வே.கல்யாணகுமார்/பார் மகனே பார்!

ஏனென்ற கேள்வியைக் கேட்டுப்பார்
எல்லாமே தெளிவாகும் உற்றுப்பார்!
நானென்ற அகந்தையை விட்டுப்பார்
நமக்கென விடிந்ததே விழித்துப்பார்

குனிந்து நீ நடப்பதா நிமிர்ந்து பார்!
கொடியினைப் பிடிக்கும்முன் ஆய்ந்துபார்!
துணிவுடன் பாதையைத் தொடர்ந்துபார்!
துயரெல்லாம் உனைவிட்டு விலகும்பார்!

கவிதையில் கரைந்துபோய் வாழ்ந்துபார்!
கற்பனைச் சிறகினை விரித்துப்பார்!
புவியினை புதுமையாய் வியந்துபார்!
புலர்கிறப் போதெல்லாம் உனதுபார்!

நேர்வழி ஒன்றிலே நடந்துபார்!
நிழல்தரும் தருவென நிமிர்ந்துபார்
ஓர்முறை பிறக்கிறாய் உணர்ந்துபார்!
உனக்கெனத் தடத்தினைப் பதித்துப்பார்!

பணம்பொருள் நிலையல்ல நினைத்துப்பார்!
படைத்தவன் குரலினைக் கேட்டுப்பார்!
மனமெனும் கதவினைத் திறந்துபார்!
மற்றொரு உலகத்தை நேரில்பார்!