
நியூயார்க்கில் நான் சுஷ்மாசக்கரவர்த்தியைச் சந்தித்தேன். அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் வழக்கப் படி அவர் என்னை தன் இல்லத்திற்கு அவசியம் வரும்படி அழைத்தார்.
“உன் அமெரிக்க நண்பர்கள் உயர்தர ஓட்டல்களில் உனக்கு லஞ்சும், டின்னரும் தருவார்களென்பது எனக்குத் தெரியும். சில சமயம் தன் தாய் நாட்டினருக்காகக் கொஞ்சம் தியாகம் செய்யத்தானே வேண்டும்? இன்றிரவு எங்கள் வீட்டில் உனக்குச் சாப்பாடு?’” என்றார். நான் சொல்லிப் பார்த்தேன். அவர் விடவில்லை. “உறவு முறையில் நான் உனக்கு சித்தியாக வேண்டும் தெரிந்ததா? நியாயப்படிப் பார்த்தால் வெளி நாட்டில் உன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு” என்று ஒரு போடு போடவே நான் ஒப்புக் கொண்டேன்.
உறவில் சித்தி என்பதைவிட, சுஷ்மாவிற்கும் எனக்குமிடையே இனிமையானதொரு நட்புமிருந்தது. நாங்கள் சந்திக்கும் பொழுதெல்லாம், பேச்சில் சுஷ்மாவிடம் உள்ள திறமையை நான் ரசிப்பதுண்டு. இனிமையும் ரசனையும் மிகுந்த இம்மாதிரிப் பெண்மணிகள் வங்கத்தில் குறைந்து கொண்டே வருவது எனக்கு வருத்தம்தான்.
சுஷ்மா என்னை அவளது ஃப்ளாட்டிற்கு அழைத்துப் போனாள். அதைக் கண்டதுமே “ஓ! உனக்கு இங்கு எத்தனை அழகான ஃப்ளாட் கிடைத்திருக்கிறது” என்றேன் மகிழ்ச்சியுடன். சுஷ்மா பட்டென இடைமறித்தாள். “இது ஃப்ளாட் அல்ல. அபார்ட்மெண்ட். இருநூறு வருடம் ஆங்கிலேயருக்கு நீ ஆங்கிலேயனாகவே மாறி விட்டாய்!” என்று என்னைத் திருத்தி அடிமையாக இருந்து, விட்டுக் கிண்டல் செய்தாள்.
அமெரிக்காவில் ஃபிளாட் என்பதை அபார்ட்மெண்ட் என்று கூறப்படுவதை சுஷ்மா எனக்கு நினைவுறுத்தினாள். பெட்ரோலுக்குப் பதிலாக ‘காஸ்’ ‘ ஷெட்யூல் ஸ்கேட்யூல்’ என்றெல்லாம் –
கூறப்படுகின்றதாம். மனதிற்குள்ளே நான் சுஷ்மா சித்தியின் கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருந்தேன். இதை அவள் புரிந்து கொண்டு விட்டாள் போலும்! “என்ன யோசிக்கிறாய்?” என்றாள் சகஜமாக.
‘உங்களைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். தெருவில் துணிந்து தனியாக நடக்க மாட்டீர்கள். தைரியம் கிடையாது. ஹால்டாவிலிருந்து உங்கள் அப்பா வீட்டிற்கு வர நானல்லவா எஸ்கார்ட்!” என்றேன்.
சித்தியின் முகத்தில் லேசான முறுவல் படர்ந்தது. “இதோ பாரப்பா! ஊருக்குப் போய் சுஷ்மாசித்தி நியூயார்க்கில் தன்னந்தனியாக சுற்றுகிறாள். சரமாரியாக ஆங்கிலம் பேசுகிறாள் என்றெல்லாம் சொல்லி எனக்கு அவப் பெயரை ஏற்படுத்திவிடாதே!” என்று சொல்லிக்கொண்டே வந்தவள். சற்றுப் பொறுத்து, “இங்கு வெறும் உல்லாச வாழ்க்கை வாழ்கிறேனென்று நினைத்து விடாதே. குப்பைக் கூடையை முனிசிபல் லாரிக்கு நானே எடுத்துக் கொண்டு போய் கொட்டுகிறேனாக்கும். தெரிந்ததா? ஹால்டாவிலிருந்த பொழுது வீட்டு வேலைக்கு இரண்டு வேலைக்காரர்கள். ஒருநாள் வேலைக்காரி வரவில்லை என்றாலும் எனக்கு அழுகை வந்து விடும். இங்கு… ஊஹூம்,ஒன்றும் கிடையாது!” என்றாள் சுஷ்மா.
நான் அவள் கூறுவதையெல்லாம் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். உண்மை தான். இந்தச் சிறிய காலத்திற்குள் சில பத்துக் கரங்கள் உள்ளவள்போல்தான் ஆகிவிட்டிருந்தாள். ரசனை கூட உயர்ந்து விட்டிருந்தது. சித்தியின் வீட்டிற்கு எத்தனையோ முறைகள்
போயிருக்கிறேன். எங்கு பார்த்தாலும் குப்பையும் கூளமுமாய் இருக்கும். அழுக்கடைந்த துண்டும், பனியனும் புடவையும் ஆங்காங்கு தொங்கும். பாத்திரங்களில் ஈக்கள் மொய்க்கும். ஆம். இன்று… வீடு…எப்படிப் பளபளவென மின்னுகிறது. எத்தனை சுறுசுறுப்பாக கெட்டிக்காரத்தனமாக குடும்பத்தை நடத்துகிறாள் சுஷ்மா.
”ஏ.ஜி.எஸ். ஆபீசரின் மனைவியாக நான் இருக்கும்போது, ஒருநாள் அமெரிக்கா வருவேன் என்று கற்பனை கூடச் செய்ததில்லே. எனக்குத் திருமணம் ஆகும் போது உன் அண்ணா கீழ்மட்ட குமாஸ்தா. குழந்தை பிறந்தபொழுது அப்பர் டிவிஷன் கிளார்க். என் நச்சரிப்புத் தாங்காமல் எஸ்.ஏ.ஏ. எழுதினார். பிறகு என்ன? படிப்படியாக உயர்வு. நான் சிறுமியாக இருந்த பொழுது ஒரு ஜோசியன் என் ஜாதகத்தில் கடல் பிரயாணம் இருக்கிறதென்றான்…” சித்தி பேசிக் கொண்டே இருந்தாள்.
“குழந்தை எங்கே?” என்றேன் நான்.
”குழந்தையா? அவள்இப்பொழுது லீனாசக்கரவர்த்தியாக்கும். அவளுடைய சம்பளம் என்ன தெரியுமோ? 800, கிடைத்தாலே அதிகம் என நினைத்தேன் மாதம் 2, 200 ரூபாய் தருகிறார்கள். வருடத்திற்கு 26,400 ரூபாய்!”
‘இவ்வளவு பெருக்கல் வாய்ப்பாடு போடாதே சித்தி. தலையைச் சுற்றுகிறது. நீங்கள் மட்டும் கூறி இருக்காவிட்டால் நான் நம்பியிருக்கவே மாட்டேன்”
இங்கு வந்ததுமே முதல் பிரச்சனை வீடு. இரண்டாவது சாப்பாடு. திராட்சையையும் ஆப்பிளையும், கோழியையும் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து விட்டது. விசித்திரமான நாடு இது.
வறுத்த மீனை இங்கு நாய்தான் தின்கிறது. அதனால் தாராளமாய் கிடைக்கிறது. ஆப்பிளை விட தக்காளி விலை அதிகம். ஏழை மக்களின் உணவு இங்கு கோழிதான். தனது ஏழ்மை நிலையைப் பற்றி கூறிக்கொள்ள விரும்புகிறவர்கள் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? . ”கோழியைத் தின்று வயிற்றை நிரப்புவதால் எனக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்கள். நான் என்ன சொல்ல? பாலைப் பற்றிக் கவலை இல்லை. ஏராளமாயக் கிடைக்கும். எவ்வளவு குளிரட்டும். கவலையில்லை. அப்பார்ட்மெண்டில் ‘சென்ட்ரல் ஹீட்டிங்’ இருக்கிறது. டெலிவிஷன் கூட வைத்திருக்கிறோம். அவர் ஒரு கார் வாங்கியிருக்கிறார் பார். நம் நாட்டில் ஜமீன்தார், மகாராஜாக்கள்தான் இப்படிப்பட்ட கார் வைத்துக் கொள்ள முடியும்…’
“சித்தி… உங்கள் ஜாதகத்தில் இந்த சுகமெல்லாம் இருந்தது. அனுபவிக்கிறீர்கள். அண்ணாவிடம் சொல்லி எத்தனை நாட்கள் இங்கு இருக்க முடியுமோ இருக்கப் பாருங்கள்!”
