
அவர் தன்னையும் தொலைத்து
யாவற்றையும் தொலைத்த
மணி நேரத்தில்
தன் குரு உபதேசத்தை
தன் வழியைத் திட்டமிடும்
ஒவ்வொன்றும் புத்தர் என்பதாக
நினைவு கூர்கிறார்
தன் காதலியின் குறுஞ்செய்தியை
இலக்கை அடையும் கதவு திறக்கும்
என்பதாக யோசித்து மிழற்றி
அவள் பெயரென்னவென வியக்கிறார்
தாப்பூ தாமரைப்பூ தாயார்
வீட்டு செண்கப்பூவென
என விரித்தாட்டும்
உள்ளங்கையை தன் மனக்கண்ணில்
உற்று நோக்குகிறார்
தன் அடையாள அட்டையைக்
கேட்கும் போலீஸ்காரரரிடம்
தன் கால்சராய் பைக்குள்
கைவிட்டு தடுமாறித் தேடி
சிவன் கோவில் அபிஷேக நீரில்
அவர் பொறுக்கி எடுத்த தற்போது
உலர்ந்துவிட்ட வில்வ சருகுகளை
எடுத்துக் காட்டி புன்னகைக்கிறார்
