தேவதை சொன்ன கதை

‘நாங்கள் தேவதைகளின் நகருக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறோம். இதோ தேவதைகளின் நகரம் பாங்கொக் உங்களை வரவேற்கிறது.’
இவன் பிரான்ஸில் ஏறி பாங்கொக்கில் வந்து இறங்கும்போது விமானத்தில் பாங்கொக்கை இப்படித் தான் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். ஆனால் இந்தத் தேவதைகளைத் தேடித் தான் பாங்கொக் நகர வீதிகளிலே திரிவேன் என்று அப்போது வன் கொஞ்சமும்
நினைத்திருக்கவில்லை.
இவன் கல்யாணம் முடிக்கத்தான் பாங்கொக் வந்தான். ஆனால் கல்யாணம் குழம்பிப்போனது. உடனே திரும்பி பிரான்சுக்குப் போக இவனுக்கு விருப்பம் இல்லை. அங்கே அறிந்தவர்கள் தெரிந்தவர் களிடமிருந்து ஆயிரம் கேள்விகள் வரும். ஆயிரம் கேள்விகளும் ஆயிரம் ‘நாக்கிளி புழுக்களுக்கு’ச் சமனாயிருக்கும். இவனைப் போகவிட்டு முதுகுக்குப் பின்னால் சிரிப்பார்கள். ஒருமுறை தாய்லாந்தைச் சுற்றி வந்தான்.
தாய்லாந்தின் புராதன தலைநகரம் ‘அயோத்தியா’ வுக்குப் போனான். மலைகளின் ராணி ‘உடப்போ’ னுக்குப் போனான். தங்கக் கடற்கரை ‘பத்தயா’வுக்குப் போனான். ஆனால் அலைகளிலும் மலைகளிலும் ரசிப்பதற்கு எதுவும் இருப்பதாக இவனுக்குத் தெரிய வில்லை. வழிகளில் சில தேவதைகள் இடறத்தான் செய்தார்கள். அவர்களை வேடிக்கை பார்த்தான். சாடையாகப் பரிதாபப்பட்டான். அவ்வளவுதான்.
நாளைக்குப் பிரான்சுக்குத் திரும்பிப்போக வேண்டும். ஆனால் காலை தொடங்கி மனதில் ஒரு சின்னக் குழப்பம். ஒரு தேவதையைத் தொட்டுப் பார்த்தால் என்ன என்று யோசித்தான். ‘முப்பது வயசாப் போச்சுது வாழ்க்கையில என்னத்தைக் கண்டன்’ என்று பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை சொல்லிக் கொண்டான்.
இ ல்ல இது ஒரு மனச்சாட்சி இல்லாத வேல’ என்றும் ஒருமணி நேரத்துக்கு ஒரு தடவை மெதுவாகச் சொல்லிக் கொண்டான். இரவு எட்டு மணிக்குத் தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வந்து வீதியில் இறங்கினான். ‘எங்கே போகிறேன்?’ என்று கேட்டுக் கொண்டான். ‘சும்மா இப்படியே காலாற நடந்து வரப் போகிறேனாக்கும்’ என்று வாய்க்குள் முணுமுணுத்தான். ஏதோ இவனின் மூளை கட்டளையிடாமலே கால்கள் தாமாகவே ‘சுத்திசான் வீதி’க்குள் நுழைவதாகவும் இது ஒரு மனோதத்துவப் பிரச்சினை என்றும் இதற்கு தான் கொஞ்சமும் பொறுப்பாளி ஆக முடியாதென்றும் நம்ப முயன்றான்.
பகல் முழுவதும் தூங்கும் ‘சுத்திசான் வீதி’ இருட்டி விட்டால் முகம் கழுவி எழுந்து விடும். வீதியின் ரு புறங்களிலும் நூற்றுக்கணக்கான விடுதிகளும் ஆயிரக்கணக்கான தேவதைகளும். விடுதிக்குள் கண்ணாடிகளால் சூழப்பட்ட காட்சியறை கு தேவதைகள் கூட்டம் கூட்டமாக இருப்பார்கள். தேவதைகளின் இதழ்கள் முப்பது வினாடிகளுக்கு ஒருமுறை ‘தானியங்கி’ முறையில் புன்னகைக்காய் விரிந்து மூடும். தேவதைகளின் மார்புகளில் அவர்களது அடையாள இலக்கம் குறிக்கப்பட்டிருக்கும்.
