பிருந்தா சாரதி/ஒரு குழப்பமான நாள்

*
கடந்த இரண்டு நாட்களாக என் சுவரில் ஒரு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி, ஒரு இரங்கல் செய்தி என இரண்டையுமே ஒரே சமயத்தில்ல் பதிவு செய்ய வேண்டிய நிலைமை.
பிறந்தநாள் வாழ்த்து எழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு மரணச் செய்தி வரும். ஒரு இரங்கல் செய்தி எழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு நெருங்கிய நண்பரின் பிறந்தநாளை ‘முகநூல் நினைவூட்டி’ நினைவூட்டும். இரண்டையும் தவிர்க்க இயலாது எழுதுவேன்.
சென்ற ஆண்டு இதே போல ஒரு நாளில் எழுதிய ஒரு கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘மகாகவி’ இதழில் வெளிவந்து பரவலான கவனத்தை பெற்ற அந்தக் கவிதை:


ஒரு குழப்பமான நாள்
*

ஒரு நண்பனின் பிறந்த நாளும்
இன்னொரு நண்பனின் நினைவு நாளும்
ஒரே நாளில் வரும்போது
ஒரு புறம் பகலாகவும்
மறு புறம் இரவாகவும்
பொழுது விடிகிறது.
அன்று
இரண்டு பூங்கொத்துகள்
வாங்குகிறேன்.
ஒன்றை பிறந்த நாள் நண்பனின் கைகளில் மகிழ்ச்சியோடு அளிக்கிறேன்.
இன்னொன்றை
நினைவு நாள் நண்பனின்
புகைப் படத்தின் முன் மௌனமாய் வைக்கிறேன்.
அன்று
இரு கவிதைகள் எழுதவேண்டி இருக்கிறது.
ஒன்றில் பூக்களையும்
மற்றொன்றில்
கண்ணீர்த் துளிகளையும்
கோர்த்து எழுதுகிறேன்.
அன்று முழுவதும்
நாவின் மேற்புறம் இனிப்பாகவும்
அடிப்பக்கம் கசப்பாகவும்
இருக்கிறது.
நட்பின் பாடல்
ஒரு காதில்
மகிழ்ச்சியோடும்
மறு காதில் துயரமாயும்
ஒலிக்கிறது.
பிறந்தநாள் காணும் நண்பனைக்
கட்டி அணைத்து வாழ்த்துகிறேன்
நினைவு நாள் நண்பனின்
நினைவுகளை அணைக்கிறேன்
அது கொழுந்துவிட்டு எரிந்து
என்னைச் சுடுகிறது.
வீடு திரும்பித் தனிமையில் இருக்கும்போது
என் இரு கண்களில்
ஒரு கண் அழவும்
மறுகண் புன்சிரிக்கவும்தானே வேண்டும்?
குழப்பத்தோடு உறங்கிப் போகிறேன்
என் உடலின் ஒரு பாதி கரைந்து போய்
மறுபாதி மட்டும்
கனவில் தெரியத்
திடுக்கிட்டு விழிக்கிறேன்.


( #முக்கோண_மனிதன் தொகுதியில் இருந்து)

#