
அமெரிக்க மாப்பிள்ளை!
நம்ம ஊர் கலாச்சாரப்படி வளர்ந்த பெண்தான் வேண்டும்.
படிப்புக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நல்ல கிராமத்துப் பெண்ணான மைதிலியைப் பார்க்க வருகிறான் மகேஷ்.
கிராமத்தில் இருந்தாலும், அருகிலுள்ள டவுனில் படித்த கிராஜுவேட் மைதிலி. அழகு, எடுப்பான தோற்றம், பார்த்தவுடன் பிடித்துப் போகும் சிரித்த முகம்!
பெண் பார்க்கும் படலம் என்ற சாங்கியம் இல்லாவிட்டாலும், கிராமத்திலேயே மைதிலியைப் பார்க்க பிள்ளை வீட்டுக்காரார்கள் வருகிறார்கள் என்று, மைதிலிக்கு நீளமாகப் பின்னலிட்டு, வாசமுடன் மல்லிகைப் பூவைத் தலையில் வைத்து, அழகுக்கு அழகு செய்தாள் மங்கை, மைதிலியின் அத்தை.
வேட்டியும், மாட்சிங் ஜிப்பாவும் அணிந்து, கவனமாக அடிமேல் அடி வைத்து நடந்து வந்த மகேஷ், நுனி நாக்கில் தமிழ் பேசி, ‘வில்லேஜ் லைஃப்’ பற்றி ஆங்கிலத்தில் மகிழ்ந்தான்!
பார்த்தவுடன் பிடித்துப் போனது இருவருக்கும்! மீசையில்லாத வழு வழு முகம் ‘அமுல் பேபி’ மாதிரி இருப்பதாய் நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் மைதிலி.
மகேஷை உறுத்தியது அந்த நீளமான பின்னல்தான்! ‘பார்த்துக்கொள்லலாம், யூ எஸ் சென்ற பிறகு ‘பாப்’ கட் செய்து விடலாம்! அங்கு யார் இப்படி எண்ணை தடவி,
வாரிப் பின்னி மெய்ண்டைன் பண்னுவார்கள்?’ – நினைத்துக்கொண்டான்.
கல்யாண தேதி குறிக்கச்சொல்லி, மகேஷ் குடும்பத்தினர் சென்றதும்,
மைதிலியின் முகத்தில் சின்ன சோகம். அத்தையிடம் சொன்னாள்:
“வேண்டாம்னா கேட்டியா? இவ்வளவு நீள சவுரி வைத்துப் பின்னியிருக்கே..
கல்யாணத்துக்கப்புறம் எப்படி எடுத்துப்பாரோ.. பயம்மா இருக்கு”
“கல்யாணமானா எல்லாம் சரியாய்டும். உன் குட்டை முடியும்
பிடித்துப் போய்விடும்” என்றாள் அந்தக் கால அத்தை!