இவன் விடுதிக்குள் உள்ளிட்டு ஒரு மூலையாய் நின்று கொண்டான். தேகம் ஒருமுறை நடுங்கி நின்றது. விடுதி ஏற்கனவே ‘விழாக்கோலம்’ கொண்டிருந்தது. நீலவி- ழிகள், பச்சை விழிகள், பூனை விழிகள், கருமை விழிகள் ஒன்றும் பேசாமல் குளியலறைக்குள் நுழைந்து குளிக்கத் தொடங்கினாள்.
இவன் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தான். ‘இவள் கொஞ்சம் நல்ல ரைப் பெட்டையா தெரியிறாள்’ என்று யோசித்தான். ஆனால் இவன் தேவதைகளைப் பற்றி கதை கதையாய் கேள்விப்பட்டிருந்தான். வரும் போது பூனை மாதிரி வருவார்கள் என்றும் பின் தொடப்போகும்போது இன்னும் பணம் கேட்டுத் தொடவிடாமலே அழிச்சாட்டியம் செய்வார்கள் என்றும் கேள்விப்பட்டிருந்தான். பாங்கொக்குக்குப் புதியவர்கள் என்று தெரிந்து கொண்டால் இடுப்பிலுள்ள அரைஞாண் கொடியையும் உருவிக் கொண்டுதான் விடுவார்கள் என்றுகூடக் கேள்விப்பட்டிருந்தான். எனவே தான் ஒன்றும் பாங்கொக்குக்குப் புதியவன் இல்லையென்று அவளுக்குக் காட்டிக் கொள்ள விரும்பினான். தேவதை குளியலை முடித்துக் கொண்டு பாதங்கள் தரையில் படாமல் விரல்களால் நடந்து வந்து கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டாள். ஒரு சின்ன வெள்ளைத் துண்டை மட்டும் உடம்புக்குக் குறுக்காகச் சுற்றியிருந்தாள். இவன் ‘சேர்ட்’டைக் கழற்ற தேவதை அதை வாங்கி மடித்து வைத்தாள். இவன் ‘கப் குன் மா கப்’ என்று தாய்லாந்து மொழியில் நன்றி சொல்லி தான் தாய்லாந்துக்குப் புதியவனல்ல என்று நிரூபிக்க இவனுக்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான்.
இப்பொழுது தேவதை இவனுக்கு மிக நெருக்கமாக வந்து உட்கார்ந்து கொண்டாள். இவன் தேவதையைப் பார்த்து மெதுவாகச் சிரித்தான். தேவதையின் முகத்தில் உணர்ச்சி ரேகைகளே இல்லை. இவன் குரலுக்குக் கொஞ்சம் கம்பீரத்தைக் கொண்டு வந்து கேட்டான்…
குன் சீ அலாய் கப்? (உன் பெயர் என்ன)
தொங் ஸீயூ
ஆயூ தொளாய் கப்? (வயது என்ன)
சிப் யெற் (பதினேழு)
இவன் இன்னும் சில தாய்லாந்து மொழிச் சொற்களை ஞாபகப்படுத்திப் பேச முயற்சிக்கையில் தேவதை இவனின் கையைப் பிடித்து ‘புட் தாய் மிடாய் கா புட் இங்கிலிஸ்’ (எனக்குத் தாய்லாந்து பாஷை தெரியாது; ஆங்கிலத்தில் பேசுங்கள்) என்றாள்.
இவன் கொஞ்சம் குழம்பிப் போனான். இவள் தன்னை ஏதோ புது ‘ரூட்’டில் ஏமாற்ற முயற்சிக்கிறாளோ? என்று யோசித்தான். தேவதை அப்படியே கட்டிலில் சரிந்து ஆடாமல் அசையாமல் படுத்துக் கொண்டாள். மூச்சுக் காற்றை அடிவயிற்றுக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டவள் போல் பற்களை வேதனையுடன் கடித்து முகத்தை இறுக்கிக் கொண்டாள். தேவதையின் கண்கள் மூடிக் கொண்டன. உதடுகளைச் சுழித்து ‘கமோன் சேர்’ என்றாள். இவன் போய்விட்டான்.
