
உடலில் ஒன்று
மனதில் ஒன்று
ஆன்மாவில் மூன்றாவது எத்தனை
எத்தனை கயிறுகள் முளைக்கின்றன
உன்னை கட்டுவதற்கு
பெண்மை கற்பு
வேதாந்தம்
வியாக்கியானம்
கலாச்சாரம் பண்பாடு
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
இத்யாதி இத்யாதி
ஒவ்வொன்றும் உன் இயல்பின் மீது
அறையப்படும் தந்திர ஆணிகள்
உன் சுதந்திரத்தின் மீது
வலி தெரியாமல்
கீறிப் பார்க்கும் கத்திகள்
தேவர்களும் உதவிக்கு வருவதில்லை
அந்த தெய்வங்களும் உதவிக்கு வருவதில்லை
உதவிக்கு வருகிற ஒன்றிரண்டு பேர்களும்
எதிர்பார்ப்பில்லாமல்
எட்டிப் பார்ப்பதில்லை
அடிமைத்தளைகளை அறுத்தெறிய
உதவி தேட வேண்டியது வெளியில் அல்ல
உண்மையில்
உனக்குள்ளே தான்
தேட வேண்டும்
அங்கே உன்னிலிருந்து சுயம்புவாய் முளைத்து வர
ஒரு முழு விக்கிரகம் காத்திருக்கிறது
அடிமைத்தளைகளை
அறுத்தெரிய
நூறு கைகள் நொடியில்
முளைத்து விட தயாராக இருக்கின்றன
அதிகாரத்தின் பிடரியை
பிடித்து உலுக்க
அளவற்ற ஆற்றல்
காத்திருக்கிறது
ஒரு நேர்மையான
உலகத்தைப் படைத்துக் காட்ட
பிரபஞ்ச சக்தி
பிரளயமென பொங்கிக் கொண்டிருக்கிறது