சித்தி இடைமறித்தாள்.
“நாங்கள் வந்து இரண்டு வருடமாகிறது. இன்னும் ஒரு வருடம்தான் இருக்க வேண்டும். அது போதுமப்பா. அதற்கு மேல் வேண்டாம். இந்த ஒரு வருடத்தை எப்படியாவது கழித்து விட்டு நம்ம ஊருக்கு வந்தால் போதுமென்றிருக்கிறது எனக்கு”
நான் விடவில்லை… “இதென்ன இது! இது பொன்கொழிக்கும் நாடு. இத்தனை சுகமும், போகமும் கிடைக்கிறது. இருந்தாலும் உங்களுக்குத் திருப்தியில்லை. ரொம்ப மோசம் நீங்கள்.!” என்றேன்.
‘நம்ப ஊரில் உணவுப் பஞ்சம். விலைவாசிகள் ஏறி நிற்கிறது. ரேஷன், க்யூ, பால் கூட நல்லதாகக் கிடைக்காது. கலப்படம் தான். இதெல்லாம் தெரியும் எனக்கு. இருந்தாலும் அங்கு திரும்பி வந்து விட்டால் போதும் என்றிருக்கிறது எனக்கு…” என்றாள் சித்தி மீண்டும்.
”வெளி நாட்டில் இருக்கும் பொழுதுதான் சொந்த நாட்டின் அருமை தெரியும் என்று படித்திருக்கிறேன் அது உண்மைதான் போலிருக்கிறது!”
“பெரிய தேச பக்தை இல்லையப்பா நான். ஏதோ நாட்டின் மீதுள்ள பற்றினால் நான் இப்படிக் கூறுவதாக நினைக்காதே குடும்பத்தைப் பற்றிய கவலைதான் எனக்கு!”
சித்திக்கு குடி என்றால் பயம் என்பது எனக்குத் தெரியும். மெல்ல விசாரித்தான்.
“அண்ணா குடிக்கிறாரா?”
“டிரிங்ஸ் பிரிஜ்ஜில் எப்பொழுதும் உண்டு. அவர் குடிக்காவிட்டாலும், நண்பர்கள் வரும்பொழுது உபசரிக்க அது வேண்டுமே. நீங்களெல்லாம் கலைஞர்கள், உங்கள் இனத்தாருக்கு இது வேண்டுமே. உனக்கு வேண்டுமா? போய் எடுத்துக் கொள்…”
சுஷ்மா சித்தி இந்த இரண்டு வருடத்திற்குள் எவ்வளவு விசால நோக்கமும் விட்டுக் கொடுக்கும் இயல்புமுடையவளாகி விட்டாள் என வியந்தேன்.
“சாராயம் ருசிப்பதே இல்லை சித்தி. அதனால் நான் குடிப்பதில்லை. நாங்களெல்லாரும் சிவராம் சக்கரவர்த்தியைச் சார்ந்தவர்கள். அவர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? உனக்குப் போதை வேண்டுமா? சரி… திரட்டுப்பாலில் போதையை ஏற்றிக்
கொள்…”
சித்தி சிரித்து விட்டாள்.
“சிவராம் சக்கரவர்த்தியின் நூல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். லீனாவிற்கு அவரிடம் அப்படியொரு ஈடுபாடு. அவர் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறாரா? இங்கு வந்த பின் மொழிப் பத்திரிகை எங்கே கிடைக்கிறது?”
பேச விஷயம் கிடைத்துவிட்டது. சிவராம் சக்கரவர்த்தியைப் பற்றி அலசினேன். முடிவில். “அதிருக்கட்டும் சித்தி! இந்த ஊர் பாலில் உங்களுக்கு ஏனிந்த வெறுப்பு?” என்றேன் மெல்ல.
சுஷ்மா சித்தி முதலில் ஒன்றும் பேசவில்லை. பின்னர் “என்ன இருந்தாலும் நீங்களெல்லாம் எழுத்தாளர்கள். உன்னிடம் எல்லாத்தையும் கூறிவிட வேண்டியதுதான். ஒரு சம்பவத்தை மட்டும் சொல்லுகிறேன். அதிலிருந்து எனக்கு ஒரே திகில்” என்றாள்.
“இங்கு ஒரே தனிமை! நடு நடுவே நம்மூர் மனிதர்களிடம் டெலிபோனில் பேசிக் கொள்கிறேன். கொஞ்சம் ஆறுதல். சந்திக்கிறதென்பது எப்பொழுதோ ஆறு, ஏழு மாதத்திற்கொரு முறைதான். இந்தக் கட்டிடத்தில் உள்ள சிலருடன் சினேகம் செய்து கொண்டேன். லஷ்மி பூஜை வந்ததா? விருந்து வைத்தேன். பிறகு சில பலகாரங்களை எடுத்துக் கொண்டு பக்கத்து அபார்ட்மெண்ட்டில் இருக்கிறாரே, மிஸஸ் டால் அவர்கள் இல்லத்திற்குப் போனேன். பூஜை பிரசாத மென்றால் அண்டை அயலார்களுக்குக் கொடுக்க வேண்டாமா? மிஸஸ் டாலுக்கு ஒரே மகிழ்ச்சி. அன்றிலிருந்து எங்களுக்குள் நட்பு. ஓய்விருக்கும்போது அவளும் வருவாள். நானும் போவேன். நம்மூர் சமையல் பரோட்டா, கிச்சடி எல்லாம் செய்ய அவள் என்னிடமிருந்து கற்றுக் கொண்டாள்.
“மிஸ்டர் டாலுக்கு நல்ல பதவி. நிறைய சம்பாதிக்கிறார். இரண்டு கார். இருந்தாலும் அவர்கள் பிள்ளை காலையில் பத்திரிகை விற்கப் போகிறான். வயது என்ன தெரியுமா? பன்னிரெண்டுதான். கடுங்குளிரிலும் விடியற்காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவான். இந்த ஊர்ப் பத்திரிகையைப் பார்த்தாயா? எத்தனைப் பக்கங்கள். அதிலும் ஞாயிற்றுக்கிழமை என்றால் 100, 200 பக்கம். பழைய பத்திரிகையை விற்பது என்றிருந்தாலே போதும் நாம் பணக்காரர்களாகி விடுவோம் என்று நினைப்பேன்.
இந்தச் சுமையைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாய்ப் போவது எளிதா என்ன? நம்மூரில் செய்வார்களா?
ஒரு நாள் பார். அந்தப் பையனுக்கு உடம்பு சரியில்லை. மிஸ்டர் டாலே பத்திரிகை விற்கப் புறப்பட்டு விட்டார். நான் என் கண்ணால் பார்த்தேன். தொழில் செய்ய யாரும் இங்கே வெட்கப்படுவதில்லை…
இவர்களுக்கொரு பெண் இருக்கிறாள் – சித்தி மெல்ல பெருமூச்செறிந்தாள்.
“பெயர் எலிசபெத். லிசா என்று கூப்பிடுகிறார்கள். பதினைந்து வயது தானிருக்கும். நல்ல அழகு. நல்ல சாப்பாடு. போஷாக்கு. அதனால் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்கள்… இந்த லிசா இருக்கிறாளே — அடிக்கடி லீனாவிடம் வருவாள். இந்த ஊரில் பெண் பிள்ளை எல்லாருக்கும் பூரண சுதந்திரம் தான். எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சுயமாகச் சம்பாதித்துத் தன் காலில் நிற்கிறார்கள் அல்லவா? படிப்பும் அப்படி இருக்கிறது. படித்து முடித்ததும் சம்பாதிக்க வழி ஏற்படும்படியான படிப்பு. லிசாவும் இஷ்டப்படிதான் நடப்பாள். சுற்றுவாள்.”
வெளியே மணி அடிக்கவே சித்தியின் பேச்சுத் தரடப்பட்டது. அவள் எழுந்து போய் கதவைத் திறந்து விட லீனா உள்ளே வந்தாள். லீனாவை நான் எப்பொழுதோ குழந்தைப் பருவத்தில் பார்த்தது. “இவள்தான் லீனா” என்றாள் சித்தி. பின்னர் தன் பெண்ணிடம் “சங்கர் அண்ணாவைத் தெரிந்ததா? நாம் ஹால்டாவிலிருந்த போது அடிக்கடி வருவானே? உன்னைக் குண்டு என்று கூப்பிட்டு அழ விடுவானே… நினைவிருக்கிறதா?” என்றாள்.
