*
மஞ்சுளா கார் ஓட்டி வர புவனாவும் சித்ராவும் அவளுடன் சேர்ந்து கொண்டனர். வாராந்திர விடுமுறையை கழிக்க மகாபலிபுரம் வந்தனர். அன்று புவனாவின் பிறந்த நாளை ஒட்டி நீண்ட நாட்கள்,ஏற்பாடு யோசனைக்குப் பிறகு, மூன்று வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்.உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்! ஒரே குதூகலம்! கும்மாளம்! தோழிகள் மூவரும் கடற்கரையில் இன்பமாக பேசி மகிழ்ந்தனர்... சிறிது நேரம்தான்.
அலுவலகத்தில் இருந்து சித்ராவுக்கு அழைப்பு."ஒரு முக்கியமான கஸ்டமர் கால். ஒரு அரைமணி நேரம் எனக்காக... பிளிஸ் என்று கெஞ்சும் குரலில் அவள் மேலதிகாரி. வேறுவழியின்றி " சாரி! கேர்ள்ஸ்! பிளீஸ் , பார்டன் மீ " என்றவாறு தன் லேப்டாப்பை தேடி ஓடினாள்; சித்ரா. போனவள், போனவள் தான் மணி இரண்டாகியும் சாப்பாட்டு மேஜைக்குக்கூட வரவில்லை
அடுத்த அரை மணி நேரத்தில் மஞ்சளாவின் போன் அலறியது. அவள் கணவன் தான். "அப்பா கீழே விழுந்துட்டாரு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே வா. ஆபரேஷன் பண்ணணும் போல தெரிகிறது. வழியில் பையனை டே கேர் சென்டரிலிருந்து பிக்கப் பண்ணிண்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வா" என்று பதட்டமாய் பேசினான். வேறு வழியின்றி மஞ்சுளா கிளம்பிப் போக; புவனாவுக்கு வெறுப்பாகவும், சலிப்பாகவும் ஆயாசமாகவும் இருந்தது. " எத்தனை நாள் பிளான் பண்ணி ஏற்பாடு செய்ததெல்லாம் வீணாகப் போய் விட்டதே.
"பெண்களுக்கு எங்கே விடுமுறை; உல்லாசம் எல்லாம். எங்கே இருந்தாலும் பொறுப்புகளும் கடமைகளும் குரல் கொடுத்துக் கொண்டுதான் உள்ளன.சுமைகள் தான்; ஆயினும் அதில் ஒரு திருப்தியும்; கடமைகளை செவ்வனே முடிக்கும் லாவகமும் நமக்கு சிறப்பைத் தானே சேர்க்கிறது" என்ற நினைப்பில் கடல் காற்று தாலாட்ட, சற்றே கண்ணை மூடி உறங்கினாள்; சித்ரா வந்து, எழுப்பும் வரை.