விஞ்ஞானி/மறந்து போச்சு

மறவாதிருக்க விரலுக்கு
ஒன்றென மனனம் செய்து
ஐந்து பொருள்கள் வாங்க
அங்காடி சென்றிருந்தேன்
அதிலொன்றை மறந்துவிட்டேன்
அந்த ஒன்று என்னவென்று
யோசிக்க யோசிக்க
மீதமுள்ள அத்தனையும்
மொத்தமாய் மறந்து போச்சு

அதான் வண்ணங்களையும்
அதன் வடிவங்களையும்
அடையாளமாய் சொன்னாளே
வாங்கி விட துணிந்தேன்

சிகப்புக்கு தக்காளி முதல்
சிறு உருண்டைக்கு
சுண்டைக்காய வரை
வாங்கி வீடு திரும்பினேன்

வீட்டுக்குள் விருந்தினர்கள்
விளையாடும் குழந்தைகள்
கண்டதும் பொட்டில்
பொறி தட்டியது
கடை மாறிவிடடோம் என்று.

இனிப்பும் காரமும்
வாங்கிவர சொன்னவள்
கைப்பையை முறைத்தபடி
சமையலறைக்குள் மறைய
பலியாடாய் தொடர்ந்தேன்

பையை வாங்கி மேடையில்
கொட்டினாள். பார்த்தாள்.
அசடு வழிந்தேன்.
அவள் முணுமுணுத்தாள்

சிகப்பு அல்வாவிற்கு தக்காளி
ஆரஞ்சு ஜாங்கிரிக்கு கேரட்
பால்கோவாவுக்கு முள்ளங்கி
அரிசி சீடைக்கு சுண்டைக்காய்
அதுசரி எதற்கு பதில் இது
என்றென் கண்முன் கட்டு
கீரையை எடுத்து ஆட்டினாள்.

அதை ஏன் வாங்கினேன்
நினைவுக்கு வரவில்லை
மறந்து போச்சு.