கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/அல்வாவும் மத்திய பட்ஜெட்டும்……

ஆசிரியர் கலைமகள்……………..

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக அல்வா கிண்டுவது வழக்கமாக இருந்து வருகிறது இது ஏன்? என்று என்னிடம் தேஜஸ் ஃபவுண்டேஷன் அறங்காவலரும், பேராசிரியருமான திரு கே ஜி ரகுநாதன் அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்டார்……

இப்பொழுது நாங்கள் மதுரையை நோக்கி ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.. கலைமகள் தீபாவளி மலர் தயாரிப்பு சம்பந்தமாக சில வேலைகள் செய்வதற்காக………

பிரிட்டிஷ் காரர்கள் காலத்திலிருந்து அல்வா கிண்டும் பழக்கம் இருந்து வருகிறது. இந்தியாவில் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு முன்பாக இனிப்பு கொடுப்பது வழக்கம் என்பதை அறிந்த வெள்ளைக்காரர்கள் அல்வா(வடக்கே கேசரி) கிண்டுவது மங்களகரமானது என முடிவு செய்தார்கள்.

பாலக்காட்டு சமையல்காரர்களை வைத்து அல்வா கிண்டும் பணி ஆரம்ப காலத்தில் நடைபெற்றது. இப்பொழுது வடநாட்டில் உள்ள இனிப்பு தயாரிப்பாளர்களை வைத்து இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது………

இந்த ஆண்டும் இந்த அல்வா கிண்டும் பணி சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. அல்வா கிண்டிய பிறகு பட்ஜெட்டை அச்சு அடிக்கும் பணியில் ஈடுபடும் எந்த ஊழியரும் அந்தக் கட்டடத்தை விட்டு வெளியே கிளம்ப முடியாது. பொது வெளியில் பட்ஜெட் ரகசியங்கள் கசிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு!!

அல்வா என்றால் அது திருநெல்வேலி அல்வா தான் அதுவும் இருட்டுக்கடை அல்வா தான் பலரும் விரும்புவது…..”அல்வா கொடுக்கிறான் ” என்பது… டிமிக்கி கொடுக்கிறவர்களைப் பற்றி நகைச்சுவையாகச் சொல்லப்படும் ஒரு சொற்றொடர் ஆகும்! ஒரு தேசத்தின் பட்ஜெட் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும். அல்வா போல் சுவையாக பொது மக்களுக்கு பல சௌரியங்களுடன்இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு……