டவுண் மீனாட்சி

நாறும்பூநாதன்


திரைப்பட இயக்குனர் சுகா தான், மீனாட்சியை எனக்கு அறிமுகப்படுத்தினார். மீனாட்சி என்ற மீனாட்சி சுந்தரத்தை.

எதையும் தெளிவா சொல்லி விடணும். மீனாட்சி பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு சுந்தரத் (திருநவேலி) தமிழ்..


அவர் ஒருமுறை சொன்னது இது :

 “திருநெல்வேலிக்காரம்லாம் வடக்கே தச்சநல்லூர் ராமலட்சுமி ஆஸ்பத்திரியைத்தாண்டி வரமாட்டாம் அண்ணாச்சி. . திருநெல்வேலியிலேயே படிச்சு, இங்கேயே படிச்ச படிப்புக்கு ஏத்தமாதிரி, ஒரு நல்ல வேலை கிடைச்சா போதும்னு நினைக்கிற ஆட்கள் இருக்கற  ஊர் இது. சின்ன பத்து பெயில்னா கூட, ஆரெம்கேவில ஒரு வேலை கிடைக்காமலா போயிரும் ? வாரா வாரம் சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சுக்குளிக்கானோ இல்லையோ, ரத்னாலயோ இல்ல, பார்வதிலேயோ ஒரு படத்தைப் பார்த்தாகணும். மொத ஆட்டம் இல்லேன்னா, ரெண்டாம் ஆட்டம்..
தினமும் ஆத்துல குளியலைப்போடணும். காய்கறி விலை கூடிருச்சுனாலும் கவலைப்படமாட்டாம் ..நாலு சீனியரைக்காய் வத்தலையும், வெங்காய வடகத்தையும் வறுத்து வைச்சுட்டு, ஈராயிங்கத்தை கடிச்சுட்டு பழையத சாப்பிட்டா தேவாமருதமா இருக்காதா..”

மீனாட்சி அப்படி என்ன வேலை பார்க்கிறார் என்று நீங்கள் நினைக்கக்கூடும். அது இப்போ முக்கியமில்லை.

மீனாட்சியைப்பற்றி சுகா  சொன்ன இன்னொரு சங்கதி தான் முக்கியமானது.

” இவாளுக்கு இலக்கிய வாடையே ஆகாதய்யா..புஸ்தகம் பக்கம் தலை வைச்சுப்படுக்க மாட்டாரு..” என்று  சொன்னபோது வியப்பாய் இருந்தது.

இலக்கியம் தான் ஆகாதே தவிர, இலக்கியவாதிகளை அல்ல.

தினமும் நெல்லையப்பரை ஒரு சுத்து சுத்தி வரும்போது, சுடலைமாடன் கோவில் தெருவில் இருக்கும் திகசி அவர்களையும் ஒரு எட்டுப்போய் பார்த்து வந்து விடுவார்.

திகசி க்கு மீனாட்சின்னா போதும்.

“மீனாட்சி..வாருமய்யா..எங்க ஆளையே காணோம் ” என்று ஒரு சிரிப்பு சிரிப்பார். நேசமான சிரிப்பு.

“தாத்தா..நல்லா இருக்கீகளா..பேனா,பேப்பர், தபால் கார்டு ஏதும் வேணுமா? ஏன் ங்கொணா கொணான்னு பேசுதியோ? சளிப்பிடிச்சுருக்கா? சுக்குன்னீ  போட்டுக்கொண்டாராவா ?” என்று மூச்சுவிடாமல் பேசி திணறடித்து விடுவார்.

டவுண் இருட்டுக்கடை அல்வா கடைக்கு பக்கத்தில் உள்ள கல்லத்திமுடுக்கில் இருக்கும் எழுத்துக்கலையகத்திலும் (தம்பி திருநாவுக்கரசு நடத்தும் நிறுவனம் ) இவரைப்பார்க்கலாம்.

நான் ஏதாவது அழைப்பிதழ் அடிக்கப்போனால், அங்கே ஓவியர் வள்ளி, டவுண் பொன்னையா, திருநாவுக்கரசு, மீனாட்சி நால்வரும் சுவாரசியமாய் பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.

திருநெல்வேலியில் ருசியான ஓட்டல்கள் எவை என்று மீனாட்சியிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்.

பஞ்சு போல மெதுவான இட்லி வேணும்னா விஞ்சை விலாஸ் போங்க..
பொடி ஊத்தாப்பம் வேணும்னா கூனன்கடைக்குப் போங்க..வெறும் எட்டு ரூபாய்க்கு எவன்யா ஊத்தாப்பம் கொடுக்கான்?

மதியம் சாப்பிடன்னா சக்தி மெஸ் சுக்கு போகணும்.
இல்லேன்னா கணேஷ் மெஸ்ஸுக்கு..கடைசி வெள்ளிக்கிழமை மட்டும் சொதி கண்டிப்பா உண்டு.

மாரியம்மன் விலாஸ் ல என்ன விஷேசம்னா, புதன்கிழமையும்,சனிக்கிழமையும் ருசியான  உளுந்தங்களி கெடைக்கும்

ஏம்னு தெரியும்லா. அன்னைக்குதான் நம்மாட்கள்  எண்ணெய் தேய்ச்சுக்குளிப்பாங்க..இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்..அங்க திருபாகம் கூட கிடைக்கும்.

எல்லாப்பயலுவளும் அல்வா அல்வான்னு அலையுதாம்..திருபாகம் னு ஒரு இனிப்பு இருக்கு..அதுவும் திருநெல்வேலி பேமஸ் ஸ்வீட் தான். அதோட ருசியே தனீ .

ஒருமுறை இப்படித்தான் டவுண் திருநாவுக்கரசை பார்க்கச்சென்றிருந்தபோது, இரவு எட்டு மணி ஆகி விட்டது.

” நாறும்பண்ணேன்..நேரம் ஆயிட்டு…ஒரேயடியா சாப்பிட்டுப் போங்க..”
என்று சொல்லி அம்மன் சன்னதி அருகே உள்ள லட்சுமி பவன் ஓட்டலுக்கு அழைத்துச்சென்றார் மீனாட்சி.

உள்ளே நுழையும்போதே பூரிக்கிழங்கு வாசனை அடித்தது. இரண்டு மர பெஞ்சுகள். நெருக்கி உக்காந்தா மூணு பேரு உட்காரலாம். மூன்றாமவரின்  ஒரு பிருஷ்டம் மாத்திரம் இருக்கும்படியான அந்த பெஞ்சில் நானும், மீனாட்சியும் அமர்ந்திருந்தோம்.
வாசலில் ஒன்றிரண்டு மர ஸ்டூல்கள்..அதில் ஒரு வயசான ஆச்சி உட்கார்ந்திருந்தாள்.

மீனாட்சி எழுந்துபோய்,

” என்ன ஆச்சி ..சொகமா இருக்கீகளா..” என்றார்.
கண்களை சுருக்கிப் பார்த்த ஆச்சி ”

யாருன்னு தெரியலியே..கந்தையா பிள்ளை மகனா?..கண்ணு வல்லுசா தெரியமாட்டேங்குதே..”என்றார். கையில் ஒரு டம்ளர். சாம்பார் வாங்குவதற்கு.

” ஆச்சி…நான் மீனாட்சி..”

“மீனாட்சியா..நான் யாரோன்னுல்லா நெனைச்சுட்டுப் பேசுதன்..நல்லா இருக்கியாயா..என்னைத்தாண்டி தான் உள்ளே போனியோ..கண்ணெளவு தெரிய மாட்டெங்கே..வீட்ல அம்மை சொகமா இருக்காளா “

