அ. முத்துலிங்கம் /உங்களுக்கு சன்மானம் உண்டா..

சமீபத்தில் மின்னஞ்சலில் ஓர் ஓவியர் தொடர்புகொண்டார். பத்திரிகைகளில் வரும் என்னுடைய சிறுகதைகளுக்கு தான் படம் வரைந்திருப்பதாகக் கூறினார். என்னுடைய முதல் கேள்வி ’உங்களுக்கு சன்மானம் உண்டா? என்பதுதான். அவர் உண்டே என்று மட்டும் பதிலளித்தார். எவ்வளவு சன்மானம் என்று நாகரிகம் கருதி நான் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. ஆனால் பத்திரிகை ஆசிரியர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. ’எங்கள் பத்திரிகையில் எழுதுவதால் உங்களுக்கு பேரும் புகழும் கிடைக்கிறது. நாங்கள் எழுத்தாளருக்கு சன்மானம் எதுவும் வழங்குவதில்லை.’ அது நல்ல சமாதானமாகத்தான் பட்டது. ஆனால் ஓவியக்காரருக்கு மட்டும் பேரும் புகழும் கிடைப்பதோடு சன்மானமும் கிடைத்தது. இது எப்படி நியாயம் என்பது எனக்கு தெரியவில்லை.

’எதற்காக சிறுகதைகளுக்கு ஓவியம் வரைகிறார்கள்?’ என்று அதே பத்திரிகாசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னார், ’ஒரு நல்ல சித்திரம் வாசிப்பை தூண்டுகிறது’ என்று. ’சித்திரமே இல்லாவிட்டால் வாசகர் என்ன செய்வார்?’ என்று கேட்டேன். அவர் ’வாசகர் வாசிக்காமல் போகக்கூடும்’ என்றார். ’வாசகர்கள் படங்களைப் பார்த்து ஈர்க்கப்படுகிறார்கள் என்றால் படங்களை மாத்திரம் பிரசுரிக்கலாமே?’ எனக் கேட்டேன். அதற்கு அவரிடம் பதில் இல்லை. அவர் தன் பத்திரிகையில் படம் வரையும் ஓவியர் ஒருவருக்கு கொடுப்பதாகச் சொன்ன பணம் நான் என் வாழ்நாளில் சிறுகதை ஒன்றுக்கு பெற்ற ஆகக்கூடிய சன்மானத்திலும் பார்க்க இரண்டு மடங்கு அதிகமானது. ஆனால் கட்டுரையையோ கதையையோ எழுதியவருக்கு ஒரு சதம்கூட கொடுக்காமல் இருப்பது அவருக்கு குற்றமாகத் தெரியவில்லை. ஒரு படத்தை காட்டி வாசகரை இழுத்து என் கட்டுரையையோ கதையையோ படிக்க வைப்பது எனக்கு பெரிய இழுக்காகப்பட்டது. என்னை என்றுமில்லாத விதமாக ஒருவிதமான துக்கம் ஆட்கொண்டது. (இதே கட்டுரையோ சிறுகதையோ புத்தகமாக வெளிவரும்போது அங்கே சித்திரங்கள் ஒன்றுமே இரா என்பது நினைவுக்கு வந்தது. புத்தகத்தை வாங்கும் வாசகர்கள் அதில் உள்ள எழுத்தை மட்டுமே படிப்பதற்கு வாங்குகிறார்கள். அது பெரிய ஆறுதல்.) சித்திரக்காரருக்கு சன்மானம் வழங்கும் பத்திரிகை அந்தக் கதையையோ கட்டுரையையோ கவிதையையோ எழுதிய ஆசிரியருக்கும் சன்மானம் வழங்கவேண்டும். இல்லையேல் இருவருக்கும் ஒன்றுமே வழங்காமல் இருக்கலாம். ஆனால் சித்திரக்காரருக்கு கொடுத்து ஆசிரியரை நிராகரிப்பது உச்சகட்டமான அவமானம் என்றுதான் எனக்குப் பட்டது.

முதலாம் உலக யுத்தம் நடந்தபோது ஒரு போர்வீரனிலும் பார்க்க குதிரை பெறுமானம் உள்ளதாகக் கருதப்பட்டது. ஒரு போர்வீரனும் குதிரையும் ஆபத்தில் இருந்தால் முதலில் குதிரை காப்பாற்றப்பட்டது; பின்னர்தான் போர்வீரன். குதிரை பீரங்கியை இழுக்கும், ராணுவத்துக்கு தேவையான உணவுப் பொதிகளை காவும். போர்வீரனைக் ஏற்றிக்கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்யும். இதுவெல்லாம் போக உணவு தீர்ந்த சமயத்தில் குதிரையைக் கொன்று சமைத்து சாப்பிடக்கூடியதாக இருக்கும். அது போலத்தான். சித்திரக்காரர் ஓர் எழுத்தாளரிலும் பார்க்க மதிப்பாக பார்க்கப்படுகிறார்.

தமிழ்ப் புலவன் எந்தக் காலத்திலும் மதிக்கப்பட்டது கிடையாது. அதியமான் நெடுமான் அஞ்சியின் வாசலில் நெடுங்காலம் நின்று வெறுங்கையோடு திரும்பிப்போன ஒளவையாரின் நினைவு வந்தது. 2000 வருடமாக வாசலில் நின்று பழகிவிட்டது. தமிழ் படைப்பது என்றால் அப்படித்தான்.

(முகநூலில் : ஆர்.கந்தசாமி)

One Comment on “அ. முத்துலிங்கம் /உங்களுக்கு சன்மானம் உண்டா..”

Comments are closed.