லீனா அழகாய்ச் சிரித்தாள். நைலான் புடவை, அம்மாவைவிட உயரம். நல்ல வாளிப்பு. நிறத்தில் ஒரு மாற்று குறைச்சல் தான் என்றாலும் கண்களில் வங்காளப் பெண்களுக்குரியதொரு அலாதியான கவர்ச்சி. அமெரிக்காவின் வளமான சூழலில் இளமை மதர்த்து நின்றது.
“இன்று எப்படி வந்தாய்?” என்று அவளிடம் கேட்டாள் சித்தி. “டியூப் ரெயிலில்தான் வந்தேன்!”
“உன் காரியாலயத்தில் அந்த அமெரிக்கன் லிப்ட் தருகிறேன் என்றானா?”
“யார் அதைக் காதில் போட்டுக் கொள்கிறார்கள்?” என்று அலட்சியமாகப் பதிலளித்த லீனா. “சங்கர் அண்ணா… சற்று இருங்கள். உங்களிடம் நிறையப் பேச வேண்டும். முதலில் குளித்து விட்டு வருகிறேன் என்று என்னிடம் சொல்லி விட்டு, உள்ளே ஓடினாள்.
லீனா சென்றதும் சித்தி தணிந்த குரலில் “லீனா ரொம்ப நல்ல பெண். நிறம் மட்டும் கொஞ்சம் மட்டு. நீதான் நிறையப் பேர்களைப் பார்க்கிறாயே. யாராவது நல்ல வரன் இருந்தால் சொல்லு” என்றாள்.
‘அமெரிக்காவில் வேலை பார்க்கிறாள் என்று கேள்விப் பட்டாலே ஐ.ஏ.எஸ். ஆபீசர், சார்ட்டட் அக்கவுண்ட்டெண்ட் இப்படி நல்ல பையன்கள் கிடைப்பார்கள் கவலையென்ன?” என்றேன்.
‘அவள் வேலை பார்ப்பதில் எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டமில்லை. இது ரோமியோக்கள் நாடப்பா. ஆனால் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்ய? இங்கு ‘டேட்டிங்’ உண்டு.” என்றாள் சித்தி ஆதங்கத்துடன். மேலும் லீனாவைத் தான் வளர்த்திருக்கும் முறை பற்றியும் நிறையக் கூறினாள். அவளிடம் லீனா ஃப்ரீயாக இருப்பாளாம். மனம் விட்டுப் பேசுவாளாம். அவள் அணியும் புடவையே அவளுக்கு யமனாக இருக்கிறதாம். எல்லார் பார்வையும் அவள் பக்கம் தானாம்.
லீனா கையில் மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு எங்களைத் தாண்டிச் சென்றாள்.
”லீனா வருவதற்குள் மிஸஸ் டாலின் விஷயத்தைக் கூறி முடித்து விடுகிறேன்” என்றாள் சித்தி.
“மிஸஸ் டாலின் பெண் லிசாவிற்கு பொன்னிறக் கூந்தல். நல்ல அழகு. கூர்மையான விழிகள். அவளுக்கென்றே தனி அறை. அவளுக்கு ஓவியம் வரைவதில் ஈடுபாடு…
”ஒரு நாள் அவள் வீட்டுக்குப் போயிருந்தேன். மிஸ்டர் டால் ஊரிலில்லை. மிஸஸ் டால் அரை நிஜார் அணிந்து கொண்டு வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் வரவேற்று உபசரித்தாள். உள்ளே லிசா உடை மாற்றிக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது.
“லிசாவிற்கு உடையணியவே நேரமாகும் போலிருக்கிறது” என்றேன் நான் மெல்ல.
“இன்று பார்ட்டி. அவளுடைய பாய் பிரண்ட்டின் பிறந்த நாள். இரவு நெடுநேரம் நடனமும், பாட்டும் நடக்கும்” என்றவள் “என் மகள் நடனத்திலும் பேச்சிலும் மிகத் தேர்ந்தவளாய் இருப்பதால் இளைஞர்களிடையே அவளுடைய ‘டேட்டிங்’கிற்கு ஒரே போட்டி’ என்று பெருமிதத்துடன் கூறிக் கொண்டாள்.