குசலம் விசாரித்து விட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்த மீனாட்சி,
” ஆச்சி இட்லி பார்சல் வாங்க வந்திருக்கு..அவளுக்கு இல்ல..பேரப்புள்ளைக்கு. ரெண்டு இட்லி வாங்குனாலும், ஒரு பெரிய லோட்டா நிறைய சாம்பார் தருவாங்க இந்தக்கடையிலே. இட்லி ஒரு பேருக்குத்தான்..உண்மையில் சாம்பாருக்காகத்தான் ஆச்சி வந்ததே..ஓட்டல்காரருக்கு எல்லாம் தெரியும். இருபது ரூபாய் இருந்தாப்போதும். ஒரு பொடி தோசை, மூணு இட்லி சாப்பிட்டுரலாம். ஏழைகளின் பைவ் ஸ்டார் ஹோட்டல் எங்களுக்கு இதுதான் ..கடைக்கு வந்துட்டோம்னா, பாக்கெட்டை தடவி தடவி சாப்பிடக்கூடாது அண்ணாச்சி..பக்கத்துக்கு இலையில என்ன சாப்பிடுதாம்னு பார்த்து பார்த்து வேங்கி சாப்பிடணும்..அது ஒன்னும் தப்பில்ல.. இங்க வாகையடி முக்கு பக்கத்துல ஒரு ஓட்டல்ல  முழு உளுந்து தோசை போடுவாம்..தெரியுமா உங்களுக்கு ?  ஒருநாளைக்குக் கூட்டிட்டுப்போறேன் உங்கள..”

சாப்பிட்டு வெளியே வந்தவுடன், ” பனங்கற்கண்டு பால்  சாப்பிடுதேளா..
அதுக்குன்னு ஒரு இடம் லாலாசத்திரம் முக்குல இருக்கு..கனிஞ்ச நாட்டுப்பழ தாரு தொங்க விட்டுருப்பாரு. அதோட முடிச்சிக்குவோம்  ”  என்றார் மீனாட்சி.

ஒருமுறை, குறுக்குத்துறை ஆத்துல குளிச்சுட்டு, வர்ற வழியில இருக்கும் ஒரு கிளப்புக்கடையில் சுகாவோடு சாப்பிட்ட அனுபவத்தை சொன்னார் .

” அந்த மயினி கடையில இட்லி நல்லா சூடா கெடைக்கும். கொப்பறையில அவிச்ச இட்லியை தட்ட,தட்ட சாப்பிட்டுகிட்டு இருந்தோமா, இதுக்கு மொளகாப்பொடி இருந்தா நல்லா இருக்கும்னு சித்தப்பா(சுகா ) சொன்னாரு. அவ்வளவுதான்.

மயினி..ன்னு ஒரு சத்தம் கொடுத்தேன். என்னன்னாவோ ..மொளகாப்பொடி இருக்குதா..இவாள் சென்னையில இருந்து வந்துருக்கா..அப்படின்னேன். இன்னா எடுத்தாரேன் ன்னுட்டு உள்ளே போயி , மொலாப்பொடியும், ஜாடில நல்லெண்ணையும் கொண்டாந்து வைச்சுட்டாக..அது அவுக வீட்டு உபயோகத்துக்கு அரைச்சு வச்சிருந்த மொளகாப்பொடி..” என்று சொல்லி விட்டு சிரித்தார்.

இவ்வளவு கடைகளை எப்படி தெரிஞ்சு வச்சிருக்காரு என்று எனக்கு ஆச்சரியம்.
“சந்திரவிலாஸ் ஓட்டல்ல, அப்பல்லாம் காலையில் பத்து மணிக்கு சாப்பாடு கெடைக்கும்..அய்யரு ஓட்டல்..அதனால காலையில சோத்தைப் போடுதாம்னு நெனைப்பீக ..அதுக்கு காரணம் அது இல்ல..

சேல்ஸ் ரெப் ரொம்பப்பேரு உண்டு. டாக்டர்களை காலைல  பதினோரு மணிக்கு மேல தான் பார்க்க முடியும். சமயத்திற்கு மதியம் மூணு மணி வரை கூட ஆயிரும். அதுக்கு மேல ஓட்டல்ல போனா சோறு கெடைக்காது. ஒரு நேரம் மட்டும் நல்லா வயிறார சாப்பிடணும்னா சந்திரவிலாஸ் சாப்பாடு தான்..அதைக் காலையிலேயே சாப்பிட்டு போறதுக்கு டை கட்டின ஆட்கள் பலபேரு காத்திருப்பாங்க..நல்லா வயிறு முட்ட சாப்பிட்டான்னா, ராத்திரி கூட சாப்பிட வேண்டாம் அண்ணாச்சி..அப்படி ஒரு திருப்தியான சாப்பாடு அது..”

