
பட்டாம் பூச்சி’ என்னும் ஹென்றி ஷாரியரின் இந்த நாவல் முதலில் ‘ப ‘பாப்பில்லான்’ என்கின்ற தலைப்பில் ஃப்ரெஞ்சு மொழியிலும், ஆங்கிலத்திலும் பின்னர் ஏறக்குறைய மற்ற முக்கிய மொழிகள் எல்லாவற்றிலும் வந்து கோடிக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்து, ஸ்டீவ் மக்வீன், டஸ்டின் ஹாப்மன் நடித்த ஒரு முக்கியத் திரைப்படமாகவும் (1973) வெளிவந்தது.
ராகி. ரங்கராஜனின் கைவண்ணத்தில் தமிழில் ‘குமுதம்’ பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்தபோது இந்த மொழிபெயர்ப்பின் தரத்தைப் பற்றியும், கதையின் சுவாரஸ்யத்தைப் பற்றியும் பலர் என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மொழிபெயர்ப்பு சுலபமல்ல. மொழிபெயர்ப்பவர் ரங்கராஜன் போல ஒரு தேர்ந்த எழுத்தாளராக இருப்பது முக்கியம் என்பேன். இல்லாவிட்டால் நாவலின் ஜீவனைப் பிடிக்காமல் பண்டிதத்தனமாக இருக்கும். மேலும் அன்றாடச் சொற்களைக் மொழிமாற்றும்போது கலாச்சார மாறுதலால் நிகழக்கூடும் விபரீதங்களைத் தவிர்க்க வேண்டும்.

The traffic was paralysed’ என்பதை, ‘போக்குவரத்து திணறிப் போயிற்று என்று மொழிபெயர்க்க வேண்டுமே தவிர, ‘போக்குவரத்துக்குப் பக்கவாதம் ஏற்பட்டது என்று சொல்லக்கூடாது. மேலும் கதையின் ஆதாரமான செய்தியை, தொனியை, பிடித்துக்கொண்டு அதிலிருந்து பிசகக்கூடாது. இந்தக் கதையின் ஆதார தொனி விடாமுயற்சி பட்டாம்பூச்சியின் உயிர் வாழும் வேட்கை, என்ன கஷ்டங்கள் வந்தாலும் தப்பிக்கப் போகிறேன் என துன்பத்தின், துன்புறுத்தலின் எல்லைகளைச் சமாளித்து அந்த ஓர் ஆசை மட்டும் உந்து சக்தியாக அவன் என்னதான் மூர்க்கத்தனமானவனாக இருப்பினும் அவன் மூர்க்கத்தனத்தின் சூழ்நிலையை உணர வைத்து அவன் மேல் அனுதாபம் பிறக்க வைக்கிறது நமக்கு. அவனை நேசிக்க வைக்கிறது.
இந்தப் புத்தகத்தின் வெற்றிக்குக் காரணம் உலகம் முழுவதும் இம்மாதிரிய அராஜகங்களும், துன்ப எல்லைகளைத் தொடும் சம்பவங்களும் நிகழ்வதுதான்; உலகில் நம் எல்லோருக்குமே பிடிவாதமாக உயிர் வாழும் ஆசை இருப்பதுதான்
ரங்கராஜனின் மொழிபெயர்ப்பின் சரளத்துக்கு முக்கிய காரணம் அவரும் ஓர் படைப்பாளர் என்பதை மீண்டும் அடித்துச் சொல்வேன்.
எவ்வளவு ஜீவனுள்ள கற்பனைகள்! அத்தகைய சூழ்நிலையில் எந்த ஒரு மனிதனும் இரண்டாகப் பிரிந்து விடுவான். அவனுக்குச் சிறகுகள் முளைக்கின்றன) எங்கெல்லாம் விருப்பமோ அவனுடைய இல்லம், அவனுடைய தந்தை, தாய், குடும்பம், இளமைப் பிராயம், அங்கெல்லாம் பறக்கிறான். அவனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையெல்லாம் அவன் காணுகிறான். அவனுடைய வளஞ்செறிந்த உள்ளத்தில் கற்பனைக் கோட்டைகள் எல்லாம் நம்ப முடியாத தெளிவுடன் தோன்றுகின்றன.