நடுச்சாமத்தில் இவனுக்கு நித்திரை முறிந்தது. அப்படியே கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தான். பற்களைக் கடித்துக் கொண்டு மூச்சுவிடச் சிரமப் படுபவன் போல மூசினான். கையை பொத்திப் பிடித்து மெதுவாகக் கட்டிலில் குத்தினான். இவன் இப்படியான சேட்டைகள் செய்தால் ஆள் எதையோ நினைத்து வருத்தப்படுகிறான் என்று அர்த்தம். அரைக் கண்ணை விழித்துத் தேவதையைத் தேடினான்.
தேவதை அறையின் மூலையிலே அந்த வெள்ளைத் துண்டை இடுப்புக்கு மட்டும் கட்டிக்கொண்டு நிலத்தில் குந்தியிருந்தாள். இவன் விழித்ததை அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மேலே கூரையில் தொங்கிய சரவிளக்கையே உற்றுப் பார்த்துக் கொண்டு சிகரட் புகைத்துக் கொண்டிருந்தாள். இவனுக்கு இப்போது தேவதையைப் பார்க்க உண்மையிலேயே பெரிய பாவமாக இருந்தது. நெஞ்சிலே சின்னதாக வலி கிளம்பியது.
பாரிஸில் தான் உண்டு, தன் வேலையுண்டு, தங்கையின் லண்டன் மாப்பிள்ளைக்குக் கொடுத்த சீதனத்துக்குப்பட்ட கடனுக்கு வட்டியுண்டு என்று எட்டடிக்குப் பத்தடி அறையில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு லண்டன் தங்கைதான் முதல் வெடி வைத்தாள்.
‘பரிஸ் அண்ணைக்கும் முப்பது வயசாப் போச்சுது. நான் லண்டனில, பெரியண்ணை ஜேர்மனில, தம்பி சுவிஸில… பரிஸ் அண்ணை தனியாளா கிடந்து கஸ்டப்படுறேர். தனிய இருக்கிற இளந்தாரியளுக்குக் கெட்டுப் போறதுக்கான் ‘சாண்ஸ்’ வெளிநாடுகளில் கூடுதலா இருக்கு. அதால பரிஸ் அண்ணைக்கு கெதியா ஒரு கலியாணம் செய்து வைக்க வேணும்’ என்று தங்கை தொலைபேசியில் ஜெர்மனிக்கு வெடிக்க ஜெர்மனி ஊடாக சுவிஸ், சுவிஸ் ஊடாகக் கொழும்பு என்று இவனது திருமணப் பிரச்சினை சர்வதேச அளவில் வெடித்தது.
இவன் முதலில் கல்யாணம் வேண்டாம் என்றான். உழைக்கின்ற சம்பளத்தில் ஒரு தனி மனிதனே அறை வாடகை, வட்டி வரி, திறை, கிஸ்தி கட்டி மாத முடிவில் கையறுநிலையில் ரயிலுக்கு ரிக்கட் எடுக்கச் சில்லறைப் பிராங்குகள் கூட இல்லாமல் ரயில் நிலையத் தடைக்கம்பிகளுக்கு மேலால் உயரம் பாய்ந்து கொண்டிருக்கிறான். வரப்போகும் மனைவியையும் உயரம் பாயச் சொல்ல முடியுமா? எனவே ‘எனக்கு இப்போதைக்கு கலியாணம் வேண்டாம்’ என்றான்.
இவனுக்கு மீண்டும் சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புக் கிளம்பியது. அம்மா ‘இவன் மூலம் பேரன் பேர்த்திகளைக் காண்பதே, தான் இந்தப் பூலோகத்தில் அவதரித்ததன் நோக்கம்’ என்று தொலைப்பேசி வழியே உள்ளத்தை உருக்கினாள். ‘காய்ச்சல், துன்பம் வரும் நேரங்களில் மனைவியென்று ஒருத்தி இருந்தால் தேநீர் வைத்துத் தருவாள்’ என்று ஒரே வரியில் தாம்பத்திய தத்துவத்தையே ஜெர்மனி அண்ணன் சுருக்கிக் கூறினார். ‘இந்தக் கிழவன் கல்யாணம் செய்தால்தானே நான் கல்யாணம் செய்யலாம்’ என்று சுவிஸ் தம்பி லண்டன் அக்காக்காரியோடு புலம்பினான்.
