எம்.டி.முத்துக்குமாரசாமி/மரச்சீனி பப்படம்

Cal


——-

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த சிறிய வளவில் வீட்டில் பப்படம் உலர்த்தி விற்பனை செய்துவந்த பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் உலர்த்தும் மரச்சீனி பப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ( பப்படத்தை யாரேனும் அப்பளம் என்று சொன்னால் அதன் மொறுமொறுப்பு குறைந்து துவண்டுவிடுகிறது). அப்பா இருந்தபோது, சில பத்தாண்டுகளுக்கு முன், நாகர்கோவிலிலிருந்து மரச்சீனி பப்படம், அடப்பிரதமன், கருப்பட்டி, நேந்திரன் சிப்ஸ், செவ்வாழைப்பழம், மட்டிப்பழம், மொந்தன் வாழைப்பழம் ( இதை திருநெல்வேலியில் பேயன்பழம் என்றழைப்பார்கள்) எனப் பனையோலைப் பெட்டிகளில் பொதிந்து வாரம் ஒரு முறை அப்பாவின் நண்பர் ஆம்னி பஸ் ஓட்டுநர் ஒருவரிடம் கொடுத்துவிட்டுவிடுவார். அது நின்றுபோனபோது அப்பா இணையத்தில் தமிழ் தினசரிகளின் நாகர்கோவில் பதிப்புகளை வாசிப்பவராக மாறியிருந்தார். தோவாளையில் இந்த வருடம் மல்லிகைப்பூ விளைச்சல் அதிகமென்று செய்தி வந்தால் அப்பாவுக்கு இங்கே சென்னையில் வீட்டில் மல்லிகை மணம் வீசும். அப்பா என்னைப்போல தினசரி வாழைப்பழங்கள் சாப்ப்பிடுபவரல்லர்; இன்னும் சொல்லப்போனால் ஏன் அப்பா வாழைப்பழம் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. ஆனாலும் அவருடைய நண்பர் ஒருவர் சென்னையில் கிடைக்கும் பாளையன்கோட்டானை (சென்னையில் மஞ்சள்ப் பழம் என்று அழைக்கிறார்கள், மோரீஸைப் பச்சைப்பழம் என்றழைப்பது போல.) கௌரவம் பார்க்காமல் சாப்பிடவேண்டும் என்று சொன்னபோது உனக்கு வெட்கமேயில்லையே என்று பாதி வேடிக்கையாகவும் பாதி கோபமாகவும் சொன்னார், அப்பாவுக்கு நான் சிவப்பு சம்பா கைக்குத்தல் அரிசி கஞ்ஞியை மரச்சீனி பப்படம், இஞ்சித்துவையல், அவியல் சகிதம் சாப்பிடுவதை வாஞ்சையோடு பார்ப்பார். என்னுடைய தாத்தாவுக்கும் மரச்சீனி பப்படம் மிகவும் பிடிக்குமாம். அவியலில் எனக்கு கண்டிப்பாக மாங்காயும் முருங்கைக்காயும் இருந்தாகவேண்டும். அவியல் என்னதான் வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் என்றாலும் அதற்காக அதில் நூர்க்கோலையெல்லாம் சேர்த்துவிட்டால் எனக்கு அந்த நாள் நாசமாகிவிடும்.

சிவப்பு சம்பா கைக்குத்தல் அரிசிக் கஞ்ஞியில் ஒரு துளி தூய பசு நெய்யையும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டைப் பொடியையும் சேர்த்து சாப்பிடுவது என் தனித்துவம். என் மலையாளப் பெண் நண்பர்கள் நான் இலவங்கப்பட்டை பொடியை கஞ்ஞியில் சேர்ப்பதைப் பார்த்து முத்தேட்டன் கஞ்ஞியை பிரியாணி ஆக்கியல்லோ என்று கண்ணீர் வடிப்பார்கள். மலையாளிகளின் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்தினால் தமிழில் திரைப்படமே எடுக்கமுடியாது இலக்கியமே சமைக்கமுடியாது எனும்போது கஞ்ஞியா நம் இஷ்டத்துக்கு குடிக்க முடியும்?

பெயர்களையெல்லாம் சிதைக்கும் சென்னை மாநகரில் மரச்சீனி பப்படத்தை கிழங்கு அப்பளம் என்ற பெயரில் அவமானப்படுத்தி விற்கிறார்கள்; அதில் கையாலிட்ட அச்சு இல்லை; ருசியும் மரச்சீனி வறுவல் போல இருக்கிறது. நாம் நாக்கால் ருசி கண்டு மட்டும் சாப்பிடுவதில்லை கண்களாலும் மூக்காலும் காதுகளாலும் கூட சாப்பிடுகிறோம் என யார் இவர்களுக்கெல்லாம் சொல்வது?