நாகேந்திர பாரதி/முடிச்சுகள்

அவளுக்கு உள்ளுக்குள் குழப்பம் , அந்தக் கனவை நினைக்கும் போது . உண்மைதானே . தான் வெட்ட நினைக்கும் அந்தக் கட்டு தன் தலை முடியால், தானே போட்டுக் கொண்ட கட்டுத்தானே .
அவனைக் காதலித்துத்தானே மணந்து கொண்டோம் . அவன் கவிதை வரிகளில் மயங்கித்தானே அது ஆரம்பம் ஆனது . அலுவலகத்தில் அவனுக்குப் பக்கத்து இருக்கை . இவள் அங்கே புதிதாகச் சேர்ந்தது முதல் அவள் மேல் மொய்த்த அந்த அலுவலக ஆடவர்கள் பார்வையில் இவன் பார்வையில் ஒரு வித்தியாசம் . அதில் ஒரு மயக்கமும் ஏக்கமும் இருந்தது அவளை ஈர்த்தது .
மதிய நேர உணவு இடைவேளையில் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் காண்டீனில் , இவளும் இவள் தோழியும் இருக்கும் இடத்தைத் தேடி வந்து இவளின் தோழியுடன் பேசியபடியே சாப்பிடும் பழக்கம் அவனுக்கு . புதிதாய் வந்தவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து நெருக்கம் ஆகி விட்ட தோழி அவள் . அவள் கணவனும் பக்கத்து செக்சனில் இருந்து வந்து சேர்ந்து கொள்வான் . அவர்கள் மூவரும் ஏற்கனவே நெடுநாள் பழக்கம் .
ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டு அவர்கள் பேசுவது இவளுக்குப் புதுமையாக இருக்கும் . இவள் வளர்ந்த சூழ்நிலை அப்படி . படித்ததும் லேடீஸ் காலேஜ் . அண்ணன் தவிர மற்ற ஆண்களுடன் , உறவினர் ஆண்களுடன் கூட பேச கூச்சம் .
‘என்ன உங்க பிரெண்ட் பேசுறத்துக்குக் கூட காசு கேட்பாங்க போலிருக்கு ‘என்றுதான் அவன் ஆரம்பித்தான் . மெலிதான புன்னகையுடன் அவள் ‘ அதெல்லாம் இல்லைங்க ‘ என்றபோது வந்தது அவனின் முதல் கவிதை அம்பு ‘ ஒரு ரோஜாவில் இருந்து உதிர்ந்தது பனித்துளி ஒன்று ஜில்லென்று ‘ . அன்று இரவு முழுக்க அவள் மனதில் ஓடியது அது . ‘நான் ரோஜாவா , என் வார்த்தை பனித்துளியா ‘ . நடு இரவில் எழுந்து சென்று நைட்டியோடு கண்ணாடியில் பார்த்து ‘ இப்போது என்ன சொல்வான் ‘ என்று நினைத்துப் பார்த்தாள் .
மறு நாள் முதல் அவளிடம் மாற்றம் . பக்கத்து சீட் தானே . ஏதோ சந்தேகம் கேட்பது போல் அவனிடம் அடிக்கடி பேச , புரிந்து கொண்டது அவன் மட்டும் அல்ல , சற்றே தள்ளி இருந்த அவள் தோழியும் தான் . இப்போது அவன் கவிதைகள் நேரடியாக அவளிடம் பரிமாற்றம் . கவிதை வளர்த்தது அந்தக் காதலை .
ஒரு நாள் அவள் தோழி அவளிடம் சொன்னாள் . ‘ அவன் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் . உன் பெற்றோரிடம் ஏற்கனவே தொடர்பு கொண்டு பேசி விட்டானாம் . ‘ . அப்போது ஒலித்த போனில் அவள் அப்பா தகவலை உறுதி செய்தார் மதுரையில் இருந்து .
‘ பையன் பேசினாரும்மா . நம்ம ஆளுங்கதான் . சாதி முதற்கொண்டு எல்லா விஷயமும் உன் ஆபிஸ் ரெக்கார்டில் இருந்து தெரிஞ்சு தான் விரும்புறாரு . விபரமான பையன் தான் . எங்களுக்குப் பிடிச்சிருக்கு . உனக்கு ஓகே தானே ‘ என்றபோது , அவளின் நீண்ட கூந்தல் அவளைச் சுற்றிப் போட்ட முதல் முடிச்சு அவளுக்குத் தெரியவில்லை .
அடுத்தடுத்த முடிச்சுகள் தொடர்ந்தன . முதல் இரவு அன்று விலகிய அவன் சொன்னது . ‘பாதுகாப்பான நாள் பார்த்து வைத்துக் கொள்ளலாம். குழந்தைச் செலவு இப்போது வேண்டாம் . இருவர் சம்பளத்தில் முதலில் தங்கை திருமணம் . அடுத்து வீடு வாங்க வேண்டும் . மூன்று வருடம் கழித்துதான் முதல் குழந்தை . குழந்தையின் வளர்ப்புச் செலவுக்கும் வேண்டிய சேமிப்பு செய்த பிறகு . எதுவும் பிளான் பண்ணி இருந்தால் தான் சரியாக இருக்கும் ‘ என்றவன் சிரிப்பு ரசிக்கவில்லை முதன் முதலாக அவளுக்கு , முதல் இரவு அன்றே .
தொடர்ந்த நாட்களில் இறுகிய முடிச்சுகள் .
‘ இந்த ஸ்லீவ்லெஸ் லாம் போட வேண்டாமே . ‘
‘நைலெக்ஸ் நல்லாவா இருக்கு , காட்டன் புடவைதானே கச்சிதமா இருக்கு ‘
‘லிப்ஸ்டிக்கெல்லாம் தேவையா ‘
எதிர்க்க நினைக்கும் போதெல்லாம் . அவன் நெருங்கி அவள் காதருகே கிசுகிசுக்கும் கவிதை வரிகளில் வெளிப்படும் அவளின் அழகின் பெருமிதம்,
சுற்றிய முடிச்சுக்களை சேர்த்துக் கொண்டு அணைக்கச் சொல்லும் .
ஆனால் இன்றையக் கனவு , முடிச்சுகளை வெட்ட முயற்சிக்கும் கத்தியின் சுழற்சியோடு அவள் . ‘அவள் நானா . என் உள்மன வெளிப்பாடா இது ‘ என்று அவள் குழம்பும்போது , அவள் பக்கத்தில் படுத்திருந்த அவன் புரண்டு ‘ உன் உதட்டோர மச்சத்தின் ஓரத்தில் என் ஏக்கத்தை இறக்கி வைக்க இடம் கொடுப்பாயா ‘ என்று கேட்க இடம் கொடுத்தாள் , இறுகியது முடிச்சு . கத்தி கழன்றது .
———