இவன் அசைந்து கொடுக்கவில்லை. அந்த எட்டடிக்குப் பத்தடி அறைக்குள் பெண்சாதி, கட்டில், பிள்ளை, தொட்டிலைக் கற்பனை பண்ணிப் பார்த்தான். ‘சும்மா’ ஒரு வரவு செலவுத் திட்டம் எழுதிப் போட்டுப் பார்த்தான். அரிசி, கறி, புளி, பால்மா, இனி எப்படியும் மனைவிக்கு இரண்டு மாதத்திற்கு ஓர் உடுப்பாவது வாங்கிக் கொடுப்பதுதானே ஆண்பிள்ளையாய்ப் பிறந்தவனுக்கு அழகு. இப்படியே நீட்டுக்கு எழுதிக் கணக்கை கூட்டிப் பார்த்தவன் தலையை ஒருமுறை சிலுப்பிக் கொண்டு சிரித்தான். சித்தார்த்தன் புத்தனாக மாறும்போது ஏறக்குறைய இப்படித்தான் ஒரு சிரிப்பு சிரித்திருப்பான்.
ஆனால் கலைவாணியைத்தான் இவனுக்குப் பேசி முற்றாக்கி வைத்திருக்கிறார்கள் என்று அறிந்தபோது இவன் கொஞ்சம் ஆடித்தான் போனான்.
கலைவாணி அடக்கம் என்றால் அடக்கம் அப்படியொரு அடக்கம். வெள்ளிக்கிழமைகளின் மாலைகளில் ‘இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க’ தலையைக் குனிந்து கொண்டே ‘இனிச்ச புளியடி முருகன்’ கோவிலுக்கு வருவாள். ஐயன் ‘தேவாரமொழி பாடுக’ என்று சொல்லி வாயை மூட முன்பே ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ என்று உண்மையாகவே கண்களில் நீர் வழிந்தோட கலைவாணி கொஞ்சி கெஞ்சி பாடுவாள். கோவிலும் கூடவே அழும். இவனுக்கும் அழுகை வரும்.
காலையில் பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதும் மாலையில் வரும்போதும் அல்லது வெள்ளிக் கிழமைகளின் மாலைகளில் மட்டுமே கலைவாணியை ஊரவர்கள் காணலாம். ஆனால் இவனுக்கு அப்படி யல்ல. இவனின் வீட்டுக்கும் கலைவாணி வீட்டுக்கும் இடையில் உக்கிப்போன பனை ஓலை வேலி ஒன்று மட்டும்தான் இருந்தது.
கலைவாணியின் வீட்டில் ஆடு குட்டி போட்டால் இளங்கொடி எடுத்து ஆலமரத்தில் கட்ட அல்லது கிணற்றுக்குள் தண்ணீர் அள்ளும் வாளி விழுந்தால் சுழியோடி எடுக்க கலைவாணியின் அம்மா இவனைத் தான் கூப்பிடுவாள். கலைவாணியின் வீடே ஒரு குட்டிக் கோயில் போலத்தான் இருக்கும். வீடு முழுவதும் சுவாமி படங்களாகவே இருக்கும். கலைவாணி இவனுக்குச் சில நேரங்களில் தேநீர் கொடுத்திருக்கிறாள். ஆனால் அவள் ‘பெரிய பிள்ளை’ ஆன நாளிலிருந்து இவனோடு ஒரு வார்த்தையாவது பேசியதாக இவனுக்கு ஞாபகம் ல்லை.
அந்தக் கலைவாணியைக் கல்யாணம் செய்து கொண்டு வந்து இந்த எட்டடிக்குப் பத்தடி அறைக்குள் குடிவைத்தால் அவளின் குனிந்த தலை நிமிராத குணத்துக்கும் தெய்வ பக்திக்கும் கூடவே மகாலஷ்மியும் இந்த அறைக்குள் குடிவருவாள் என்று இவன் உறுதியாக நம்பினான்.
