
யாரோ ஒருவரின் கவனக்குறைவால்
ஏற்பட்ட விபத்தில் எந்தப்பாவமும்
அறியாத அப்பா மரித்துப் போனார்
பெருவலியின் நீட்சியில் உழன்று
கொண்டிருந்த போதெல்லாம்
ஓய்வு நேரங்களில்
பாலத்தில் நின்று கொண்டு
கரைகொள்ளாது ஓடும்
ஆற்றின்போக்கை ரசிக்கும் அப்பா
நினைவலைகளில் நீந்தி வந்து ஆற்றுப்படுத்துவார்.
மூப்பின் காரணமாக விரிசல் கண்ட
அந்தப் பாலம் நேற்று முதல்
இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .
காலையும் மாலையும் கடந்து செல்லும்போது
வயிற்றுள்
அமிலச்சுரப்பை உணரமுடிகிறது
வரும் காலங்களில் மக்கள் பயணிக்க
புதுப்பாலமொன்று உருவாகலாம்.
எனக்குத்தான் அப்பாவின் நினைவுகளை
அதில் எங்கு நிறுத்துவதென்று தெரியவில்லை. .
