
சிந்தனை வெளிக்குள்
புகுந்து
எண்ண நூலால்
வலை பின்னிக்கொண்டு
நகர்கிறேன் சிலந்தியாய்…
என்னைக் கடந்து
மனிதர்கள் முதல்
வாகனங்கள் வரை
விரைந்தபடி
கடக்கின்றனர்…
சட்டென்று
தலையில்
விழுந்து
தோளில்
சரியும் வேப்பம்பூ
பறவையின் சிறகைப்போல்
என் திசை
திருப்பி
ஏதோவொரு
திசைக்குள்
ஒளி காத்திருப்பதை
சொல்லாமல்
சொல்லிவிடுகிறது..
இப்போது
அந்தப்பூவின்
மீது
அமர்ந்து
ஒரு திசையறியும் பறவையாய்
பறந்துகொண்டிருக்கிறேன்
என் உள்ளங்கைக்குள் ஓடுகிறது
ஒரு தீர்க்கரேகை