அவ்வளவுதான். அடுத்த மாதமே கலைவாணியும் கலைவாணியின் ஐயாவும் கொழும்புக்கு வந்து ஏற்கனவே கொழும்பில் முகாமிட்டிருந்த இவனின் ஐயா, அம்மாவோடு சேர்ந்து கொண்டனர். கலைவாணி பாங்கொக் வருவதாகவும் இவனும் பாங்கொக் போய் கல்யாணத்தை எழுதுவதாகவும் இரகசியத் திட்டம் தீட்டப்பட்டது.
இவன் பாங்கொக் வந்து ‘சீலோம் வீதி’யில் அறை எடுத்துத் தங்கினான். ஹோட்டலில் பெயர் பதியும்போது ‘மிஸ்டர் அன்ட் மிஸிஸ்’ என்று சொல்லித்தான் பதிந்தான். ‘மிஸிஸ் நாளைக்கு வருவா’ என்று ஹோட்டல்காரன் கேட்காமலேயே இவன் சொல்லி வைத்தான். அறைக்குள் போய் படுத்துக் கொண்டு ‘மிஸிஸ் நாளைக்கு வருவா’ என்று தனக்குள்ளேயே சொல்லிப் பார்த்தான். சரியான சந்தோஷமாக இருந்தது.
காலையில் எழுந்து கொழும்புக்குத் தொடர்பு கொள்ள முயன்றான். இணைப்புக் கிடைக்கவில்லை. தாய்லாந்து தொலைத் தொடர்புத் துறையை ஒருபாட்டம் திட்டிவிட்டு விமான நிலையத்துக்குப் போனான். ‘ஏயார் லங்கா’ இறங்கிக் கொண்டிருப்பதாக அறிவித்தார்கள்.
இவனுக்குள் இரத்தம் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு சிகரெட் பற்ற வைத்தால் பதட்டம் குறையும் என்று நினைத்தான். இவனை சிகரட்டும் கையுமாகக் கண்டால் கலைவாணி என்ன நினைப்பாளோ தெரியவில்லை. எனவே இரண்டு கைகளையும் இறுகக் கட்டிக் கொண்டு ‘அற்றேன்ஸனி’ல் நின்று கலைவாணியை வரவேற்கத் தயாரானான். ஆனால் கலைவாணி வரவில்லை.
இவன் துடித்துப் போனான். ஓடிப்போய் கொழும்புக்குத் தொடர்பு கொண்டான். இவனின் சின்னத் தங்கைதான் தொலைபேசியை எடுத்தாள். இவனின் குரலைக் கேட்டவுடனே அவள் அழத் தொடங்கி விட்டாள்.
‘ஐயோ சின்னண்ணை கலைவாணியெல்லோ உங்க வர மாட்டன் எண்டு சொல்லிப் போட்டா. இரவு முழுக்க இஞ்சை ஒரே சண்டை…
‘ஏனடி என்ன நடந்தது?”
கலைவாணியை உன்னட்ட அனுப்ப முன்னம் சீதனக்காசு ரெண்டு லச்சம் ரூபாயையும் வைக்க வேணும் எண்டு எங்கிட ஐயா கலைவாணியின்ர ஐயாவோட சண்டை பிடிச்சவர்…’
‘சீதனமோ? எடி நான் உங்களை சீதனம் வேண்டச்
சொன்னனானோ?’
கலை
‘அது எனக்குத் தெரியாது சின்னண்ணை. வாணியின்ர அண்ணா கனடாவில இருந்து காசு அனுப்புவராம். ஆனால் சொன்ன டேற்றுக்க காசு வரயில்ல எண்டு ஐயா கெம்பத் துவங்கிற்றார்…’
‘மெயார்து… எளிய மூதேசியள் எல்லாம் உங்கிட எண்ணத்துக்குச் செய்யிறது. நானொரு விசரன் வேலை மினக்கெட்டு பாங்கொக்கில வந்து நிக்கிறன் நீ கலை வாணியைக் கூப்பிடு. நான் கதைக்கிறன்.’
