ராமகிருஷ்ணன் தியாகராஜன் பதிவு…

எனக்கு நன்கு தெரிந்தவர் ஒருவர் இறந்து இன்றோடு 16 நாட்கள் சென்று விட்டன. இறக்கின்ற வயதே இல்லை. 43-தான். இரண்டு குழந்தைகள் உள்ளன. பார்ப்பதற்கு அமைதியான, பழகுவதற்கு இனிமையான ஆள். நல்ல உயரம். ஆஜானுபாகுவாக இருப்பான். என்னுடன் கடைசி வரை மிகவும் மரியாதையாக இருந்து வந்தான்.

அவனுடைய ஊரில் வெள்ளம் சூழ்ந்திருந்தபொழுதெல்லாம் மற்றவர்களுக்கு உதவியிருக்கிறான். அவனது தந்தைக்கு அவனை டாக்டர் படிப்பிற்கு சேர்க்கவேண்டும் என்று விரும்பினார். நடக்கவில்லை. வேறு படிப்பைத்தான் படித்தான். கடைசியில் தந்தை நடத்தி வந்த வியாபாரத்தை கவனித்து கொள்கின்ற பொறுப்பு வந்தது.

சில வாரங்களுக்கு முன் அவனுடைய ஊருக்கு சென்றிருந்தபொழுது, போன் செய்தேன். அவன் எடுக்கவில்லை. சென்னைக்கு திரும்பிவந்து கொண்டிருந்தபொழுது, திருப்பி போன் செய்தான். அதுதான் அவனுடன் நான் வைத்துகொண்ட கடைசி உரையாடல்.

குடிப்பழக்கத்திற்கு மிக இளமையிலேயே “அடிமை”யாகிவிட்டான் என்ற தகவல் இப்பொழுதுதான் எனக்கு தெரியவந்தது. அவனை திருத்தியிருப்பேன் என்று என்னால் கூறமுடியாது. இருப்பினும் என்னுடைய முயற்சியின்மையைப் பற்றி எனக்கு குற்ற உணர்வு உள்ளது.

குடிப்பழக்கம் என்பது ஒரு வியாதி. அதை மருந்துகள் மற்றும் சிகிச்சையின் மூலம் அதற்கு பலியானவர்களை திருத்தமுடியும். அதற்கென்றே அமைப்புகளும் இருக்கின்றன. இறந்தவரின் மனைவி தனது கணவனை அம்மாதிரியான சிகிச்சைக்கு உட்படுத்தவேண்டும் என்று நினைத்திருக்கிறாள். ஆனால், அது நடக்கவில்லை. தார்மீக ரீதியில்தான் அப்பழக்கத்தை இன்னமும் பலர் பார்க்கின்றனர். ஆனால், அது ஒரு வியாதி என்பதை கணக்கில் எடுத்துகொள்வதில்லை.

One Comment on “ராமகிருஷ்ணன் தியாகராஜன் பதிவு…”

  1. உண்மை.
    மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமை ஆகிவிட்டால் திருந்தி வாழ்வது எளிதல்ல.
    ஒரு பொறி தட்ட வேண்டும்.
    முயற்சி செய்யாமலும் இருக்க கூடாது,முடியாது.

Comments are closed.