
அடுக்குக் குடியிருப்பு வாசிகள் தனி ரகம் . தனித்தனி வீட்டு வாசி என்றால் கூட “சார் உங்க நெட் வேலை செய்யறதா ? உங்களுக்கு மூணு பேஸ் பவர் இருக்கா ?” என்று கேட்டுக் கொண்டு அவ்வப்போது உரையாடுவார்கள். அடுக்கு என்றால் ஏதோ பக்கத்து பிளாட் காரன் வேற்று கிரஹத்து ஆள் போல எதிரில் வந்தாலும் கழுத்தை வெட்டிக்கொண்டு சீறிப் பாய்வார்கள் . அவனுக்கும் இந்த மொட்டை மாடியை விட்டால்
நாதியில்லை . இவனுக்கும் அந்தத் துண்டு நடைபாதையை விட்டால் வழியில்லை. ஆனால் பந்தாவைப் பார்க்கக் கண்கோடி அவியும்.
அவர்கள் ‘அவசர வரிசை’ யும் தனி. தனிப்பிரச்னை என்றால் வாட்ஸ் அப்பில் புலிப்பாய்ச்சல் பாய்பவர்கள் பொதுப் பிரச்னை என்றால்
போனால் போகிறது என்று ஓரிரு முத்து சிந்துவார்கள். வழக்கமான மூக்கு சிந்திகளே பத்தி பத்தியாய் வரைந்து தள்ளுவார்களே தவிர வேறு பேச்சு மூச்சு இருக்காது. யாராவது ஒரு பொதுநலக் காரன் “என் பெண் ஒய்வு நேரத்தில் நம் குடியிருப்பு குழந்தைகளுக்கு வீணை சொல்லித்தர இசைந்துள்ளாள் . தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் ‘ என்று எழுதிவிட்டால் போதும். அந்தத் தியாக
சிகாமணிப் பெண்ணை விட்டுவிடுவார்கள். ‘என் பையன் கிட்டார் வகுப்பு ஆரம்பிக்கிறான். ஒரு மணி வகுப்புக்கு ரூபாய் 250 தான்.
யாராவது அருகாமையில் பாப் மியூசிக் / டான்ஸ் சொல்லித் தரங்களா என்று அடுக்கடுக்காய் கேள்விகள் குவியும். வீணைக்காரனுக்கு ஏன்டா ஆரம்பித்தோம் என்று ஆகிவிடும் .
ஆனாலும் பாருங்கள் . அதென்னவோ தெரியவில்லை. எங்கள் குடியிருப்பு வாசிகளின் comradery ஐ நிரூபிக்க அவ்வப்போது சம்பவங்கள் நடந்தபடி இருக்கும். அதன்படி சமீபத்தில் நடந்த ஒரு விஷயம். ஒரு மாமரம் சம்பந்தப்பட்டது.
மூன்று நான்கு மாமரங்கள் எங்கள் தரைத்தளத்தில் உள்ளன. சத்தம் போடாமல் மாங்காய் சீசனில் வாட்ச் மேன் கள்ள உறவுடன் சில காய்கள் லூட் பண்ணும் குடியிருப்பு வாசிகள் கண்ணுக்கு எட்டி கைக்கும் கொக்கிக்கும் எட்டாமல் நான்கைந்து மாங்காய்கள் மரத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்தன.நடைப் பயிற்சியாளர்கள் ஒவ்வொரு சுற்றுக்கும் அதைப் பார்த்து ஏக்கப்பெருமூச்சு
விட்டபடியே செல்வர் . ஏற்கனவே என் இல்லத்தரசியும் இன்னும் சிலரும் இந்தக் கீழ் லெவல் லூட்மாலைத் தடுக்க கூலிக்கு ஆள் வைத்து எல்லாக் காய்களையும் பறித்து இல்லத்துக்கு இவ்வளவு என்று கொடுத்தாகிவிட்டது.
உச்சாணிக் கொம்பு காய்களைப் பறிக்க முடியாமல் விட்டு வைத்திருந்தார்கள். அந்தக் காய்களும் அப்போது சிறிதாக இருந்தன. இப்போது பழுத்து பள பளவென்று பலர் கண்களையும் உறுத்திக் கொண்டிருந்தன. மாதரிசிகள் பார்த்தனர். ரகசியமாகக் கூடிப்பேசி மளமள வென்று ஆளை வைத்து அந்த அபூர்வ காய்களையும் பறித்த பின்னர் தான் பிரச்னை வலுப்பெற்றது. சின்னக்
காய்களையெல்லாம் விநியோகம் செய்தாயிற்று. அந்த நான்கைந்து காய்களை மட்டும் வைத்து என்ன பண்ண?
அங்கே தான் கைகொடுத்தது comradery. ஒரு அம்மா “நான் ரெண்டு காய் கொண்டு போய் பதப்படுத்தி மாங்காய் சாதம் புரட்டி வைக்கிறேன். வரும் சங்கட ஹர சதுர்த்திக்குக் கூடும் பக்தர்களுக்குப் ப்ரசாதமாய் தரலாம்.” என்றாள். ” நான் ரெண்டு மாங்காய் வைத்து நறுக்கி உப்பு மிளகாய் போட்டு ஊறுகாய் கொண்டுவருகிறேன். தயிர் சாதத்துக்கு வைத்துக் கொள்ளலாம்.” என்றாள்
இன்னொருத்தி. “நான் மீதியை நறுக்கி வெள்ளம் சேர்த்து பஞ்சாமிர்தம் கொடுக்கையில் ஒரு ஸ்பூன் எல்லோருக்கும் கொடுக்கிறேன் “
என்றாள் இன்னொரு மாது .
ஒரு வயதான மாமிக்கு ‘சிக்கன ஸ்ரீ’ ன்னு பேர் வைக்கலாம் . பிள்ளையாருக்கு சாத்தின பழைய பூ சரத்திலிருந்து நூல் உருவி புது சரம் தொடுப்பாள் . ஏதோ சில விஷயங்களில் குடியிருப்பு வாசிகளிடையே கசமுசா இருந்தாலும் மாங்காய் , பிள்ளையார் பூஜை
போன்றவற்றில் ஒற்றுமை. காம்ரேட் பிள்ளையார் வாழ்க . உச்சானிக் கொம்புள்ள மா மரம் வளர்க .