“எனக்கு என் பெண்ணைப் பற்றிக் கவலையாக இருக்கிறது” என்றேன் பொதுவாக மிஸஸ் டால் இதை வேறு விதமாக எடுத்துக் கொண்டு விட்டாள். அனுதாபம் மிகுந்த குரலில் அவள் “கவலைப்படக்கூடிய விஷயம்தான். இத்தனை வயதாகி விட்டது ஆயினும் உங்கள் மகளுக்கு ஒரு பாய் பிரண்ட் கூட இல்லை. டேட்டிங்கும் இல்லை” என்றாள்.
எனக்கு சற்று ஆத்திரமாகத்தான் வந்தது. “எங்கள் ஊரில் டேட்டிங் வழக்கமில்லை. திருமணம் என்பது தாய் தந்தையரின் பொறுப்பு” என்றேன் காரமாக.
மிஸஸ் டால் வியப்பினால் மலர விழித்துக் கொண்டிருந்தாள். எனது மகளின் திருமணத்தில் எனது குறுக்கீடு எதற்கு என்பது அவளுக்குப் புரியவில்லை. புரிய வைக்கவும் முடியாது.
இதற்குள் லிசா வெளியே வந்தாள். தன் முகத்தின் மேக்கப் சரியாக அமைந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கேட்கத்தான் வந்தாள் போலும். மிஸஸ் டாலும் அவளை விளக்கினடி யில் அழைத்துப் போய் வைரப் பரீட்சை செய்வார்களே அப்படி ஆழ்ந்து நோட்டம் பார்த்தாள். இங்குமங்கும் லேசாக டச் அப் செய்து கொள்ளும்படிக் கூறினாள். நான் எல்லாவற்றையும் மௌனமாய் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
உடலை இறுக்கமாய்ப் பிடிக்கும் சிக்கென்ற உடை அணிந்து வெளியே வந்த அக்குமரிப் பெண்ணைப் பார்த்து அத்தாயின் உள்ளம் என்னமாய்ப் பூரித்தது. “என் தங்கமே நீ தேவதை போலிருக்கிறாய்” என்று பாராட்டினாள். மீண்டுமொரு முறை பெண்ணை நோட்டம் பார்த்தாள். கூந்தலை பிரஷ் செய்தாள். பின்னர் சாப்பாட்டு மேஜையின் முன்னேயிருந்த நாற்காலியில் உட்கார வைத்து “உனக்கு ஆட்சேபமில்லையானால் சொல்லு இன்று யாருடன் டேட்டிங்?” என மெல்லப் பரிவுடன் கேட்டாள்.
“டேவிட்” என்ற லிசா, “ரொம்ப நல்ல பையன் மம்மி. என்னைவிட ஒரு வயது சிறியவன். அதாவது பதினாலு வயது. மிக நன்றாய் புட் பாலு ஆடுவான். நிச்சயம் அடுத்த வருஷம் ஸ்கூல் டீமில் காப்டனாகி விடுவான்” என்று அடுக்கிக் கொண்டே போனாள்.
”ஓகோ.. அப்படியா!… பெருமைப்பட வேண்டிய விஷயம்தான். முத்து நகைக் கடை வைத்திருக்கிறார்களே அவர்கள்தானே அவனுடைய பெற்றோர்கள்?”
“ஆமாம் மம்மீ… டேவிட் வருவான் எப்படி இருக்கிறான் என்று பார். முன் பல் இரண்டும் சற்றுத் தூக்கி இருக்கும். அம்மாதிரியான பற்கள் எனக்குப் பிடிக்காது. டேவிட் தன் அம்மாவிடம் இதைப் பற்றிக் கூறி இருக்கிறானாம். அடுத்த வாரம் அவன் அம்மா அவனைப் பல் டாக்டரிடம் அழைத்துப் போகப் போகிறாளாம்” லிசா உற்சாகத்துடன் பேசினாள்.