ஈரடுக்கு மேம்பாலம் அடியில் சாலைக்குமாரசாமி கோவில் அருகே இருக்கும் சந்திர விலாஸில் இப்போதும் யாராவது ஒருவர் வட்டக்கப்பில் காபி குடிச்சுட்டுதான் இருக்கிறார்.

திடீரென்று பேச்சு வேறுபக்கம் திரும்பியது.

” ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிப்பக்கம் மகாராஜபிள்ளை சிலை பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோவில் உண்டு பார்த்திருக்கேளா ? அங்க தினமும் ஒருத்தர் அன்னதானம் கொடுப்பார். இருநூறு,முன்னூறு பேர் வரைக்கும் சாப்பிடுவாங்க..நல்ல தரமான சாப்பாடு அண்ணாச்சி..அன்னதானம்தானேன்னு ஏனோ தானோன்னு போடுற சாப்பாடு இல்லை..டவுண்ல கோவில் வாசல் பக்கம் உள்ள சேனைத்தலைவர் மண்டபத்துல அன்னதானம் போடுவாங்க.. நிறைய பேர் வந்து சாப்பிடுவாங்க..முன்னால, சாப்பிட உட்காருபவர்களுக்கு பலகை போடுவாங்களாம்..நெல்லையப்பர் கோவிலுக்கு வருபவர்கள் பசியமர்த்த இப்படி ரத வீதியில நாலைஞ்சு மண்டபங்கள் உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்..மொதல்ல நாம சொன்னதுல்லாம் ருசிக்காக சாப்பிடுவது பத்தி.

கடைசியா சொன்னதெல்லாம் பசிக்காக சாப்பிடுபவர்கள் பற்றி..ஒருவேளை சாப்பாட்டுக்காக எத்தனை பேரு வயசானவங்க, ஆச்சிமாருங்க வந்து இந்த வரிசையில வந்து நிப்பாங்க தெரியுமா..

இவங்க எல்லாம் பிச்சைக்காரங்க இல்ல..குடும்பத்துல ஒதுக்கப்பட்டவங்க..அஞ்சு பைசா வருமானம் இல்லாதவங்க..

இவங்களுக்கு அன்னதானம் பண்ணுற மனுஷங்களைப்பத்தியும் எழுதணும்..வள்ளலார் வாரிசுகள் திருநெல்வேலியிலேயும் நெறைய பேரு அங்கங்கே இருக்காங்க அண்ணாச்சி..

நான் எலக்கியம் படிச்சது இல்ல..ஆனா, எல்லாருமே பசியைப்பத்தி எழுதியிருப்பாங்கன்னு தெரியும்..நீங்க ஒரு  கம்யூனிஸ்டு..பசிப்பிணி போக்குறது தான் உங்க கொள்கையே..இங்க பலபேரு அட்சயபாத்திரத்தை கையில வச்சிருக்காங்க..அவங்களால முடிஞ்சதை பண்ணுறாங்க..

கடவுள் வயித்தைக் கொடுத்தது சரி. ஆனா, பசியை மட்டும் கொடுத்திருக்கக்கூடாது அண்ணாச்சி..”

மீனாட்சி பேசிக்கொண்டே போனார்.

இலக்கியம் படிக்காட்டி என்ன..மனிதர்களைப் படித்திருக்காரே ?

ReplyForward

2 Comments on “டவுண் மீனாட்சி”

  1. திருநெல்வேலி டவுண் கார மனுசுங்க வாழ்வியலை அந்த வட்டார மொழியில் மிக அழகாக
    கட்டுரை பிரதிபலிக்கிறது. அந்த ஊரிலே பிறந்து அங்கேயே இருப்பது சுகம் என்று நினைப்பவர்கள் தான் இந்த திருநெல்வேலிக்காரர்கள். மிக அருமை.

  2. மீனாட்சி அண்ணாச்சியை ஒருக்க பாத்துப்புடனும், ஏற்கனவே சுகா அவரோட உபச்சாரத்துல எழுதி இருந்தாப்ல நீங்க அடுத்த பகுதி எழுதி இருக்காப்டி இருக்கு சிறப்பு  

Comments are closed.