ஞானக்கூத்தன்/சில கோரிக்கைகள்

கட்டப் போகும் மாளிகை எனக்குத்தான் என்கிறாய்.
நன்றி சொல்கிறேன். நன்றாகக் கட்டு.
தாமதமானாலும் குற்றமில்லை.
ஜன்னல்கள் பலப்பல எல்லாத் திசையிலும்
அகலமாய் இருந்தால் நல்லது.
இந்த மாளிகை எனக்கெனச் சொல்வதனால்
இதனை உனக்குச் சொல்கிறேன்.
கிழக்கு நோக்கிய ஜன்னல்களில்
கரிய மேகங்களைத் தொங்க விடு.
மேற்கில் சூரியனின் பரத வாக்கியம்
படிப்பதைக் கேட்க வேண்டும். எனவே
முகில்கள் அங்கே வெள்ளியாய் இருக்கட்டும்
நட்சத்திரங்கள் போதிய அளவு
பத்திரப்படுத்தினாய் என்று நம்புகிறேன்
மன்றத்தின் மையத்தில் நட்சத்திரங்கள்
சரங்களாகத் தொங்க வேண்டும். நினைவிருக்கட்டும்.
இன்னும் நிறையச் சொல்ல வேண்டும்.
தூண்கள் பற்றி… கூரை பற்றி…
இன்னும் முக்கியம் தரையைப் பற்றி.
ஆனால்
இப்போதைக்கென்று சொல்கிறேன்.
பொத்துப் பொத்தென்று நம்பிக்கை
மூட்டைகளை இப்படித் தட்டாதே

மாவு பறக்கிறது பார்வைப் பிரதேசத்தில்.