன்றாய் அவரை விட்டுப் போயிற்று. உறவு, மரியாதை, பாசம் , அன்பு இத்யாதி… இப்படி எல்லாமே போயிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை விட்டுப் போகவே மாட்டாள் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த அவரது மனைவியும் கூட ஓர் நாள் அவரை விட்டுச்
சென்று விட்டாள்.
கடைசியில் அவரிடம் மிச்சமிருப்பது இந்த உடைந்த நாற்காலியும் கல்லைப் போல கெட்டி தட்டிப் போன இந்த வறட்டுத் தனிமையும் தான்.
இப்படி நீக்க மற நிறைந்து வழியும்
வெறுமையை எப்படி நிரப்புவது என்றே அவருக்குத் தெரியவில்லை. குறைந்தது நாயின் பாஷை தெரிந்தாலாவது அதனிடம் கொஞ்சம் பேசலாம். அது மட்டும் என்ன , இவரைப் பார்த்தால் ஒரு மரியாதைக்கு வாலாட்டுவதை கூட நிறுத்தி விட்டது.
கடைசியாக அவருக்கு மனமுவந்து உதவ வந்தது இந்த பழைய நாற்காலி தான். ஆம்
சமீப காலமாக அது அவருடன் பேச ஆரம்பித்திருக்கிறது. அவர் என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்கிறது.
ஏதாவது மறந்து போனால் அவருக்கு அதை எடுத்துக் கொடுக்கிறது. சில நேரங்களில்
அவர் பெயரைக் கூட அது தான் அவருக்கு ஞாபகமூட்டுகிறது.
பல காலமாக அது அந்த வீட்டில் இருப்பதால் . எல்லா நிகழ்வுகளும் அதற்கு அத்துப்படி.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சமீப காலமாக அந்த நாற்காலி அவருடன் உரையாட ஆரம்பித்திருக்கிறது. அதாவது நீண்ட காலமாக நெருங்கிப் பழகும் ஒரு சினேகிதனோடு உரையாடுவது போல அது அவரோடு மணிக்கணக்காக உரையாடிக் கொண்டிருக்கிறது. அவரும் தான்.
இதில் . என்ன பிரச்சினை யென்றால் இதை அந்த வீட்டில் வேடிக்கை பார்ப்பவர்களெல்லாம் , தலையில் தலையில் அடித்துக் கொண்டு செல்கிறார்கள்.
