இராய செல்லப்பா /அவசரமோ அவசரம்

வெளிநாட்டுப் பயணம் என்பதால் மூன்றுமணி முன்னதாக விமான நிலையத்திற்கு வந்துவிட வேண்டும் என்பது பொதுவான விதி.
தரைத்தளத்தில் டாக்சி வந்துவிட்டது. டிரைவர் வந்து ‘சார்’ என்று கதவைத் தட்டினார்.
விமானத்தில் பயணிகளுக்கு ஆளுக்கு இரண்டு பெட்டிகள்- ஒவ்வொன்றும் 23 கிலோ அனுமதி உண்டு. டிரைவர் அந்த நான்கு பெரியசூட்கேஸ்களையும் உருட்டிக்கொண்டு லிப்ட் வழியாகக் கீழிறங்கினார்.
தவிரவும், ஆளுக்கொரு கைப்பெட்டி 7 கிலோ அனுமதி உண்டு. (லேப்டாப் பெட்டியும் பெண்கள் என்றால் கைப்பை ஒன்றும் கொண்டுசெல்லலாம்.) சங்கடம் என்னவென்றால், எவ்வளவு முன்னதாக அடுக்க முயன்றாலும், கிளம்பும் வரை அந்தப் பெட்டியில் எல்லாவற்றையும் அடுக்கிவிட்ட சந்தோஷம் சிலருக்கு ஏற்படுவதில்லை. (சிலர் என்றால் யாரென்று உங்களுக்குப் புரியாதா?)
கைப்பெட்டியில் கூரான பொருட்களுக்கு அனுமதி இல்லை. ஊக்கு, கொண்டை ஊசி, ரேஸர், கத்தரிக்கோல் மட்டுமின்றி, பல் குத்தும் குச்சியும் கூட அதில் இடம்பெறக் கூடாது. விபூதி, குங்குமம், சிறிய பாட்டில் தேங்காயெண்ணெய் கூடத் தவிர்க்கப்பட வேண்டும். எனவே, கைப்பெட்டியைத் தோராயமாக அடுக்கியபிறகு எல்லாப் பொருட்களையும் வெளியே எடுத்து, மேற்படி அனுமதிக்கப்படாத பொருட்கள் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். இல்லையென்றால் செக்-இன் போது அனாவசியமான காலதாமதம் ஏற்படலாம். அல்லது நம் பெட்டியை உலகத்தின் சுவாரஸ்யமான பார்வைக்குத் திறந்துகாட்ட நேரலாம்.
ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க முடிவதில்லை. ஒருமுறை செக்-இன் திரையில் என் மனைவியின் கைப்பையில் ஒரு ஊக்கு இருப்பது தெரிந்தது. உடனே அவர் அழைக்கப்பட்டு, அந்த ஊக்கை எடுத்தெறியுமாறு கோரப்பட்டார். கோபத்தை வெளிக்காட்டாமல் அம்மையாரும் அப் பையைத் திறந்து எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாக எடுத்து டிரேயில் வைத்தார். ஆனால் அந்த ஊக்கு மட்டும் அகப்படவேயில்லை. பொறுமையிழந்த அதிகாரி, காலிப்பையை வாங்கி மீண்டும் ஸ்கேன் மெஷினில் நுழைத்தார். ஊக்கு அதே இடத்தில் தெரிந்தது. வெறுப்புடன் அவர் பையை நம்மை நோக்கி வீசினார்.
பொதுவாகவே பெண்களின் கைப்பைகள் உள்ளே பல அடுக்குகளைக் கொண்டிருக்கும். மெல்லிய துணியாலான அடுக்குகள். அதில் ஏதோ இரண்டு அடுக்குகளின் நடுவே எப்போதோ நுழைந்துவிட்ட ஊக்கு அது. கைவிட்டுத் துழாவினால் தட்டுப்பட மறுத்தது. வேறு வழியின்றி அங்குலம் அங்குலமாகத் துழாவியதில் தட்டுப்பட்டது. அந்த இடத்தை உள்ளிருந்தே சிறிது நறுக்கியபின் ஊக்கை எடுக்க முடிந்தது. அம்மையார் வெற்றிப் புன்னகை புரிந்தபோது கியூவில் நாங்கள் இருவர்தான் மீதியிருந்தோம்!
