அனங்கன்/குடைசாய்ந்த நீதி

கடுமையான சண்டைபோட்டுத்தான்
குடையை மீட்டுவந்தேன்.

ஒரே நிறுவனத்தின் குடை…
ஒரே கைப்பிடி…
ஒரேவண்ணத்தில்
இருக்கக்கூடாது என்பது
கட்டாயமில்லையே.

உணவுவிடுதியில் குளம்பி குடித்தபிறகு…
.பணம்பெறும் இடத்தில்
எனதுகுடையை வைத்தஇடத்தில் எடுத்தால்
ஒருபொடியன் வருகிறான்
எனது குடையென்று….
என்ன ஒரு அநீதி பாருங்கள்.

தர்க்கத்தில் எனது வயதைப்பார்த்து ..
அனைவரும்
என்ன பக்கமே நின்றார்கள்….
எப்படியோ குடை தப்பித்தது.

வீடுவந்தால்….
மனைவி கேட்கிறாள்
குடை யாருடையது என்று.