மிஸஸ் டால் பெண்ணுக்குச் சாப்பாடு எடுத்து வந்தாள். பெண் மிக நாசூக்காகக் கொரித்தாள். “இன்னும் நேரமிருக்கிறது. சாப்பிட்டு விட்டு… இதோ பார், இப்படிக் கண்ணில் வந்து விழுகின்ற கூந்தலைச் சரி செய்து பின்னால் தள்ளிப் படியும்படியாகச் செட் செய்து கொள். இந்த ஹேர் ஸ்டைல் உன் முகத்துக்கு அவ்வளவு ஏற்றதாயில்லை. உதட்டுக்குக் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்” என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்த மிஸஸ் டால் என்னை நோக்கி… “ஒன் மினிட்” என்றாள்.
உள்ளே சென்றவள் என்ன செய்தாளோ இரண்டு, மூன்று நிமிடமாயிற்று. ஏதோ கடா புடா என்ற சப்தம். பின்னர் ஒரு டம்ளர் பாலுடன் வெளியே வந்தாள். வந்தவள் பெண்ணின் முன்னால் டம்ளரை வைத்து ‘இதைக் குடித்து விடு” என்றாள் நிதானமாக.
பாலா?
பெண்ணுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“உனக்குப் பயித்தியமா மம்மி! நான் பால் குடிப்பதா? அதுவும் இப்பொழுது?”… லிசாவிற்கு உண்மையில் ஒரே கோபம்.
“இந்த வயதில் நீ… பால் குடிக்கத்தான் வேண்டும் மகளே…!” மிஸஸ் டாலின் தாளம் இன்னும் மாறவில்லை. இதற்கு மாறாக குரலில் உறுதி மேலிட்டிருந்தது.
“உன் மகள் நன்றாய்ப் பருத்து உப்ப வேண்டுமாக்கும். என் எடை இப்பொழுதே இரண்டு பவுண்டு கூடிவிட்டது” என்று சிணுங்கினாள் லிசா.
“ஓ… தட் ஈஸ் குட் லிசா!”
“நீ எத்தனை மெலிந்தவளாய்… ஒடிசலாய் இருக்கிறாய்? நான் மட்டும் உப்ப வேண்டுமோ? இதோ பார். என் உடைகள் இப்பொழுதே எவ்வளவு இறுக்கமாகி விட்டன.” லிசா ஒரே கூச்சல் போட்டாள்.
”பாலைக் குடித்துவிடு லிசா… இது வளர்கிற பருவம் பெண்மையின் வனப்பை எல்லாம் உன் உடல் கூவி அழைக்கும் பருவமல்லவா இது?” மிஸஸ் டால் மகளைச் சமாதானப் படுத்த முயன்றாள்.
“முடியாது… அர்த்தமற்ற இந்தப் பேச்சுக்களால் என்னை நீ மயக்கி விட முடியாது. அந்த இரண்டு பவுண்டு. இதோ பார் என் இடுப்பில் வந்து ஏறி இருக்கிறது?” மகள் பொருமினாள்.
“நீ நல்ல பெண்ணல்லவா? இந்தா பாலைக் குடித்து விடு”. பெண் தன் வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் உணவருந்துவதைக் கண்ட மிஸஸ் டால் “இந்தப் பாலைக் குடி” என்றாள் விடாப்பிடியாக.
லிசா அந்தப் பாலைக் குடிக்க வேண்டுமென்று மிஸஸ் டால் ஏனிந்த பாடுபடுகிறாளென்பது எனக்குப் புரியவில்லை. பெண்ணோ அம்மாவின் வேண்டுகோளைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இதற்குள் அந்தப் பையன் டேவிட் வந்து விட்டான். ஓட்டக் கத்தரிக்கப்பட்டு நிற்கும் தலைமயிர். இறுகப் பிடித்த ஃபாண்ட். இத்தனை சிறியவன் இந்தப் பெண்ணுடன் டேட்டிங் போகிறான் என்பதை நினைக்கும்போதே எனக்குச் சிரிப்பு வந்தது.
மிஸஸ் டால் அவனை மரியாதையாக வரவேற்று உபசரித்தாள்.
மிஸஸ் டாலுக்கு என்னதான் வந்து விட்டதோ தெரியவில்லை. தான் பிடித்த பிடியை விடவில்லை. வாசல் வரை பால் டம்ளருடன் சென்று லிசாவிடம் கெஞ்சினாள். “லிசா! என் கண்ணே! நான் சொல்லுவதைக் கேள். இதைக் குடித்துவிடு. அதுதான் நல்லது!”
நான் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன். என்ன பாலோ, என்ன பிடிவாதமோ.
