
குமார் காலையிலேயே ,காபி கூட குடித்தானோ இல்லையோ,கையில்,கட்சி கொடியுடன், வெளியே கிளம்பி விட்டான். கல்லூரி முதல் ஆண்டில் ஆரம்பித்த இந்த கட்சியும் கொடியும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
குமாரின் அப்பா பாபுவும் அம்மா சரோஜாவும் எவ்வளவோ சொல்லி சொல்லி திருத்த முடியாத வருத்தத்தில் மனம் விம்மித் தவித்தார்கள்.
ஒரு நாள் போல் பல நாட்கள் அரசியல் செய்வதில் ஈடுபட்ட குமாரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
வீட்டிலேயே இருக்க மாட்டான்.
சத்திரம் போல் உண்ண, படுக்க என்றபடி விசித்திர மாக வீண் அடித்த இளம் வயது.
போலீஸ் லத்தி சார்ஜ், கைது, என்று எல்லாத் தொல்லைகளும் பார்த்தாகி விட்டது.
குமாருக்கு தான் ஒரு ஹீரோ என்ற நினைப்பு.
“தொண்டன் என்றும் தொண்டன் தான்.
நீ பெரிய கற்பனை வெள்ளத்தில் மிதப்பது உன் அறியாமை,அறிவில்லாமை,போதும் இதல்லாம் நிறுத்து குமார்,” என்று பெற்றவர் கெஞ்சினார்.
“போங்க அப்பா நான் ஒரு பெரிய பதவியில் அமரும் வரை ஓய மாட்டேன்.”என்று ஆவேசம் பொங்க பேசினான்.
பெற்றவர்களின் அறிவுரை,கற்றவர்களின் போதனை,எதுவும் குமார் காதில் விழவில்லை, மனமும் ஆமோதிக்கவில்லை.
“ஒரு நல்ல வேலையில் சேர்ந்து குடும்பத்துக்கு உதவியாக இரு முதலில்.”என்றார் அப்பா.
குமாரின் தாய் வேதனையுடன் நோய்வாய் பட்டு படுத்து விட்டாள்.
ரயில் போராட்டம் ,சாலைப் போராட்டம் என்று எத்தனை எத்தனை
அர்த்தமில்லாப் போராட்டங்கள்!
குமாரின் தாயாருக்கு அன்று காலை சற்று அதிகமாகவே உடல் உபத்திரவம் கண்டது.மூச்சு விட சிரமம்.
குமார் அன்றும் முக்கியமான ரயில் மறியல் போராட்டத்திற்கு கிளம்பி விட்டான்.
சுமார் 11 மணிஅளவில் டாக்டர் வந்தார். அம்மாவை உடனே ஆசுபத்திரியில் அனுமதிக்க சொல்லி ஆம்புலன்ஸ் வரவழைத்தார்.
பெரியவர் மிகவும் தளர்ந்து போய் நின்றார்.
பக்கத்தில் உள்ளவர்கள் பல காலமாக நல்ல பழக்கம் .. உதவிக்கு ஓடி வந்தார்கள். கூடவே ஆம்புலன்சில் போனார்கள். குமாருக்கு ஃபோன் போட்டால் நபர் எல்லைக்கு வெளியே இருக்கிறார் என்று பதில் வந்தது. இரயில்வே கேட்டு வழியாக ஆம்புலன்ஸ் போக முடியவில்லை.
தண்டவாளத்தில் படுத்து மறியல் நடந்ததால் கேட்டு திறக்கவில்லை.வாகனங்கள் கடக்க முடியவில்லை.
ஆம்புலன்ஸ் ,அத்தனை வரிசை கட்டி நின்ற வாகனங்களையும் கடந்து திரும்பி ஊரை சுற்றி சுமார் பதினைந்து கிலோமீட்டர் ஓடி மருத்துவமனை போய் சேருவதற்குள் உயிர் பிரிந்து விட்டது.
அம்மாவை மருத்துவ சோதனை செய்து இறந்த விட்டார் என்று உறுதி செய்தார்கள் ஆசுபத்திரி டாக்டர்கள்.
ஒரு மணி நேரம் முன்பு வந்திருந்தால் கூட உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்றார்கள்.
அப்பா, அவர் எதை சொல்லி அழுவார்.
பெற்ற மகன் தான் காரணமாக இருந்து இருக்கிறான் என்று என்ன தான் கதறினாலும் போன உயிர் போனது தானே.
மேற்கொண்ட காரியங்கள் நடக்கவேண்டும்.
குமாருக்கு காதில் செய்தி எட்டி ஓடி வந்து வாசலில் ஜன கூட்டம் கண்டு உள்ளே நுழைந்தான்,கதறினான்.
பெரியவர் ஒரு வார்த்தை பேசவில்லை. முகம் கொடுத்து எந்த பதிலும் சொல்லவில்லை.
குமார் அழுது கதறினான்.
“நான் பெரிய பாவி, அம்மா, அம்மா என்னை மன்னித்து விடு அம்மா” என்று காலில் விழுந்து தலையில் அடித்துக் கொண்டு அழுதான்
குமாரை அழைத்து அம்மாவின் இறுதி யாத்திரைக்கு கொள்ளி வைக்க தயாராகும்படி சொந்தங்கள் சொன்ன போது
நிதானமாக கையை தூக்கி குமாரை அப்புற படுத்தினார்.
“என் மனைவிக்கு நான் கொள்ளி வைப்பேன். யாரும் வேண்டாம்”என்று உறுதியாக, கண்ணீர் மல்க காரியத்தில் இறங்கிவிட்டார்.
குமாருக்கு இது தான் சரியான தண்டனை என்று நினைத்தாரோ?
“அப்பா,என்னை தயவு செய்து மன்னித்துவிடுங்கள்.”அப்பாவின் கால்களை கட்டிக்கொண்டு கதறினான் குமார்.
அப்பா கால்களை விடுவித்துக் கொண்டு ஆக வேண்டியதை கவனிக்க புறப்பட்டார்.
