சசிகலா விஸ்வநாதன்/செவ்வந்தி

           "ஐயா மேலத்தெரு செவ்வந்திக்கு  அரச மர முனி ஏறிடுச்சாம். அவ சித்தி உங்கள இட்டார சொன்னாங்க" பக்கிரி வந்து சொல்லவும்  சாமிக்கண்ணு திடுக்கிட்டார். நேற்று மாலை அவளை கோயிலில் கண்டு, பேசினேன் ! நன்றாகத்தான் இருந்தாள். புத்திசாலி. குடிகார அப்பனுக்குப் பிறந்து மாற்றாந்தாய் கொடுமையை அனுபவிக்கும் பாவம் பட்ட ஜன்மம்.  டீச்சர் வேலைக்குப் படித்து பரிட்சை எழுத, களையக்கா விளையில் வேலைக்கு பணி உத்தரவு  கம்ப்யூட்டரிலும், தபாலிலும் வந்துள்ளது என்பதை மகிழ்வுடன் சொன்னாள். சித்தி, "வேலைக்கெல்லாம் போக வேண்டாம். என் தம்பியை கட்டிக்கிட்டு வீட்டோட இரு"என்று சொல்கிறாள் என்று வருத்தப்பட்டு பேசினாள். 
             அவர் என்ன செய்ய முடியும்? ஆறுதலாக இரண்டொரு வார்த்தை பேசி விட்டு தன் வீடு  சேர்ந்தார்.
             "ஐயா!  போக வேண்டாமா" என்று  பக்கிரி கேட்க; "பையை எடுடா! ஒரு எட்டு பார்த்திட்டு வந்திடலாம்'' என்று கிளம்பினார்.
        செவ்வந்தி வீட்டில்  ஒரே கூட்டம். செவ்வந்தி கையில் புத்தகப் பையுடன்  நிற்காமல் பேயாட்டம் போட்டது,அனைவரையும் கதி கலங்க வைத்தது. அவர் கூட்டத்தை  கலைத்து அவள் முன்னே போய் உட்கார்ந்தார்.  வேப்பிலை அடித்து உரத்த குரலில் பேசத் தொடங்கின தருணத்தில், செவ்வந்தி அவரிடம் ஓரு சீட்டை எவரும் பார்க்காமல் தள்ளி விட்டாள். 
           சீட்டை படித்தவர்,அயர்ந்து போய்விட்டார்.ஒரு நிமிடம் யோசனைக்கு அப்புறம்,அவள் சித்தி பழனியை கண் சாடையில் கூப்பிட்டு அந்தி சாய ஓரு பொழுது "இருக்கையில் வீட்டிற்கு கூட்டி வா. அரச மரத்தில் ஆணி அடித்து முனியை கிளப்பி விடலாம்" என்று சொல்ல; கூட்டம் கலைந்தது. செவ்வந்தி வெறுமனே ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்க; சாமிக்கண்ணு 

செவ்வந்தியைப் பார்த்து ஒரு தரம் கண்சிமிட்டி, புன்னகை புரிந்து, அவ்விடம் விட்டு கிளம்பினார்
சாயங்காலம் ஐந்து மணி அளவில் புத்தகப்பையும்கையுமாக செவ்வந்தியும், பழனியும் அவர் வீடு வந்து சேர்ந்தனர்.
முனி பூசைக்கு வேண்டிய சாமானை சித்தம் செய்ய பழனியை வீட்டினுள்ளே அனுப்பவும் மேற்கே திருநெல்வேலிவரை போகிற பேருந்து வரவும் சரியாய் இருந்தது. என்கையில் இருந்த இருநூறு ரூபாய் தாள் எடுத்து செவ்வந்தி யின் கையில் அழுத்த; புத்தகப் பையுடன் அவள் சிட்டாய் பறந்து பேருந்தில் ஏறிவிட; நடத்துனர் விசில் சத்தம் இனிமையாய் இருந்தது அவருக்கு. உள்ளிருந்து வெளியே வந்த பழனிக்கு ஒன்றும் புரியவில்லை.
” என்னங்கையா! அந்த சிறுக்கி மக எங்க போனா” என்று கேட்க; “கிழக்கால கம்மாய் பக்கம் ஒடிடுச்சு” என்று பதிலளித்தார்.
இப்போது பழனிக்கு தான் முனி ஏறின மாதிரி இருந்தது. ஓலமிட்டபடி அவள் கம்மாய் பக்கம் ஓட; சாமிக்கண்ணு தனக்குள் சிரித்துக் கொண்டார்.
“அது சரி!சீட்டில் என்ன எழுதியிருந்தது”, என்று கேட்கிறீர்களா; என்னவோ எழுதியிருந்தது! உங்களுக்காக அது எழுதப்படவில்லை.அதை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அரச மரத்து முனியை ஒட்டி விட்டாரா; இல்லையா?