எங்கள் ஊருக்கு அருகில்
சர சர வென மிதிபடும்
சருகுகளை கடந்தால்
காட்டுக்குள் தெரியும்
ஒரு சிவன் கோவில்.
பூசாரியின் வசதிக்கேற்ப
ஒரு வேளைதான் பூசை
அவருக்கு இது போல
கையில் எட்டு கோவில்கள்
சுற்று வட்டாரத்தில்.
கோவிலின் முன் பொட்டல்வெளி
அதில் எப்பவோ நடக்கும் விழா
அதுவரை எங்களுக்கு அதுதான்
சேப்பாக் கிரிக்கெட் மைதானம்
பள்ளி விட்டதும் ஓடும் இடம்.
ஒருநாள் ஊருக்குள்
போலிஸ் வந்தது
பூசாரியும் ஊர் பெருசுகளும்
கோவில் சிலை திருட்டு
போய் விட்டதென்று
தந்த புகாரை விசாரிக்க.
ஏதும் துப்பு கிடைக்குமா என்று
எங்களையும் துருவி துருவி
கேள்விகள் கேட்டனர்
ஆள் நடமாட்டம் எதையும்
பார்த்தீர்களா என்று
பொதுவாகவும் கேட்டனர்
தனி தனியாகவும் கேட்டனர்
எங்கள் எல்லோர் பதிலும்
இல்லை என்பதுதான்.
கோவிலுக்கு பின்புறம்
தினமும் சந்தித்து
வாய்க்காங்கர தெரு
முத்தண்ணனும்
சன்னதி தெரு
மல்லிகா அக்காவும்
பேசிக்கொள்வது பற்றி
நாங்கள் மூச்சே விடவில்லை.
()
