
டேவிட் அழுகையை அடக்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு அப்படியே சரிந்து உட்கார்ந்தார். முழுக்கை சட்டையும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தும் குளிர் அவரை வாட்டியது. அருகில் நெருப்பு கனன்று கொண்டிருந்தது. ஆனாலும் குளிரை
டேவிடால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனதின் ஒரு மூலையில் ஏக்கம். மகன் டோனி தன்னை வந்து பார்க்காதது. மனைவி ரோஸி இறந்த பின்னர் இந்த தனிமைக்கு தன்னை பழக்கிக் கொண்டார். ஆனால் இந்த குளிர் வந்தால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்த ஊரில் இருக்கும் மகன் மாதத்திற்கு ஒரு முறை வந்து போய்க் கொண்டிருந்தான். கடந்த ஆறு மாதங்களாக எட்டிக்கூட பார்க்கவில்லை. அவனுக்கு என்ன பிரச்சனையோ?
பசி வயிற்றைக் கிள்ளியது. எழுந்திருக்க முடியாமல் கால்கள் இரண்டும் கனத்தன. நினைவு பின்னோக்கிப் போனது. ரோஸி எப்படி அவரைக் கவனித்தாள்.. இப்போது இப்படி தனியே தவிக்க வேண்டி இருக்கிறது. பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லை.
அப்போது திடீரென்று கதவைத் திறந்து கொண்டு ஒரு எட்டு வயது சிறுவன் தட்டில் ரொட்டித் துண்டுகளும் , பழங்களையும் கொண்டு வந்து, ” தாத்தா, இந்தாங்க, அம்மா கொடுக்கச் சொன்னாங்க என்று சொல்லி விட்டு தட்டை மேஜை மீது வைத்து விட்டு பதிலுக்குக் காத்திராமல் சிட்டாய் பறந்து சென்றான். பசி மயக்கத்தில் இருந்தவருக்கு அந்த ரொட்டித் துண்டு அமிர்தமாக இருந்தது. மனித நேயம் உள்ள மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவருக்கு புது தெம்பைக் கொடுத்தது. மெதுவாக எழுந்து சாப்பிட்ட தட்டைக் கழுவி வைத்து விட்டு மீண்டும் நாற்காலியில் வந்தமர்ந்தார். மனதார அந்த இறைவனுக்கு நன்றி சொன்னார். புகைப் படத்திலிருந்து ரோஸி அவரைப் பார்த்து
புன்னகைப்பது போல இருந்தது
11/06/2024