இந்த முறை அப்படிப்பட்ட சங்கடத்திற்கு இடம் தரவேண்டாம் என்று இருவரும் முடிவுசெய்தோம். (அதாவது அம்மையார் முடிவுசெய்தார், நான் ஆமோதித்தேன்). பெட்டியை முழுமையாக ஆராய்ந்து மூடினோம். டாக்சியில் ஏறினோம்.
செக்-இன் வந்தது. லேப்டாப். மொபைல். பெல்ட், ஷூ, மின் கருவிகள், ரிமோட் மவுசுக்கு உள்ளிருந்த பேட்டரி, என்று எல்லாம் தனித்தனியாக எடுத்து வைத்தோம். கைப்பெட்டி தனியாக ஸ்கேனுக்கு நடந்தது. அப்பாடா, எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடிந்துவிட்டது. நிம்மதியாக ஒரு காப்பியோ டீயோ சாப்பிடலாம் என்று கடையை நோக்கி நடந்தோம். அப்போதுதான் அம்மையாருக்கு திடீர் சந்தேகம் வந்தது.
“எல்லாம் சரி, உங்களுக்கு ஒன்று, எனக்கு ஒன்று என்று இரண்டு கைப்பெட்டி இருக்கவேண்டுமே, இரண்டாவது எங்கே?” என்றார்.
“அந்த இரண்டாவது தான் இது” என்று வடிவேலு பாணியில் பதிலளித்தேன்.
கோபத்தீயில் முகம் சிவந்தவராக, “இது உங்கள் பெட்டி, என்னுடைய பெட்டி எங்கே?” என்றார்.
இரண்டுமே கறுப்புப் பெட்டிகள். பார்க்க வித்தியாசம் அதிகம் இருக்காது. ஒருவேளை டாக்சியிலேயே தங்கிவிட்டதோ?
அலறி அடித்துக்கொண்டு டிரைவருக்கு போன் செய்தேன். எதுவும் இல்லையே என்றார். அப்படியானால் வீட்டிலேயே தங்கி விட்டதோ? எப்படிக் கண்டுபிடிப்பது?
மண்டையைக் கசக்கியதில் ஓர் இரகசிய வழி நினைவுக்கு வந்தது. அதைப் பயன்படுத்தியதில், ஒரு பெட்டி வீட்டிலேயே விடப்பட்டது தெரிந்தது. அதன் உள்ளே என்னென்ன இருந்தன என்பதும் துல்லியமாகத் தெரிந்தது. அப்பாடா, ஒன்றிரண்டைத் தவிர முக்கியமான பொருள் எதுவும் அதில் இல்லை என்று நிம்மதி ஏற்பட்டது.
“காப்பியா, டீயா?” என்றார் கடைக்காரி.
‘ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்’ என்றது அம்மையாரின் மனக்குரல்.
”எல்லாம் உங்களால்தான். எதில் எடுத்தாலும் அவசரம். அவசரம், அவசரம். இதுவரை எத்தனை முறை பயணம் போயிருக்கிறோம், ஒருமுறையாவது இப்படி ஆனதுண்டா? பொறுப்பே கிடையாது” என்று சொல்லிக்கொண்டே போனார் என்பதை எழுதவும் வேண்டுமா?

விமானத்தில்அமர்ந்த பிறகும் இதுவே ஹாட் டாபிக் ஆக அமைந்துவிட்டது. நல்லவேளையாக, இங்கிருந்து ஒரு நண்பர் குடும்பம் சென்னைக்குச் சென்று உடனே திரும்புவதாகத் தகவல் தெரிந்தது. கவலைப்படாதீர்கள், நாங்கள் எடுத்துக்கொண்டு வருகிறோம் என்று அவர்கள் உறுதியளித்தார்கள். நமக்கும் ஒரு பிசிராந்தையார் இருக்கமாட்டாரா என்ன?

4 Comments on “இராய செல்லப்பா /அவசரமோ அவசரம்”

Comments are closed.