ம.சக்திவேலாயுதம் கவிதை

வயது வித்தியாசம்
பார்க்காமல் வருகிறது
பல கவலைகள்..
வயது வித்தியாசம்
பார்த்து வருகிறது
சில கவிதைகள்..

ஒரு படிக் கவலைகளால்
கனவுகளெல்லாம்
கண்ணீராய் ஓடுகிறது..
ஒரு பிடிக் கனவுகளால்
கவிதைகளெல்லாம்
கானல்நீராய் ஓடுகிறது..

ஒரு கவலை
மனசெல்லாம் அப்பிக் கொண்டால்
துயரக் கவிதை பிறக்கிறது..
ஒரு கவிதை
மனசெல்லாம் படிந்து கொண்டால்
துயரமே பிறக்கிறது..

கவலைகள் நம்மை எப்போதும்
அழச் செய்கிறது…
எப்போதாவது எழுச் செய்கிறது..
கவிதைகள் நம்மை எப்போதும்
எழச் செய்கிறது…
எப்போதாவது அழச் செய்கிறது..

கவலைகள் நிறைவாக
நம்மை
குழந்தைகளாக்கி விடுகிறது..
கவிதைகள் நிரம்ப
நம்மை
பொம்மைகளாக்கி விடுகிறது..

சமநிலையற்ற மனதிற்கு
கவலைகளோ..கவிதைகளோ..
எது வந்தாலும் சரி..
எப்போது வந்தாலும் சரி..
இரண்டுமே நம்
வாழ்க்கைக் குழந்தைகள்!