ஜெ.பாஸ்கரன்/தீவு

அந்தத் தீவில் மனித நடமாட்டமே கிடையாது. சில தென்னை மரங்களும், கடற்பாறைகளும் உள்ள சிறிய தீவு அது. கடற்கரையில் சங்குகளும், சிப்பிகளும், சில எலும்புத் துண்டுகளும் கிடந்தன.

காலைச் சூரியன் எட்டிப்பார்க்கும் நேரம் அந்த மூன்று பெண்களும் தாங்கள் வந்த படகிலிருந்து துள்ளலுடன் குதித்தனர். படகைச் செலுத்தி வந்த பெண்ணிடம், மூன்று நாட்கள் சென்று, திரும்பி வரும் நேரம் சொல்லி அனுப்பினர். விசித்திரமான இந்த தைரியசாலிகளைப் பார்த்து வியந்தபடி சென்றாள் அந்தப் படகோட்டி!

வந்தவுடன் மூவரும் தங்கள் பாரம்பரிய உடைகளைக் களைந்து, நீச்சல் உடைக்கு மாறினர். கடல் நீரில் ஜலக்கிரீடை செய்தனர்! கடற்கரையிலிருந்து சுற்றும் முற்றும் பார்த்தனர். எங்கும் மனித வாடையே இல்லை. ஆஹா, விடுதலை, விடுதலை, விடுதலை! சுதந்திரமாக இருக்கலாம். மெதுவாக எழுந்திருக்கலாம். வேண்டும் போது குளிக்கலாம். ஆண்களின் கண்கள் துளைக்காமல், விரும்பிய உடையில் வலம் வரலாம்!

முதலாமவளுக்குக் கணவன் பிரச்சனை. குடிகார அப்பா, சூதாடும் அண்ணன். தப்பித்தோம் எனத் திருமணம் செய்து கொண்டால், கணவனும் ஒரு சீட்டாடும், குடிகாரன். சந்தேகப் பேர்வழி – உலகத்திலுள்ள ஆண்களை ஒட்டுமொத்தமாக வெறுக்கும் மனநிலை!

அவளின் பள்ளித் தோழிகள் இருவருக்கும் ஆண்களால்தான் பிரச்சனைகள்! ஆணாதிக்கத்தின் மீது வெறுப்பு. கையில் கிடைத்த ஆயுதத்தால் கொன்று போடத் துடிக்கும் கோபம். வீடு, கல்லூரி, அலுவலகம் எங்கும் ஆணாதிக்கம். ஆண் வாடையே இல்லாமல், அவர்கள் ஆதிக்கமே இல்லாமல் ஒரு மூன்று நாட்கள் இருந்தால் எப்படியிருக்கும்? இதோ. இந்த மனித நடமாட்டமே இல்லாத தீவிற்கு வந்திறங்கி விட்டனர்.

ஆட்டம், பாட்டம் என நேரத்தைக் கழித்தனர். ஆண்களில்லாத உலகம்தான் எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றது? மகிழ்ச்சியில் கடற்கரை மணலில் கட்டிப்புரண்டனர். புகை பிடித்தனர். விரலில் தடவிய வெள்ளைப் பொடியை மூக்கால் உறிஞ்சி, கலைடாஸ்கோப் வண்ணங்களை வானில் கண்டனர். ஈரமண்ணில் ஆணுருவம் செய்து, காலால் எத்திச் சிதைத்தனர்!

மூன்றாம் நாள் குறித்த நேரத்தில் இவர்களை நோக்கிப் படகு வந்தது. ஒரு தொலைவில் நின்று, உடனே விரைவாகத் திரும்பிச் சென்றது. கரையிலிருந்து மூவரும் கைகளை ஆட்டி, குரல் எழுப்பினர். படகு நிற்காமல் விரைந்தது…

தீவிற்குக் கொண்டுவிட்ட படகோட்டிப் பெண்ணுக்கு உடல் சுகமில்லை. முதலாளி சொன்னதால், படகில் வந்த ஆடவன், இந்தப் பெண்களைக் கண்டவுடன், “ஐயோ, பெண்கள்” எனக் கூவியபடி விரைவாகத் திரும்பிச் சென்றான்!