தங்கேஸ்/நான் ஒரு எளிய கதை சொல்லி


நான் ஒரு எளிய கதை சொல்லி
உனக்கொரு சிறிய கதை சொல்வேன்

துயரத்தில் சாளரத்தில்
தென்படும்
மங்கலான முகம்
என்றும் உன் பார்வைக்கு தெரியாது

தவிரவும் உன் போல்சாயம் பூசிய
உதடுகளால் கவர்ச்சிகரமாக
எனக்கு முத்தமிடவும் தெரியாது

பண்டமாற்று போல் விருப்பங்களை
முகநூலில் பரிமாறிக்கொள்ளும்
சூட்சுமத்தில் நான் பூஜ்யம்
பசிய மலைநெல்லியையும்
எளிய வேலியோரப்பூக்களையும்
யார் சந்தைப்படுத்தக்கூடும்?

கடவுளே தான்…
ஒரு புன்னகைக்கும்
சற்று அதிகமாக விரியும்
உதடுகளை சபித்துவிட்டு
மூடிக்கொள்வாய் நீ

ஒரு எளிய கதைசொல்லிக்கு
சமய சந்தர்ப்பம் தெரியாது

ஒரு இளம் பச்சை மரம் முழுவதும்
கொத்து மஞ்சள் அரளிப்பூக்கள்
அதில் அதனதன் இயல்புக்கு
குதித்து தாவும் அணில்கள்
புத்தம் புது மலர்கள் உதிர்வiதை
அறியாததால் பாவத்தில்
அவைகளின் பங்கு ஏதுமில்லை

காற்று அதை வாஞ்சையாக
தன் உருவமற்ற கரங்களில்
ஏந்திச்செல்கிறது என்பது உனfக்கொரு விசயமில்லை
மேலும் நான் ஒரு எளிய கதை சொல்லி என்பதும்