பெண் கடைசி வரை இசையவில்லை. முடிவில் அம்மா தனக்குரிய கடமையை நிறைவேற்றினாள். “ஹேவ் எ குட் டைம். என்ஜாய்! முடிந்தால் இரவு பன்னிரண்டு மணிக்குள் திரும்பி விடு. நீ வரும் வரை எனக்கு உற்சாகம் வராது” என்றாள் மிஸஸ் டால்.
“நீ நன்றாய்த் தூங்கு மம்மி. மாற்றுச் சாவி என்னிடம் இருக்கிறது” என்ற லிசா அந்த இளம் நண்பனின் கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு போய்விட்டாள்.
மிஸஸ் டாலின் நிலை பரிதாபகரமாயிருந்தது. அவள் விழிகள் பால் டம்ளரை வெறித்து நோக்கிய வண்ணமிருந்தன.
என்னதான் பாலோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
எனக்குத் தாங்கவில்லை. “ஒரு சின்ன விஷயத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?” என்று கேட்டு விட்டேன்.
சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்ட மிஸஸ் டால் என்ன சொன்னாள் தெரியுமா?… etc.
“மிஸஸ் சுஷ்மா சக்ரவர்த்தி… இது ஒன்றும் சின்ன விஷயமோ, சாதாரணமோ இல்லை. உங்களிடம் சொல்வதற்கென்ன தயக்கம்? உங்களுக்கும்தான் வயது வந்த பெண்ணொருத்தி இருக்கிறாள்” புகையை வளையம் வளையமாக ஊதியவாறே அவள் தொடர்ந்தாள்…” இந்த நாளில் டேட்டிங்கில் என்ன நடக்கிறது, என்ன நடக்கும், என்பதெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. லிசாவிற்கும் இன்னமும் விவேகமோ சிந்தித்துப் பார்க்கும் அறிவோ ஏற்படாதநிலை. இதற்காகத்தான் தினமும் கருத்தடை மாத்திரை ஒன்றை அவளுக்குத் தெரியாமல் பாலில் கலக்கித் தருகிறேன். மாத்திரையை விடாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் பயனில்லை. இந்த வயதில் ஏதாவது தாறுமாறாக நேர்ந்து விட்டால் அப்புறம் எல்லாமே குழப்பம்தான். பாருங்கள் மிஸஸ் சக்கரவர்த்தி. எனக்குத் தெரிந்து மூன்று பெண்கள் பதினைந்து வயதிலேயே தாய்மை அடைந்து விட்டார்கள். அவர்களது பெற்றோரின் நிலை எப்படி இருக்கும் நீங்களே சொல்லுங்கள்?”
“இதைக் கேட்டபின் நான் என்ன சொல்ல? என் அறிவுக் கண்கள் திறந்து கொண்டன” என்றாள் சுஷ்மா சித்தி.
“கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இந்த டேட்டிங் நாசமாய்ப் போகட்டும். முதலில் என் பெண்ணைப் பத்திரமாய் ஊருக்கு அழைத்துக் கொண்டு போய்ச் சேர்த்தால் தான் எனக்கு உயிர் வரும்!” சித்தி நீண்ட பெருமூச்செறிந்தாள்.
லீனா குளியலறையிலிருந்து வந்து எங்களைத் தாண்டிச் சென்றாள். ‘சங்கர் அண்ணா… இதோ ஐந்து நிமிடம்…” என்றாள். “பாலைச் சுட வைக்கட்டுமா லீனா?” என்று கேட்டாள் சித்தி. “ஓ… எஸ்” என்ற பதில் வந்தது.
லீனா தன்னறைக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டதும். சுஷ்மா சித்தி குரலைத் தாழ்த்தி “என் பெண் இப்பொழுது ரொம்ப நல்ல பெண். தன் ஊருக்குப் போய் தண்ணீர் கலந்த பாலையே அவள் சாப்பிடட்டும். இந்த ஊரில் பில் கலந்த பால் அவளுக்கு வேண்டாம்… புரிந்ததா?” என்றாள்.
நான் வேகமாய் தலையாட்டினேன். வேறென்ன செய்ய?
(காவ்யா பதிப்பகம் வெளியீடாக வந்த இனி வீடு திரும்ப வேண்டும் என்ற தொகுப்பிலிருந்து..)