‘அவையள் காலம்பிறயே வவுனியாவுக்கு வெளிக் கிட்டுப் போயிற்றினம். பாவம் கலைவாணி என்னோட சொல்லிச் சரியாக் கவலைப்பட்டவ. அவவுக்கு இந்த சீதனப் பிரச்சினையே ராத்திரித்தான் தெரியுமாம்… இப்பிடிச் சீதனம் குடுத்துத்தான் கல்யாணம் கட்டுறது எண்டு முன்னமே தெரிஞ்சிருந்தா தான் கொழும்புக்கே வந்திருக்க மாட்டாவாம். சின்னண்ணை, உன்னை எண்டு இல்ல ஆரை எண்டாலும் அவ சீதனம் குடுத்துச் செய்ய மாட்டாவாம். இஞ்ச எல்லாம் மாறிப்போச்சு… ஆனா ஐயாவுக்கு விளங்குதில்ல. நான் எங்களுக்கு ஏன் பிறத்தியாற்ற காசு எண்டு கேட்டு ஐயாவோட சண்டை பிடிச்சனான். ஒருநாளும் எனக்கு அடிக்காத ஐயா ராத்திரி எனக்கும் அடிச்சுப் போட்டேர்.’
இவன் தொலைபேசியை அடித்து வைத்தான்.
மனுநீதிச் சோழன் செய்தது போல இவன் தனது மனதுக்குள் ஒரு தேர் செய்தான். அதன் உச்சியிலே கலைவாணியைக் கொண்டு போய் வைத்தான். ஐயாவை நடுச்சந்தியில் படுக்கவைத்து ஐயாவின் குரல் வளையை இரண்டு நெரி நெரித்தான்.
கலைவாணி வராமல் போனதும் நல்லதுக்குத்தான். கலைவாணி போனால் இன்னொரு நடனவாணியோ அல்லது ஒரு நாட்டியவாணியோ நமக்குக் கிடைக்காமலா போய்விடுவாள். கலைவாணி ஒரு சீதனப் பழியிலிருந்து என்னைக் காப்பாற்றி விட்டாள் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.
ஆனால் இதோ பார் நிலம் நோகாமல் நடந்த கலைவாணியை, கண்கள் இருப்பது பூமியைப் பார்ப்பதற்கே, கைகள் இருப்பது தேநீர் செய்வதற்கே, உதடுகள் இருப்பது முருகனைப் பாடவே என்று வாழ்ந்தவள் இன்று எங்களின் முகத்தில் அறைந்து விட்டாளே… சின்னத் தங்கை சொன்னது மண்டையில் அறைந்தது. ‘இஞ்ச எல்லாம் மாறிப்போச்சு’. மெய்தான். அங்கே ஒவ்வொரு குண்டுகளும் இவ்விரண்டு விலங்கு களாய் உடைத்துக் கொண்டிருக்கின்றன. நுகத்திலே கொழுவிருந்த கலைவாணிகள் ஆயிரம் கைகளும் சூலமும் வேலுமாய் தேர்களில் ஏறிவிட்டார்கள். தேர்களின் சக்கரங்கள் ஐயாக்களின் தலைகளை சுக்கு நூறாய் உடைக்கின்றன.
ஆனால் இங்கே ஒரு பெண் தேவதையாக்கப்பட்டு, அரை நிர்வாணியாய் விறைத்துப்போய் இருக்கிறாள். ஆண்குறிகளும் மாத்திரைகளும் தின்னும் இவளின் இருட்டு நிமிடங்களில் ஒரு சின்ன கிரேனைட்’ வெடித்துப் பற்றாதா? தேவதையும் ஆயிரம் கைகளும் சூலமும் வேலுமாய் தேர்களில் ஏறாளோ? நல்ல உவமான உவமேயங்களோடதான் யோசிக்கிறன், ஆனால் செய்யிறது முழுக்க கிலிசுகெட்ட வேலை என்று கையைப் பொத்திப் பிடித்து மறுபடியும் கட்டிலில் குத்தினான். இந்தமுறை பலமான குத்து.
தேவதை திடுக்கிட்டவளாய் இவனை நிமிர்ந்து பார்த்தாள். வெள்ளைத் துண்டை மார்புவரை ஏற்றிக் கட்டிக் கொண்டே இவனுக்கு அருகில் வந்து படுத்தாள். இவன் தேவதையின் தலைமுடியை மெதுவாக வருடிவிட்டான். அப்பாடா… தேவதை முதல் முறையாய் மெதுவாகச் சிரித்தாள். இவன் தனது உடைந்த’ ஆங்கிலத்தில் கேட்டான்,
‘நீ தாய்லாந்துக்காரி இல்லையா?’
