ம.சக்திவேலாயுதம் கவிதை

‘கவிதைகள் எழுத
ஆட்கள் தேவை..
நல்ல சன்மானத்தோடு
நல்ல சம்பளமும் வழங்கப்படும்’
என்ற விளம்பரப் பலகையொன்று
என் கண்களில் அகப்பட..

தோள்நால்பையோடும்
மனசோடும் வைத்திருந்த
மொத்தக் கவிதைகளையும்
அங்கேயே
கொட்டித் தீர்க்க
மனசு முதலில் தீர்மானித்தது…

இந்த உலகில்
இப்படியும் ஒரு வாய்ப்பா..
என்றெண்ணியபடி
அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்ததும்
கவிஞர்கள் கூட்டம்
வரிசையில்..வரிசையாய்…

எல்லோரிடத்திலும்
அதே தோள்நால்ப்பை..
பல கவிதைகள்..
பல ஒப்பித்தல்கள்..
பாவம்…இதையெல்லாம் கேட்பதற்கு
விளம்பரம் கொடுத்த ஆட்களில்லை..

அவர்களின் வருகைக்காக
கவிஞர்களும் கவிதைகளும்
விழிமேல் விழி வைத்து காத்திருக்க
ஒரு வழியாக வந்தனர்
சரியாக மணி பத்திற்கு…
நிற்பவர்களோ நூற்றுக்கணக்கு!

நேர்காணல் செய்ய வந்தவர்கள்
தகுதிகளின் அடிப்படையில்
கவிஞர்களைப் பிரித்திடவே
நானும் ஒரு பிரிவில்…
இரண்டாவதாய் நின்றிருந்தேன்
என் முன்னால் ஒரு ஜாம்பவான்!

நான் காண்பதென்ன
கனவா? நனவா? என்றென்னை
கிள்ளிப் பார்ப்பதற்குள்
கைபேசி அலாரம் எழுப்பியது…
என் கவிதைகளும் நானும்
சற்றே எழுந்து கொண்டோம்!