பால்ய நண்பன்.
கிராமத்தில் இருந்தவரை
என் சுக துக்கங்களுக்கு
சாட்சியாய் இருந்தவன்
துவக்கப்பள்ளி காலத்து
விளையாட்டுகளுக்கும்
வீம்பு வீராப்புகளுக்கும்
சாட்சியாய் இருந்தவன்.
உயர்பள்ளி பருவத்தில்
என் மீது புன்னகையுடன்
வீச பட்ட பார்வைகளுக்கு
சாட்சியாய் இருந்தவன்.
கல்லூரி நாட்களிலே
கண்களால் மட்டும் பேசி
கனவுகளை பகிர்ந்ததுக்கு
சாட்சியாய் இருந்தவன்.
கணவனுடன் செல்வதற்கு
கடந்து போன தருணம்
கலங்கிய கண்களுக்கு
சாட்சியாய் இருந்தவன்.
கள்ளருந்தி கவிழ்ந்ததற்கு
மனம் தேறி மீண்டதற்கு
புலம் பெயர்ந்து சென்றதற்கு
சாட்சியாய் இருந்தவன்.
இன்றென் குடும்பத்துடன்
குலதெய்வ வழிபாட்டிற்கு
ஊருக்குள் நுழைகையில்
அந்த பாலக்கட்டையை
திரும்பி பார்த்தேன்
சிறிது சிதிலங்களோடு
எனது பால்ய நண்பன்
அன்று போலவே இன்றும்
எனது மகிழ்ச்சிக்கு
சாட்சியாக நின்றுகொண்டு
இருந்தான்.
அன்று போலவே இன்றும்
மௌன சாட்சியாக.
