
உலகை உற்று நோக்க
உளத்தில் நன்மை தீமை
மலமே அற்றுப் போகும்;
மௌனப் பயிற்சி செய்தால்
சலனம் மெல்ல ஓய்ந்து
சமமாய் எண்ண வைக்கும்
சிலநாள் வாழ்ந்த போதும்
சித்தம் அமைதி கொள்ளும்.
ஆசைக் குளத்து மீனாய்
ஆணோ அலியோ பெண்ணோ
பாசக் களிப்பில் நீந்தி
பாபச் சுழலில் மூழ்கி
ஓசை நின்று போகும்
உதவாப் பொழுதை வெல்ல
வாச முள்ள அன்பை
வளர்த்துக் கொள்ளல் ஞானம்.
பொன்னும் மண்ணும் சேர்த்தும்
பொழுது தூக்க மின்றி
இன்னு மின்னு மென்று
எகிறி ஓடி ஓடி
தொன்னை நீரு மின்றி
ஓய்ந்து வீழும் முன்னே
அன்பு செய்யக் கற்றால்
அனைத்து மாக லாமே.
விருது புகழைத் தேடி
வீதி வீதி ஓடி
கருதும் எண்ண ஓட்டம்
கால விரய மாகும்!
பருகும் நீரும் பாலும்
பசித்து ளோர்க்குத் தந்தால்
உருகும் உள்ளே தெய்வம்
உணரும் நாளே ஞானம்.
நாடு வீடு என்றே
நாளும் பேதம் பேசி
காடு மேடு யாவும்
கள்ளர் பங்கு போட்டால்
வாடும் விலங்கு, மக்கள்
வலிந்து புரட்சி செய்வர்
ஆடும் ஆட்டம் ஓயும்
அன்பே ஆட்சி செய்யும்.