அவள் தனது ‘பொறுக்கி’ ஆங்கிலத்தில் சொன்னாள்,
இல்லை சேர்’
‘எவ்வளவு நாளாய் இங்கிருக்கிறாய்?’
இருக்கும் நாட்களை எப்போதும் எண்ணிக் கொண்டே இருப்பவளைப் போல படாரென்று சொன்னாள். ‘இருபத்தியொரு நாட்கள்.’
‘இதற்கு முன்பு எங்கிருந்தாய்?’
தேவதை கொஞ்சநேரம் கண்களை
மூடிக் கொண்டாள். தேவதையின் முகம் கோணிப்போக மார்புகள் ஏறி இறங்கின. இரண்டு சொட்டுக் கண்ணீர் தலையணையில் விழுந்தது. இவள் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாளோ என்று இவன் கொஞ்சம் சந்தேகப்பட்டுக் கொண்டுதானிருந்தான். ஆனால் அவள் சொல்லிக் கொண்டிருப்பது பொய்யாக இருக்க முடியாது என்று இப்போது முடிவு செய்தான். தேவதை எழுந்து கட்டிலில் சம்மணம் கட்டி உட்கார்ந்தாள்.
‘இதற்கு முன்பு நான் எனது கிராமத்தில் இருந்தேன். அது ஒரு ஆண்மையில்லாத கிராமம். கிராமத்தின் முக்கால்வாசி நிலமும் டெங் கிழவனிடம் வந்து விட்டது. உங்களுக்குத் தெரியுமா சேர், எனது பதினான்கு வயதில் நான் பாடசாலையிலிருந்து தூக்கிச் செல்லப்பட்டு டெங் கிழவனால் நாசமாக்கப்பட்டேன். கிராமத்தில் எல்லோரிடமும் சொல்லிப் புலம்பினேன். அதுதான் கோழைகளின் கிராமம் ஆயிற்றே.
பொலிஸ், கிராம நீதிமன்றத்தினர், சாதுக்கள் எல்லோருமே அவனின் கால்களை நக்கிக் கிடந்தார்கள். இரண்டு பசுமாடுகளை எனது அம்மாவுக்குக் கொடுத்து என்னை டெங் கிழவன் வாங்கிவிட முயன்றான். அம்மா என்ன செய்வாள் பாவம்… என்னைக் கொண்டு போய் டெங் கிழவனின் தோட்ட வீட்டில் விட்டாள். இரண்டு வருடங்கள், ‘சேர்’ முழுதாய் இரண்டு வருடங்கள் நான் அந்தத் தோட்ட வீட்டுக்குள்ளேயே செத்துக் கொண்டிருந்தேன். கடவுள் கூட என்னுடன் இருக்கவில்லை. ஓர் இரவில் தப்பிவிட்டேன். முதல் நாளே டெங் கிழவனிடம் இருந்து கொஞ்சப் பணம் திருடியிருந்தேன்.
தப்பியோடி லாவோசுக்கு வந்துவிட்டேன். தாய்லாந்தின் உயரக் கோபுரங்களும் கட்டடங்களும் தெரிந்தன. இடையில் ‘நொங்காய்’ ஆறு மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. ஓர் இரவு அதையும் தாண்டி விட்டேன். ஆனால் இந்த எந்த உயர்ந்த கட்டடங்களும் கோபுரங்களும் எனக்கு ஒரு வேலை போட்டுத் தரவில்லை. உங்களுக்குத் தெரியுமா ‘சேர்’ லும்பினி பூங்காவில் ஒரு கிழமை பிச்சைகூட எடுத்தேன். பிறகுதான் ‘சுத்திஸான் வீதி’க்கு வந்தேன்.’
இவனுக்கு ‘உச்சு’ கொட்ட வேண்டும் போல யிருந்தது. ஆனால் இந்த ‘உச்சு’ தேவதைக்கு என்னத் தைச் செய்துவிடும் என்று யோசித்தான்.
‘உனது கிராமம் எது?’
“ட்ராங்பாங் கிராமம். அது தென்வியட்நாமில் உள்ளது.’
