விஜயலக்ஷ்மி கண்ணன்/சபாபதி

நிசப்தம். எங்கும் எதிலும் நிசப்தம்.
இதயம் துடிப்பு மட்டும் தனியாக கேட்கிறது.
சுற்றிலும் இருள் படர்ந்து விரிந்து கிடந்தது. எதுவும்
கண்களுக்கு புலப்படாத கருமை. அசைந்த காற்று கூட சத்தம் போடாமல் வருடிச் சென்றது.

இரவு சுமார் பத்து மணயளவில் சபாபதி கையில் கனத்தப் பெட்டி ஒன்றுடன் தன் வீட்டிலிருந்து வெளியே இறங்கி நடந்தார்.
வீட்டு கதவை கூட பூட்டவில்லை.
அவர் மூச்சாக இருக்கும் அந்த கிட்டார் தோல் பையோடு அவர் இடது தோளில் இன்னும் சொந்தம் கொண்டாடியது.
சபாபதி தலையில் தொப்பி ஒன்றை மாட்டிக்கொண்டு கால் போன போக்கிலே நடந்தார்.மார்கழி பனியும், ஜில்லென்ற காற்றும் அவர்க்கு சுகம் அளிக்கவில்லை. மாறாக எரிச்சலை மேலும் கொதிப்படைய செய்தது.

நாற்பது வயது ஆகியும் இன்னும் ஒரு பெயர் சொல்லக் கூடிய வேலையில் இல்லை.மனைவி சங்கீதாவின் இரயில்வே சம்பளம் தான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக உதவுகிறது.
வாரத்திற்கு ஒரு முறையாவது கணவன் மனைவிக்கிடையே சண்டை,
வாக்குவாதம் நடக்கும்.

குழந்தை பிறக்கவில்லை என்பதும் சங்கீதாவுக்கு ஒரு குறையாகவே இருந்தது. சபாபதி அதைப் பற்றி யெல்லாம் கவலைப் படவில்லை.
நேற்று இரவு நடந்த வாக்குவாதம் முற்றி இருவருடைய சுயமரியாதையைகுழி தோண்டி புதைத்து விட்டது.
சங்கீதா இன்று காலையிலே தன் பெட்டியுடன் மயிலாப்பூரில் உள்ள பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
அடிக்கடி நடக்கும் சம்பவம் தான் என்றாலும் இந்த முறை சபாபதிக்கு சற்று அதிக தாக்கத்தை உண்டு பண்ணியது.
இரவு வரையிலும் பார்த்த பிறகு,சங்கீதா வீடு திரும்பாததால் இனி இது
சரி வராது என்று ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்ட சபாபதி இதோ நடை.
நடந்து நடந்து வெகு தூரம் போனதும் நேராக ரயில் தண்டவாளங்கள் அந்த காரிருளிலும் தெரிந்தன.
எதற்கும் அசையா மனதோடு முடிவுத் தேடி தொடர்ந்து நடை.
ஒரே ஒரு விளக்கு கம்பம் வெளிச்சத்தை நிலவொளி போல்
பளிச்சிட்டு காட்டியது.
விறு விறு என்று வேகமாக தண்டவாளத்தின் நடுவே சபாபதியின் நடை.
போதும் இந்த வாழ்கை. யாருக்கும் சந்தோஷமும் திருப்தியும் இல்
லா வாழ்கை! மனைவியும் புரிந்துக் கொள்ளவில்லை.

கேவலம் நிரந்தரமாக சம்பாதிக்க வில்லை என்பதால் மனிதன் என்ற மதிப்பு கூட இல்லை.
தந்தையும் ஏற்று கொள்ளவில்லை.
என்ன கேடு கெட்ட வாழ்கை என்று சலித்துக் கொண்டபோது கால்கள் இன்னும் இன்னும் வேகத்தோடு நடைப் போட்டன.
திடீென்று ஒரு கனத்த கறுத்த கை சபாபதியின் இடது தொள் மீது அழுத்தியது.
“என்ன சபா, இந்த நேரத்தில்?இந்த தண்டவாளப் பாதையில்?”
திரும்பி பார்த்த சபா அருகே தன் பள்ளிக்கூட நண்பன் சரவணன்.
சரவணன் அவனைப் பிடித்து பக்கவாட்டில் தள்ளிக் கொண்டே
கூட நடந்தான். இன்னும் ஒரு கிலோமீட்டர் சென்றால் ஒரு இரவு டீக் கடை தென்படும்.
சரவணன் தென்னக இரயில்வேயில் சிக்னல் இன்ஸ்பெக்டர்.
“ரயிலில் விழுந்து உயிரை விடும் அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை சபா?”
அருகில் மரத்தடியில் ஒரு பெஞ்ச் கண்டதும் இருவரும் உட்கார்ந்தார்கள்.
சபாபதி தன் பக்கம் கதையை சொல்ல சரவணன் ஆசுவாசப் படு்த்தி
புரிய வைக்க முயற்சித்தான்.
“உன் மனைவி மிகவும் வருத்தப்பட்டு இன்று என்னிடம்
ஃபோனில் பேசினாள்.
நீ வேலைக்கும் போவதில்லை. எந்நேரமும் கிட்டாரை வாசித்துக் கொண்டு வீட்டில் எந்த வேலையிலும் கவனம் இல்லாமல் இருந்தால் அண்ணி மட்டும் என்ன செய்வார்கள் சபா?
வேலைக்கும் போய் வீட்டையும் கவனிக்க அவள் தனியாக, மனசு வெறுத்து தான் போகும். நீயும் புரிந்து கொள் .
ஆணுக்கு லட்சணம் உத்யோகம்.
நிதானமாக நீயே யோசித்து பார்.
இதுக்காக உயிரை மாய்த்து கொள்ளவா செய்வார்கள்?
நீ ஒன்றும் முட்டாள் இல்லையே!
உன் போக்கை திருத்திக் கொள்.”
“நடு இரவு.
என்னோடு வா.காலையில் உன்னை அண்ணியிடம் கொண்டு விடுகிறேன்.”
அப்பொழுது தான் ஒரு ரயில் அவ்வழியே பாய்ந்து செல்லும் சத்தம் கேட்டது.
சற்று நேரம் விட்டிருந்தால் சபாபதியை விழுங்கி இருக்குமே இந்த ரயில் என்று இருவரும் நினைத்த மாத்திரம்
நண்பர்கள் ஒருவர் ஒருவரை கட்டி தழுவிக் கொண்டார்கள்.
சபாபதிக்கு இனி புது வாழ்வு.