பி. ஆர்.கிரிஜா/பேய் பொம்மை

ராமிற்கு தூக்கத்தில் ஒரே பேய் கனவாக வந்தது. பதறி அடித்து எழுந்தான். மணி ஏழைத் தாண்டி விட்டது. வேக வேகமாக குளியலறை நோக்கி நடக்க, அவன் காலில் ஏதோ இடறியது.
குனிந்து பார்த்தான். பஞ்செல்லாம் வெளி வந்து உருவம் உரு மாறிய ஒரு பார்பி பொம்மை. இது எப்படி இங்கு வந்தது என்று ஒரு நிமிடம் பேயறைந்தது போல் அப்படியே நின்று விட்டான். முந்திய நாள் பக்கத்து வீட்டு குழந்தை கொண்டு வந்து விளையாடியது நினைவிற்கு வந்தது. இதே மாதிரி ஒன்றுதான் அவன் கனவில் வந்து அவன் தூக்கத்தைக் கலைத்தது.
அவனுக்கு லேசாக உதறல் எடுத்தது. அதை எடுத்து ஓரமாக வைத்து விட்டு சுதாரித்துக் கொண்டு குளிக்கச் சென்றான். பர பரவென்று மற்ற வேலைகளை முடித்து விட்டு கதவைப் பூட்டி விட்டு அலுவலகம் கிளம்பினான். அங்கும் அவனுக்கு இந்த பொம்மையே மனதில் சுற்றிச் சுற்றி வந்தது. எப்படியோ சமாளித்து
வேலையில் முழு கவனம் செலுத்த முற்பட்டான்.
மாலை வீட்டிற்குள் கதவைத் திறந்து மெதுவாக உள்ளே நுழைந்தான்.
அப்போது அதே பொம்மை சோபாவில் நடுநாயகமாக அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்து சத்தமாக சிரித்தது. பயத்தில் தொப்பென்று கீழே சரிந்தான் ராம்.


25/06/2024