இவனுக்குத் தனது தேர்க்கணக்கு எங்கேயோ சறுக்குவதாகப் பட்டது.
‘உனது அம்மா ஒரு கேடு கெட்டவள். இரண்டு பசு மாடுகளுக்காகவா உன்னை விற்றாள்?’
‘சேர் அம்மாவை ஏசாதீர்கள். அவள் பாவம். எங்கள் கிராமத்தில் எல்லா அம்மாக்களும் என் அம்மா போலவே ஆக்கப்பட்டிருக்கிறார்கள். எதுவும் எதிர்த்துப் பேச முடியாது. தவிர அவளுக்கு முழங்கைகளுக்குக் கீழே இரண்டு கைகளும் கிடையாது.’
‘நான் மிகவும் வருந்துகிறேன். அது எப்படி நடந்தது?’
‘யுத்த காலத்தில் ட்ராங்பாங் கிராம எல்லையில் ஒரு அமெரிக்க இராணுவ வண்டித்தொடர் எங்கள் கெரில்லாக்களால் தாக்கி அழிக்கப்பட்டதாம். முதலில் வந்த வண்டிக்குள் இரண்டு கைகளிலும் வெடிகுண்டுகளோடு அம்மாதான் பாய்ந்தாளாம்.’
(1998)
கதையைப் பற்றி அழகியசிங்கரின் குறிப்புகள்
தேசத்துரோகி என்ற ஷோபாசக்தியின் சிறு கதைத் தொகுப்பிலிருந்து தேவதை சொன்ன கதை என்ற சிறுகதையைப் படித்தேன்.
கதைசொல்லி தன் கல்யாணம் பொருட்டு பாங்கொக் வந்திருக்கிறான். ஆனால் சீதனத்தால் கல்யாணம் நடக்காமல் போய்விடுகிறது. திரும்பவும் பிரான்சுக்கு போக வேண்டியதுதான். ஆனால் அவனைச் சுற்றி இருப்பவர்கள் அவனை வம்புக்கிழுப்பார்கள் அதனால் உடனே போகவில்லை. ஆனால் சுத்துசான் வீதிக்குப் போகிறான்.
சுத்திசான் வீதியைப் பற்றி இப்படிக் கூறுகிறார். :
பகல் முழுவதும் தூங்கும் சுத்திசான் வீதி இருட்டி விட்டால் முகம் கழுவி எழுந்து விடும்.
அங்குள்ள விடுதியில் ஒரு தேவதையைத் தேர்ந்தெடுக்கிறான்.
30 வயதாகிறது அனுபவம் கிடைக்க வேண்டுமென்று நினைக்கிறான்.
இவன் வர்ணிக்கிற அந்தத் தேவதையுடன் உடைந்த ஆங்கிலத்தில் அவள் கதையைக் கேட்கிறான்.
அவள் கண்கள் கலங்க அவள் கதையைச் சொல்கிறாள்.
அவள் கிராமத்தில் உள்ள டெங் கிழவனிடம் இரண்டு பசுமாடுகளைக்
கொடுத்துவிட்டு இவள் அம்மா இவளை விற்று விட்டதாக சொல்கிறாள்.
தென்வியட்நாமில் உள்ள ட்ராங்பாங் கிராமத்தைச் சேர்ந்தவள் தேவதை.
அவளிடம் எந்த ஆதிகத்தையும் செலுத்த விரும்பாத கதைசொல்லி அவளுடைய கதையை மட்டும் கேட்டுவிடுகிறான்.
இந்தக் கதையை ஆபாசமில்லாமல் கொண்டு போகிறார் ஷோபா சக்தி.
இதன் மூலம் தெரிவதென்ன..
- கதைசொல்லி கல்யாணம் பொருட்டு பாங்கொக் வந்து ஏமாந்து போகிறான்.
- பெண்ணுடன் தனக்கு அனுபவம் வேண்டுமென்று சுத்திசான் வீதிக்கு வருகிறான்.
- அங்குக் கண்டுபிடிக்கிற பெண்ணுடன் அவளுக்கு நடந்த சோகத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறான். அவள் தனக்குக் கடவுள்கூட ஆதரவு இல்லை என்று ஒரு கட்டத்தில் குறிப்பிடுகிறாள்
