
இம்முறையும் பொஸ்டன் போனபோது வழக்கமான புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். பொஸ்டனில்தான் பிரபலமான Barnes and Noble புத்தகக் கடை உள்ளது. ரொறொன்ரோவில் பார்க்கமுடியாத புத்தகங்களையெல்லாம் அங்கே காணலாம். பின்னட்டைகளைப் படித்தபடியே ஒரு மணி நேரத்தை ஓட்டிவிடலாம். நான் நாலு புத்தகங்கள் வாங்கினேன். என்னுடைய தெரிவு புத்தகங்களின் பின்னட்டைகளை வாசித்தும், பத்திரிகை மதிப்பீடுகளைப் படித்தும் நண்பர்களின் பரிந்துரைகளை கணக்கிலெடுத்தும் முடிவு செய்யப்பட்டது.
வீட்டுக்கு வந்து புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். முதல் மூன்று புத்தகங்களும் முப்பது பக்கங்களை தாண்டவில்லை. முப்பது பக்கங்கள் என்பது கூட்டுத் தொகை. எவ்வளவு முயன்றும் உள்ளே நுழைய முடியவில்லை. முன்னர் என்றால் காசு கொடுத்து வாங்கிவிட்டோமே என்று கல்வயலை உழுவதுபோல இடறி விழுந்து எழுந்து விழுந்து ஒருவாறு முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன்.
இப்பொழுதெல்லாம் அப்படிச் செய்வதில்லை. நேரம் முக்கியமானது. புத்தகம் என்பது அறிவைக் கூட்டவேண்டும் அல்லது வாசிப்பு இன்பத்தைக் கூட்டவேண்டும் அல்லது சொல்வங்கியைக் கூட்டவேண்டும். விருப்பமில்லாத, ஈர்ப்பில்லாத ஒரு புத்தகத்தை எதற்காக இந்தப் பாடுபட்டு படித்து முடிக்கவேண்டும். என் மனைவி கேட்பதுபோல ஏதாவது பரீட்சை எழுதப் போகிறேனா? எனவே நிறுத்திவிட்டு இன்னொரு புத்தகத்தை தொடங்க வேண்டியதுதான்.
நாலாவது புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். அது என்னைக் கைவிடவில்லை.
(,முகநூலில் ஆர்.கந்தசாமி)