ஆம், நம்ப முடியாத தெளிவுள்ள மொழிபெயர்ப்பு. இதைச் செய்த ரா.கி. ரங்கராஜன், கல்கி, தேவன் போன்றவர்களுக்கு ஈடு சொல்லக்கூடியது எழுத்தாளர். இவரது எழுத்துலக முன்னேற்றம் குமுதம் பத்திரிகையுடன் இரண்டறக் கலந்துவிட்டதால் ரங்கராஜனின் முழுத்திறமைகள் பலருக்குத் தெரியாது. சொல்கிறேன்
ரங்கராஜன் சுதந்திரம் வந்த புதுசிலிருந்தே எழுதி வருகிறார் என்பது என் அனுமானம். ஆரம்ப காலங்களில் அவர் ‘கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதினார். அவருடைய சிறுகதைகள் ‘பல்லக்கு’ என்ற புத்தகமாக வெளிவந்தது. துவக்க நாட்களிலேயே குமுதம் நிறுவனத்தில் சேர்ந்து அவர்கள் ‘கல்கண்டு பத்திரிகையுடன் கூடவே வெளியிட்ட ‘ஜிங்லி’ என்கிற சுவாரஸ்யமான சிறுவர் பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக இருந்திருக்கிறார். ஜிங்லியின் அகால மரணத்திற்கு வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். பிறகு குமுதம் ஆசிரியர் குழுவில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதத் துவங்கினார். அதேசமயம் குமுதத்தில் சூர்யா என்பவர் தரமான சிறுகதைகள் எழுதி வந்தார், ‘ஹம்ஸா என்பவர் வேடிக்கை நாடகங்களும், ‘டி. துரைஸ்வாமி – துப்பறியும் கதைகளும், கிருஷ்ண குமார் திகில் கதைகளும், ‘மாலதி’ குறும்புக்கு கதைகளும், ‘முள்றி மழலைக் கட்டுரைகளும், ‘அவிட்டம் நையாண்டிக் கவிதைகளும் எழுதி வந்தார்கள்.
பிற்காலத்தில் நான் குமுதத்தில் எழுதத் துவங்கி ஆசிரியர் குழுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது ‘சூர்யாவின், ‘செய்தி! என்கிற சிறப்பான சிறுகதைக்கு ஏதோ ஒரு நிறுவனம் பரிசளித்திருந்த செய்தியில் கதையின் ஆசிரியர் ரா.கி. ரங்கராஜன் என்று குறிப்பிட்டிருந்தது. விசாரித்ததில் நான் மேற்சொன்ன அத்தனை எழுத்தாளர்களும்! ரங்கராஜன் ஒருவரே என்கிற விவரம் தெரிந்து எனக்கு அப்போது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் விலகவில்லை.
ஓர் எழுத்தாளர் கதை, கட்டுரை, நாடகம், கவிதை எழுதுவது எல்லாம் சகஜம். என்னாலேயே முடிகிறது. ஆனால் எப்படி ஒரே எழுத்தாளரால் நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்கள் போல எழுத இயலும்! இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடிதான் உள்ளார்: கல்கி.
நேரில் சந்திக்கும்போது ரங்கராஜன் இத்தனை திறமைகளையும் ஒரு சின்னப் புன்னகையில் மறைத்து விடுகிறார். ஒரு தபால் தலையில் அடங்கிவிடக்கூடிய திறமை உள்ள எழுத்தாளர்கள் எல்லாம் சுயவிளம்பரமும், பட்டங்களும், பரிசுகளும் ஏற்பாடு பண்ணிக்கொண்டு சொந்தப் பெருமையில் குளிர்காயும் சூழ்நிலையில், ரங்கராஜன் ஒரு கர்ம யோகி குமுதம் ஸ்தாபன விசுவாசம் . ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி கிடைத்தது போதும் என்கிற திருப்தி எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம். வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி, நெற்றியில் ஸ்ரீசூர்ணம், நண்பர்களைக் கண்டால் கட்டி சக அணைத்து முதுகில் ஒரு ஷொட்டு; பெரிசு பெரிசாக, குண்டு பேனாவில் எழுதப்பட்டுச் சிறகடிக்கும் எழுத்து. ஏறக்குறைய ஒரு லைப்ரரி அளவுக்கும் இவர் எழுதியிருக்கும் கதை, கட்டுரைகள் அனைத்தையும் கமலா ரங்கராஜன் பைண்டு பண்ணி வைத்திருக்கிறார். இவரது படைப்பு திரைப்படங்களாக வந்திருக்கின்றன டெலிவிஷனில் வந்திருக்கின்றன.
இத்தனை சாதனை படைத்தவருக்கு, குறைந்தபட்சம் ஒரு பொன்னாடை கூடப் போர்த்தாதது தமிழகத்தின் விசித்திரமான முரண்பாடுகளில் ஒன்று!
ஓசைப்படாமல் சாதனை படைத்த தமிழர்களில் ஒருவரான எனது இனிய நண்பர் ரங்கராஜனின் இந்தப் புத்தகத்துக்கு அணிந்துரை தரும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது ஒரு பாக்கியம்.
======================

அருமை 👏