
சுகா: இப்போ வர்ற எழுத்துகள் எதையும் படிக்க முடியாமல் இருப்பது தேக்கமா?
வண்ணநிலவன்: தேக்கமா என்னன்னு தெரியல, எனக்கு முடியல. சிலது படிக்கோம், சிலது படிக்கலை. தேவைக்குப் படிக்கோம்னு வைங்க. அது உள்ள இழுத்துக்கிட்டு போகணும்லா? அது இல்ல. அதை நீங்கதான் செய்யணும், நானா செய்ய முடியும்? நான் வாசகன்தான், நிறைய படிச்ச வாசகன், கொஞ்சம் தெரிஞ்சவன். இந்த வாசகனை உள்ள இழுக்கறது ஒங்க வேலைதான். அது இப்ப இல்லை.
முன்னாடி எம்எல்வி கச்சேரி நெறய கேட்டிருக்கேன். சின்ன வயசுலயும் கேட்டிருக்கேன் அப்புறமும் கேட்டிருக்கேன், ரொம்ப ராக அனுபவம்லாம் கெடையாது. மைலாப்பூர் சீனிவாஸ் சாஸ்திரி ஹால்ல ஒரு தடவை பாடினாங்க. எங்க வீடு அந்தப் பக்கம் இருந்தது. கச்சேரி நடந்தா அடிக்கடி அந்தப் பக்கம் போவேன். அப்ப லதாங்கின்னு ஒரு ராகம் பாடினாங்க. எனக்கு கண்ணீர வந்துட்டு. அப்புறம்தான் அது என்ன ராகம்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். அழுதுக்கிட்டு இருக்கேன் நான். கண்ணீர் வடியுது அந்த ராகம் கேட்டு. அவ்வளவு அற்புதமா பாடியிருக்காங்க. அதுக்கு முன்னாடி நான் அவங்க கச்சேரி பல தடவை கேட்டிருக்கேன். ஆனா அன்னைக்கு அந்த ராகம் கேக்கும் போது அப்படி குழைவா இருந்தது. இப்ப உள்ள சங்கீதத்தைக் கேட்டா அப்படியெல்லாம் ஏதும் சொல்லத் தோணல. சுதா ரகுநாதன்லாம் பாடுதாங்க. இருக்கு. கடகடன்னு ஒரு ராகத்தைப் பாடி முடிச்சுட்டு போறாங்க. எம்எல்வி ராகம் எப்படி உங்களை பாதிச்சது, எப்படி மனசுக்குள்ள புகுந்தது, அந்த வித்தியாசம்தான் அப்போ உள்ள எழுத்துக்கும், இப்போ உள்ளதுக்கும். இப்போ வர்ற எழுத்தெல்லாம் ஒண்ணுமே இல்லாத மாதிரி இருக்கு.
ஆனா எல்லாரும் படிக்காங்க இப்ப. அப்படி நெறைய படிச்சாலும் வாசகனோட தேவையே ரொம்ப கீழடைஞ்சுதட்டுது அப்படின்னுதான் நெனைக்கென். சோ ‘எல்லாமே கீழ இறங்கிக்கிட்டு இருக்கு. எல்லா துறையிலுமே ஸ்டாண்டர்ட் கீழேதான் இறங்கிக்கிட்டு இருக்கு’ அப்படிம்பார். நான்கூட ‘அப்படிச் சொல்லாதீங்க. நீங்க பாத்தது அடுத்தவன்கிட்ட இல்லேங்கறதுக்காக அப்படிச் சொல்லாதீங்க அப்படின்னு’ அவர்கிட்ட ஆர்க்யூ பண்ணுவேன். ‘இல்லய்யா… அது அப்படிதான்யா’ அப்படீம்பார். அது நெறைய விஷயங்கள்ல உண்மையா இருக்குமோன்னு தோணுது. நான் படிக்காததுன்னால, இவங்கல்லாம் எழுதாம இல்ல. இவங்களும் புஸ்தகம் எழுதிக்கிட்டுதான் இருக்காங்க. நெறைய வருது. அது நின்னுரும். அதையும் சொல்லத்தான் போறாங்க. இப்ப என்னை மாதிரி இந்த காலத்தில் உள்ளவன் அம்பது வருஷம் களிச்சு அவன் படிச்ச கதையை சொல்லிக்கிட்டுதான் இருக்கப் போறான். அது அப்படிதான் இருக்கும். எனக்கு நான் படிச்சதுக்கும் இந்த காலத்து எழுத்துக்கும் வித்தியாசம் இருக்கு. அதை என்னால படிக்க முடியல அப்படின்னுதான் சொல்லத் தோணுது. அது தேக்கம்னா தேக்கம்தான். அதை என்ன சொல்றது! (சிரிக்கிறார்).
(முகநூலில் ஆர்.கந்தசாமி)
